

சிலர் கட்டிய வீட்டை வாங்குவார்கள். சிலர் மனை வாங்கித் தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப வீடுகட்டுவார்கள். சிலர் மனையை முதலீட்டுக்காக வாங்குவார்கள். மனை வாங்குவதற்கு முன்பு பல விஷயங்களை நாம் கவனிக்க வேண்டும்.
முதலில் நாம் வாங்கப் போகும் மனைக்கு உரிய பட்டாவின் நகலை வாங்கிப் பார்க்க வேண்டும். பட்டாவோடு நின்றுவிடக் கூடாது. சிட்டா, அடங்கல் ஆகியவற்றையும் கவனமாகப் பார்க்க வேண்டும். இதில் சிட்டா என்பது நிலத்தின் பரப்பளவு, அதன் பயன்பாடு யாருடைய கட்டுப்பாட்டில் நிலம் உள்ளது என்பதைக் காட்டும் ஆவணம். அடங்கல் என்பது நிலத்தின் பரப்பு, பயன், கிராமத்தில் குறிப்பிட்ட எந்த இடத்தில் உள்ளது என்பதைச் சொல்லும் ஆவணம். இந்த ஆவணங்களைக் கவனமாகப் பார்க்க வேண்டும்.
மனையை விற்பவர் பற்றிய விவரத்தை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். விற்பவர் பெயரில்தான் மனை இருக்கிறது என்பதற்கு ஆதாரமாக வில்லங்கச் சான்றிதழ் வாங்கிப் பார்க்க வேண்டும். வில்லங்கச் சான்றிதழ் குறைந்தபட்சம் 10 ஆண்டுகளுக்கு மேல் எடுத்துப் பார்த்தால்தான் சொத்து யார்யார் பெயருக்கு மாறி வந்திருக்கிறது என்பது தெரியும்.
கடைசியாக, இப்போது மனையை விற்பவர் பெயர் அதில் இருக்கிறதா என்பதையும் அறிந்துகொள்ள முடியும். மேலும், மனை ஏதேனும் அடமானம் வைக்கப்பட்டிருக்கிறதா என்பதையும் வில்லங்கம் எடுத்துப் பார்ப்பதன் மூலம் தெரிந்துகொள்ள முடியும். இந்தச் சான்றிதழ் மூலம் ஒருவர் தவறாகவோ போலி ஆவணம் மூலமோ மனையை விற்கவில்லை என்பதையும் உறுதி செய்துகொள்ள முடியும்.
விளை நிலங்களை வாங்கும்போது அதை மனைகளாக மாற்ற முறையாக அனுமதி வாங்கப்பட்டிருக்கிறதா என்பதையும் கவனிக்க வேண்டும். மனை நகர ஊரமைப்பு இயக்ககத்தின் (டி.டீ.சி.பி.) அனுமதியைப் பெற்றிருக்கிறதா என்பதைக் கவனிக்க வேண்டும். குறைந்த விலையில் மனை கிடைக்கிறது என்பதற்காக அனுமதி விவரங்களைக் கவனிக்காமல் வாங்கினால் பின்னர் பிரச்சினையாகிவிடும். பிற்காலத்தில் மனையில் வீடு கட்ட வங்கிக் கடன் பெற விரும்பினால், இந்த அனுமதி மிகவும் முக்கியம். இத்துடன் ஆவணங்களைப் பார்க்கும் படலம் முடிந்துவிடுவதில்லை. நிலம் எந்த வகையைச் சேர்ந்தது என்பதை ஆராய்ந்து அதற்குத் தகுந்த ஆவணங்களையும் பார்க்க வேண்டும். பொதுவாக வீடுகள் உள்ள குடியிருப்புப் பகுதிகளை நத்தம் என்று அழைப்பார்கள்.
இதில் நத்தம் என்றும், நத்தம் புறம்போக்கு என்றும் இரு வகை உள்ளன. புறம்போக்கு நிலத்தில் வசித்து வந்தால், அந்த இடத்துக்கு உரிய அனுபவப் பாத்தியதை அடிப்படையில் நத்தம் பட்டா ஆவணம் வழங்கப்படும். அந்தப் பட்டா உண்மையான பட்டாவா என்பதையும் சரி பார்க்க வேண்டும். இந்தப் பட்டாவோடு, மின் இணைப்பு ரசீது, வீட்டு வரி ரசீது ஆகியவையும் மனை விற்பரின் பெயரில் உள்ளனவா என்பதைப் பார்க்க வேண்டும். ஒரு வேளை இந்த ஆவணங்கள் இல்லாவிட்டால், மற்ற ஆவணங்கள் இருந்தும்கூடச் சொத்தை உங்கள் பெயருக்கு மாற்றுவதில் சிக்கல் வர வாய்ப்புள்ளது என்பதால் எல்லாவற்றையும் கவனமாகப் பார்த்து வாங்க வேண்டும்.
- முகேஷ்