Published : 23 Nov 2019 12:39 PM
Last Updated : 23 Nov 2019 12:39 PM

வாஸ்து சாஸ்திரம் என்ற ஒன்று இருக்கிறதா?

ஜீ.முருகன்

வாஸ்து சாஸ்திரம் சொல்லும் பெரும்பாலானவர்கள் சொல்வது “அக்னி முலையில் (தென்கிழக்கில்) சமையலறையை வைக்க வேண்டும்” என்று. அதே நேரம், “அந்த மூலையில் மாடிப்படி கட்டக் கூடாது. அதாவது வளர்க்கக் கூடாது” என்று சாஸ்திரம் சொல்லும் ஒருவர் சொன்னார்.

இன்னொருவரோ, ‘அக்னி மூலையில் மாடிப்படி அமைக்கலாம். ஆனால் கீழிருந்து தெற்கே ஏறி திரும்பி வடக்கு பார்த்து மாடியில் முடிய வேண்டும்” என்றார். “அக்னி மூலையில் சாக்கடைக் குழித் தோண்டக் கூடாது. அதாவது தண்ணீர் தேங்கக் கூடாது, அதை ஈசானி மூலையில்தான் (வடகிழக்கில்) அமைக்க வேண்டும்” என ஒருவர் சொன்னார்.

இப்போது நாங்கள் கட்டியுள்ள வீட்டின் வாசல், மையத்தில் இல்லாமல் வலது பக்கமாக நகர்ந்திருக்கும். காரணம் புதன் பாகத்தில் வாசல் வைக்க வேண்டும் என்பதால். நடுவில் உள்ள குரு பாகத்தில் வாசல் வைத்தால் மாமிசம் சாப்பிடக் கூடாது என எனது மாமா ஒருவர் அறிவுறுத்தியதால் புதன் பாகத்துக்கு நகர்த்தினேன். மாமிசம் இல்லாமல் ஒரு வாழ்க்கையா?

நான் சந்திக்கும் 90 சதவீதமான பேர் தங்களை ஒரு கட்டிடப் பொறியாளர்கள் போலவோ, வாஸ்து சாஸ்திரிகள் போலவோதான் எண்ணிக்கொண்டு ஆலோசனை வழங்குவார்கள். இப்படியானவர்களிடம், “1894ஆம் வருஷம் வெளிவந்த செஞ்சி ஏகாம்பர முதலியார் எழுதிய ‘நூதன மனைகுறி சஸ்திரம்’ படிச்சிருக்கீங்களா?’ என்று கேட்பேன். அவர்கள் “இல்லை…”

எனத் தயக்கத்துடன் தலையாட்டுவார்கள். “நீங்க சொல்ற எதுவும் அதல இல்லே. அவுங்க சொன்னாங்க இவுங்க சொன்னாங்கன்னு எதுக்கு மத்தவங்கள குழப்புறீங்க” என்பேன். அவர்கள் அமைதியாகிவிடுவார்கள். அதை நானே முழுதாகப் படித்ததில்லை என்பதே ரகசியமான உண்மை.

நம் பாரம்பரிய வீடுகள் அவை கிழக்கே பார்த்திருந்தாலும் மேற்கே பார்த்திருந்தாலும் சமையல் அறைத் தோட்டத்துப் பக்கம்தான் இருக்கும். அக்னி மூலை வாயு மூலை எல்லாம் அப்போது இல்லையா என்ன?

100 சதவீதம் வாஸ்து சாஸ்திர விதிகளை (அப்படி ஒன்று இருக்குமானால்) பின்பற்றிதான் நான் வீடு கட்டுவேன் என நீங்கள் அடம்பிடித்தால் (நீங்கள் சம்பாதித்த பணத்தைக் கொண்டு) உங்கள் வசதிக்குத் தேவைப்படும் உங்களுக்கு விருப்பமான ஒரு வீட்டைக் கட்டி முடிக்க முடியாது என்பதே 101 சதவீத உண்மை.

உங்கள் விருப்பத்துக்குக் கட்டிய வீட்டில் நுழையும் ஒருவர் அந்த அறை இங்கே இருக்கக் கூடாதே எனச் சொல்வார் என்றால் அவர் இங்கிதம் இல்லாத, உங்கள் வாழ்க்கைப் போக்குக்கு விரோதமான ஒருவராகவே இருப்பார். அவரைப் பற்றி நீங்கள் ஏன் அக்கறை கொள்ள வேண்டும், அவர் பேச்சைக் கேட்டு நீங்கள் ஏன் பதற்றம் அடைய வேண்டும், ஏதாவது கெட்டது நடந்தால் இதனால்தான் அது நடந்ததோ என ஏன் கலக்கமுற வேண்டும்?

வீடு என்றால் நல்லதும் கெட்டதும் நடந்தே தீரும். இப்படி வீடு கட்டினால் அதில் வசிக்கும் யாரும் நோய்வாய் படமாட்டார்கள் சாக மாட்டார்கள் என்று எந்த வாஸ்து சாஸ்திரியாவது உறுதி தருவார்களா? தாயின் வயிற்றுக்குள் இருக்கும் ஒரு குழந்தை காலம் கனிந்த பின் சுகப்பிரசவத்தில் பிறக்கிறது.

இன்னொரு தாய் தன் குழந்தை நல்ல நேரத்தில் பிறக்க வேண்டும் என்பதற்காக ஜோசியர்கள் கணித்த நல்ல நேரத்தில் அறுவைச் சிகிச்சையில் (வெளியே எடுக்கப் படுகிறது) பிறக்கிறது. இதில் எந்தக் குழந்தைக்கு கடவுள் கரிசனம் காட்டுவார்?

ஒரு தெளிவான திட்டத்தோடு வீடு கட்டத் தொடங்கிவிட்டால் இந்த அதி மேதாவிகளின் இலவச ஆலோசனைகளை (நம் மூளைக்கு எந்தச் சேதமும் இல்லாமல்) ஒரு காதில் வாங்கி மறு காதில் வெளியேற்றிவிட்டு நம் வேலையைப் பார்ப்பதே உத்தமம்.

கட்டுரையாளர், சிறுகதை எழுத்தாளர்
‘கண்ணாடி’ உள்ளிட்ட
நூல்களின் ஆசிரியர்
தொடர்புக்கு: gmuruganjeeva@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x