

சீதாராமன்
முன்பெல்லாம் வீடு என்பதெல்லாம் தனி மனை வாங்கி ஒரு கனவு இல்லத்தை உருவாக்குவதுதான். ஆனால் சமீபகாலமாக நகர மக்கள் தொகை பெருகிவருகிறது. அதனால் நகர வீட்டுத் தேவையை ஈடுசெய்ய அடுக்குமாடிக் கலாச்சாரம் வளர்ந்து பரவலாகி இருக்கிறது. சென்னை மட்டுமல்லாது, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி போன்ற நகரங்களிலும் இந்த அடுக்குமாடிக் குடியிருப்பு வீட்டுக் கலாச்சாரம் விரிந்திருக்கிறது.
அதனால் வேலை, தொழில் எனப் பல காரணங்கள் பொருட்டு நகரங்களில் இருப்பவர்கள் அடுக்குமாடிக் குடியிருப்பு வீடு வாங்குவதுதான் பொருத்தமாக இருக்கும். இப்படி அடுக்குமாடிக் குடியிருப்பு வீடு வாங்கும்போது சில விஷயங்களை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அதாவது அடுக்குமாடி வீடு வாங்கும்போது நாம் அது தொடர்பான ஆவணங்களை ஆராய வேண்டும்.
முக்கியமாக அந்த அடுக்குமாடிக் குடியிருப்பு மனையின் மூலப் பத்திரத்தின் அசல் யார் பெயரில் இருந்தது, அசல் பெயரிலிருந்து யார் பெயருக்குச் சொத்துமாறியுள்ளது, கட்டிடம் யார் கட்டிக் கொடுத்தது, வரைபடம், திட்ட அனுமதி வாங்கியிருக்கிறார்களா என்பதையெல்லாம் கவனமாகப் பார்க்க வேண்டும். அதுபோல் மின் கட்டண இணைப்பு, தண்ணீர் இணைப்பு யார் பெயரில் இருக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும்.
அதை தகுந்த ஆவணங்கள் காண்பித்து உங்கள் பெயரில் மாற்றிக் கொள்ள வேண்டும். இதை உடனடியாகச் செய்வது நல்லது. பின்னால் பார்த்துக் கொள்ளலாம் எனத் தள்ளிப் போடக் கூடாது. மேலும் தண்ணீர்க் கட்டணம், மின் கட்டணம் ஆகியவற்றில் செலுத்த வேண்டிய தொகை நிலுவையில் உள்ளதா என்பதை வீடு வாங்கும் முன் கவனிக்க வேண்டும்.
அடுத்து நாம் பார்க்க வேண்டிய ஆவணம் பிரிக்கப்படாத மனை அளவு குறித்தது. அடுக்குமாடிக் குடியிருப்பு அமைந்துள்ள மனையின் உரிமை அங்குள்ள வீட்டு உரிமையாளர் அனைவருக்கும் உண்டு. அதைப் பிரித்து அளிக்கக்கூடிய அளவுதான் பிரிக்கப்படாத மனை அளவு (Undivided share – UDS).இது சரியாக பிரிக்கப்பட்டிருக்கிறதா என்பதை பொறியாளர்களைக் கொண்டு மதிப்பீடு செய்து கொள்ள வேண்டும். கட்டுநர் சொல்லும் அளவை ஒரு முறை நாமும் பரிசோதித்துப் பார்த்துக் கொள்ள வேண்டும். இதில் கவனக் குறைவாக இருந்தால் பின்னால் சிக்கல் வர வாய்ப்புள்ளது.
அடுக்குமாடி வீட்டில் அனைத்துத் தளங்களுக்கும் கட்டிட அனுமதி பெறப்பட்டிருக்கிறதா என்று ஆவணங்களைச் சரிபார்த்து உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். சில சமயங்கள் 2 அல்லது 3 மாடி வீடு கட்ட அனுமதி வாங்கியிருப்பார்கள். ஆனால், கூடுதலாக ஒரு மாடியை கட்டிவிடுவார்கள். வரைபடங்களில் அது தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கும். எத்தனை வீடுகள் அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ளன என்று பாருங்கள். ஒவ்வொரு வீட்டுக்கும் நிச்சயம் ஒரு சமையலறைதான் இருக்கும். அதை எண்ணிப் பார்ப்பது போன்ற விஷயங்களிலும் கவனம் செலுத்த வேண்டும்.
அடுக்கு மாடிக்குடியிருப்பு சம்பந்தமான எல்லா ஆவணங்களின் அசல் பத்திரங்கள், விற்பவரிடம் இருக்கிறதா எனப் பார்க்க வேண்டும். சிலர் அசல் பத்திரத்தை வங்கியில் அடமானம் வைத்துக் கடன் வாங்கி இருப்பார்கள். ஆனால், பத்திரப்பதிவு அலுவலகத்தில் நகல் பத்திரம் வாங்கி விற்பனை செய்வார்கள். எனவே அசல் பத்திரத்தைக் கண்ணால் பார்த்த பிறகு முடிவு எடுங்கள். அசல் பத்திரம் தொலைந்துவிட்டது என்று கூறினால் அதுதொடர்பாக காவல் நிலையத்தில் கொடுத்த புகார், அந்தப் புகார் எண் ஆகியவற்றைக் கேட்டுப் பாருங்கள்.
பத்திரப்பதிவு அலுவலகத்தில் என்ன காரணம் சொல்லி நகல் பத்திரம் வாங்கப்பட்டிருக்கிறது என்பதையும் கவனிக்க வேண்டும். பவர் ஆஃப் அட்டர்னி அதிகாரம் வைத்திருக்கும் நபரிடமிருந்து ஒரு சொத்தை வாங்கும்போது, அந்த அதிகாரம் இன்னும் செயல்பாட்டில் இருக்கிறதா எனபதை கவனிக்க வேண்டும்.
அதிகாரம் கொடுத்தவர் உயிருடன் இருக்கிறரா என்பதையும் விசாரித்து அறிய வேண்டும். சில நேரங்களில் அதிகாரம் கொடுத்தவர் அதை ரத்து செய்திருக்கலாம். அதை மறைத்து சொத்தை விற்க முயல்வார்கள். அப்படியானல் பின்னல் சிக்கல் வர வாய்ப்பு உண்டு. இதுபோன்ற பித்தலாட்டத்தைத் தவிர்க்க, தற்போது அதிகாரம் ரத்தானால் அந்த விவரம் அசல் அதிகாரப் பத்திரத்தின் பின்புறத்தில் குறிப்பிடப்படுகிறது. அதை கவனிக்க வேண்டும்.
அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டி முடிக்கப்பட்டதற்குக் கட்டுமான நிறைவுச் சான்றிதழைக் கட்டுநர் வாங்கி வைத்திருக்கிறாரா என்பதையும் கேட்டு வாங்க வேண்டும். சில இடங்களில் கட்டுநர்கள் கட்டுமானச் சான்றிதழ் வாங்கித்தராமல் விட்டுவிடுவார்கள். வீடு வாங்குபவர்களும் கேட்காமல் விட்டுவிடுவார்கள்.
ஒரு கட்டுநர் கட்டுமான நிறைவுச் சான்றிதழ் வாங்கித் தரவில்லை என்றால், கட்டிய வீட்டில் விதிமுறை மீறல் இருக்கலாம் என்று அர்த்தம் கொள்வது கட்டுமானத் துறையில் வழக்கம். எனவே கட்டுமான நிறைவுச் சான்றிதழ் அவசியமானது.அடுக்குமாடிக் குடியிருப்பு வீடு வாங்கும்போது இவற்றையெல்லாம் கவனிக்க வேண்டும்.