

சுவர்களை எப்படி அலங்கரிக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? வால்பேப்பர், 3டி வால்பேப்பர் இல்லாமல் எளிமையாகவும், புதுமையாகவும் சுவர்களை அலங்கரிப்பதற்கான சில வழிகள்...
சுவர்களில் ஃப்ரேம்களுடன்தான் கலைப் படைப்புகளையும், ஓவியங்களையும் மாட்ட வேண்டுமா என்ன? ஓவியங்களை கிளிப்புகளில் மாட்டி அதைச் சுவரில் தொங்கவிடலாம். வித்தியாசமான அழகைத் தரும்.
சுவர்களில் பயன்படுத்தும்படி பல வண்ணங்களில் இப்போது ‘மேட்ஸ்’(Colored mats) கிடைக்கின்றன. இந்த மேட்ஸைப் பயன்படுத்தி உங்கள் கலைப் படைப்புகளைச் சுவரில் மாட்டிவைக்கலாம். உங்கள் சுவரின் வண்ணத்துக்குப் பொருந்தும்படி மேட்ஸைத் தேர்ந்தெடுங்கள்.
பட்ஜெட்டுக்குள் சுவர் அலங்காரம் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் வீட்டில் இருக்கும் பழைய ஃபிரேம்களைச் சேகரியுங்கள். உங்களுக்குப் பிடித்த நிறத்தில் பெயிண்டை வாங்கிக்கொள்ளுங்கள். அந்த பெயிண்டை ஃப்ரேம்களுக்கு அடித்துச் சுவரில் மாட்டிவையுங்கள். இந்த ஃபிரேம்களுக்குள் உங்களுக்குப் பிடித்திருந்தால் ஏதாவது பொருளைப் பொருத்தலாம். அப்படியில்லையென்றால் வெறுமனே விட்டுவிடலாம். இது அதிக செலவில்லாமல் சுவரை அலங்கரிப்பதற்கான வழி.
பல வண்ணத் தட்டுகளைச் சுவரில் பொருத்தி வைக்கும் அலங்காரம் இப்போது பிரபலமாகிவருகிறது. வித்தியாசத்தை விரும்புபவர்கள் இந்தச் சுவர் அலங்காரத்தைத் தேர்ந்தெடுக்கலாம்.
சுவர்களைப் படங்கள், ஓவியங்களை வைத்து மட்டும் அலங்கரிக்காமல் கண்ணாடிகளை வைத்தும் அலங்கரிக்கலாம். விதவிதமான வடிவங்களில் கிடைக்கும் கண்ணாடிகளை மாட்டி வைக்கலாம். பெரிய கண்ணாடிகளைத் தேர்ந்தெடுப்பதற்குப் பதிலாகச் சிறிய கண்ணாடிகளைத் தேர்ந்தெடுக்கலாம்.
சுவரில் டைல்ஸ்களைப் பொருத்தியும் அலங்கரிக்க முடியும். இரண்டு கான்ட்ராஸ்ட் வண்ணங்களில் டைல்ஸைத் தேர்ந்தெடுக்கவும். அதைப் புதுமையான வடிவங்களில் சுவரில் பொருத்தலாம். ‘வின்டேஜ்’ உணர்வைக் கொடுக்கும் நிறங்களிலும் டைல்ஸைத் தேர்ந்தெடுக்கலாம்.
சுவரில் எழுத்துக்களை வைத்தும் அலங்கரிக்கலாம். கார்ட்போர்டில் நீங்கள் நினைக்கும் வார்த்தைகளுக்குத் தேவையான எழுத்துகளை உருவாக்குங்கள். வீட்டில் பயன்படுத்தப்படாமல் இருக்கும் பழைய புத்தகங்களில் இருக்கும் வண்ணப்படங்களை இந்த எழுத்துகளில் ஒட்டுங்கள். இந்த எழுத்துக்கள் சுவரை அழகாக்கும்.
அலமாரி மட்டுமல்லாமல் சுவரிலும் புத்தகங்களை அடுக்கிவைக்கலாம். சுவரில் புத்தகங்களை அந்தரத்தில் அடுக்கிவைத்திருப்பதைப் போன்ற உணர்வை இது கொடுக்கும். அதற்கான பிரத்தியேக சுவர் புத்தகப் பிடிப்பான்கள் (book holders) கிடைக்கின்றன. புத்தகப் பிரியர்கள் இந்த அலங்காரத்தைத் தேர்ந்தெடுக்கலாம்.
ஒரு கயிற்றை வித்தியாசமான வடிவமைப்பில் சுவரில் ஒட்டிவைக்கவும். இதுவும் சுவர் அலங்காரத்தின் புதுமையான வடிவமைப்பாக இருக்கும்.