

துபாய், உலகின் மிகப் பெரிய வணிக மையம். ஐரோப்பிய நாடுகளும்கூட வணிகத் தொடர்புகளுக்காக துபாயை நம்பியுள்ளன. துபாயின் மற்றுமோர் சிறப்பு வானுயர் கட்டிடங்கள். அந்தப் பட்டியலில் இணையவுள்ள இன்னுமோர் புதிய கட்டிடம் மேடன் டவர். துபாயில் 2009-ம் ஆண்டு கட்டப்பட்ட புர்ஜி கலிபா கட்டிடம் இதுவரை அந்நகருக்குப் பெருமை சேர்த்துக் கொண்டிருக்கிறது. இதன் உயரம் 829.8 மீட்டர். உலகின் மிக உயரமான கட்டிடம் இது.
மேடான் ஒன் என்னும் பெயரிடப்பட்ட இந்தத் திட்டம் 711 மீட்டர் உயரம் அளவு கட்டப்படவுள்ளது. இந்தக் கட்டிடத்துக்குள் 350 அறைகள் கொண்ட ஐந்து நட்சத்திர விடுதி ஒன்று உள்ளது. இது தவிர 900 அடுக்குமாடிக் குடியிருப்பு வீடுகள் உருவாக்கப்பட உள்ளன. மேலும் இந்தக் கட்டிடத்தில் உலகின் மிக உயரிய கண்காணிப்பு மையம் அமையவுள்ளது. கட்டிடத்தின் 655 மீட்டர் உயரத்தில் இது உருவாக்கப்படவுள்ளது. அதுமட்டுமல்லாது வானுயர் உணவு விடுதி 675 மீட்டர் உயரத்தில் உருவாக்கப்படவுள்ளது. இது உருவாக்கப்படும் பட்சத்தில் உலகின் மிக உயரமான உணவு விடுதி இதுவாகத்தான் இருக்கும் எனச் சொல்லப்படுகிறது.
இவை அல்லாது பொழுதுபோக்குக் கூடங்கள், அங்காடிகள், 300க்கும் மேற்பட்ட உணவு விடுதிகளும் இதில் அமையவுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் 2020-க்குள் முடிவடையும்.