

வீடு குறித்த கனவோடு உள்ள சில லட்சங்களை மட்டுமே சேமிப்பில் வைத்துள்ள அல்லது கடன் வாங்கும் திறனுள்ள கீழ் நடுத்தர மக்களை வீட்டுமனை வாங்க வைப்பதற்காக நம் ரியல் எஸ்டேட்காரர்கள் சுமார் 20 அடி அகலம் 50 அடி நீளம் கொண்ட குறுகிய மனைகளையே பெரும்பாலும் விற்பனை செய்கிறார்கள். அதிகம் பணம் கையில் வைத்திருந்தால் அடுத்தடுத்து இரு மனைகளை வாங்கிக் கொஞ்சம் தாராளமாகக் கட்டிக்கொள்ளலாம்.
இப்படிக் குறுகலான மனை ஒன்றை வாங்கும் ஒருவர் இரண்டு பக்கமும் ஜன்னல் வைத்துக் காற்றோட்டமும் வெளிச்சமும் உள்ள ஒரு வீட்டைக் கட்டுவது என்பது இயலாத காரியம். ஒரு பக்கம் ஜன்னல் அமைத்தால்கூடப் போதும். ஜன்னல் வைக்க வேண்டுமானால் குறைந்தது 2 அடியாவது பக்கத்தில் இடம் விட வேண்டும். ஆனால், 2x50 என்றால் 100 சதுர அடி இடம் இதற்காக ஒதுக்க வேண்டும். பெரும்பாலானவர்கள் அதை இழக்க விரும்புவதில்லை. மொத்த அகலத்திலும் கட்டிடத்தை எழுப்பி வீட்டைக் கட்டிக்கொள்கிறார்கள்.
பக்கத்தில் வீடு கட்டுபவரும் அதேபோல் நெருக்கி வீட்டைக் கட்டுவார். நம் நகரத் தெருக்களில் உள்ள வீடுகளின் அமைப்பைப் பார்த்தால் பேருந்தில் மூன்று பேர் இருக்கையில் நான்கு பேர் உட்கார்ந்தால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கும். இடைவெளி, காற்றோட்டம், மரம், செடி, கொடி எதுவும் இருக்காது. இது பரிதாபகரமான வாழ்க்கைச் சூழல் என்றே சொல்லலாம். இயற்கையான காற்றோட்டம் இல்லாமல், வெளிச்சம் இல்லாமல், வானத்து நட்சத்திரத்தைப் பார்க்காமல் ஒரு வீடு இருந்தால் போதும் என்ற எண்ணம் பலருக்கும்.
அகலம் குறைவாகவும் நீளம் அதிகமாகவும் உள்ள ஒரு மனையை வாங்குபவர் வீட்டைக் கட்டும்போது ஒரே நீளத்தில் கட்டாமல் இடையில் குறைந்தது 5 அடி அகலம் கொண்ட வான்வெளி வைத்துக் (சிட் அவுட்) கட்டலாம். உதாரணமாக இரு ரயில்வே கம்பார்ட்மெண்டுகளுக்கு இடையில் இருக்கும் இடைவெளியைப் போல் ஒரு வெளியை விடலாம். இதனால் அகலத்தையும் இழக்கத் தேவையிருக்காது. அதாவது வீட்டின் நடுப்பகுதி 5x20 என்றால் இங்கேயும் 100 சதுர அடி வீணாகிறதே என்று கேட்கலாம். ஆனால் இந்த 100 சதுர அடி ஓரளவுக்குக் காற்றையும் வெளிச்சத்தையும் தருவதோடு அந்தப் பகுதியை மற்ற வேலைகளுக்குப் (Working Area) பயன்படுத்தலாம்.
அப்பகுதியைப் பார்த்து இரண்டு பக்கமும் ஜன்னல்களை வைத்துக்கொள்ளலாம். நாற்காலி போட்டு உட்கார்ந்து பேப்பர் படிக்கலாம், மழையை ரசிக்கலாம், வானத்து நட்சத்திரங்களைப் பார்க்கலாம். செடிகள், டெரகோட்டா வடிவங்கள் வைத்தால் வீடு கூடுதல் அழகாக மாறிவிடும்.
பெரிய வீடுகளில்தான் இடையில் சிட் அவுட் அமைக்க முடியும் என்ற எண்ணத்தை விடுத்து இது போன்ற குறுகிய வீடுகளிலும் அமைக்கப் பாருங்கள். இதை பக்கத்து வீட்டுக்காரர்களுக்காகவோ, எதிர் வீட்டுக்காரர்களுக்காகவோ செய்யப் போவதில்லை, உங்களுக்காகத்தான்.
- ஜீ.முருகன், சிறுகதை எழுத்தாளர்
‘கண்ணாடி’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்
தொடர்புக்கு: gmuruganjeeva@gmail.com