

வீட்டுக்கு உற்சாகமான தோற்றத்தை விரும்புபவர்களுக்கு ‘போல்கா புள்ளிகள்’ அலங்காரம் பொருத்தமானதாக இருக்கும். ‘போல்கா புள்ளிகள்’ (Polka dots) என்னும் பெயர் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பாதியில் ஐரோப்பிய நடனமான போல்காவின் தாக்கத்தால் உருவானது. ‘ஃபிளமெங்கோ’ நடன கலைஞர்களின் பாரம்பரியமாக இந்த ‘போல்கா புள்ளிகள்’ ஆடையை அணிந்துவந்திருக்கின்றனர். ஓவியர் ஃபிரெட்ரிக் பேசில் 1867-ல் வரைந்த ‘பேமிலி ரீயுனியன்’ என்னும் ஓவியத்தில் ‘போல்கா புள்ளிகள்’ ஆடையைப் பயன்படுத்தியிருக்கிறார்.
ஐரோப்பியக் கலாச்சாரத்தில் உருவான இந்த போல்கா புள்ளிகள் அமெரிக்காவில் 1928-ல் வெளிவந்த டிஸ்னியின் ‘மின்னி மவுஸ்’ கதாபாத்திரத்தின் ஆடையால் பிரபலமானது. அதற்குப் பிறகு, இந்த போல்கா புள்ளிகள் ஆடைகளில் மட்டுமல்லாமல் பல விஷயங்களிலும் பயன்படுத்தப்பட்டது. இப்படிதான், வீட்டை அலங்கரித்திலும் போல்கா புள்ளிகளின் தாக்கம் வந்தது. குழந்தைகளின் அறை அலங்காரத்தில் இந்தப் போல்கா புள்ளிகளுக்கு எப்போதும் முக்கியத்துவம் உண்டு.
வீட்டின் பாரம்பரியமான இடத்துக்கு இந்த போல்கா புள்ளிகளைப் பயன்படுத்தலாம். ஆனால், அவற்றின் நிறத்தையும், அளவையும் கவனமாகத் தேர்ந்தெடுக்க வேண்டும். சின்ன போல்கா புள்ளிகள் பாரம்பரிய தோற்றத்தை அளிப்பதற்கு உதவும். பெரிய புள்ளிகள் நவீன தோற்றத்தை வீட்டுக்குக் கொடுக்கும்.
போல்கா புள்ளிகளை அறைக் கலன்களில் எதற்கு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். மரத்தாலான அறைக்கலன்களுக்கு இந்த போல்கா புள்ளிகள் இன்னும் பொருத்தமானதாக இருக்கும்.
சுவர் அலங்காரத்துக்குப் பெரிய புள்ளிகளைப் பயன்படுத்தலாம். இடவசதியைப் பொருத்து, எவ்வளவு பெரிதாக வேண்டுமானாலும் இந்த போல்கா புள்ளிகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம். சுவரில் பளிச்சென்று தெரியும்படியும் இந்த போல்கா புள்ளிகளை வடிவமைக்கலாம். அப்படியில்லையென்றால், சுவரின் வண்ணத்தோடும் ஒன்றிப்போய் மறைந்திருக்கும்படியும் பயன்படுத்தலாம்.
சுவரில் எந்த மாதிரி வால்பேப்பர் இருந்தாலும், அதனுடன் பொருத்தும்படி அறைக்கலன்களில் போல்கா புள்ளிகளை வடிவமைக்கலாம். சுவரில் கோடுகள் இருந்தாலும் சரி, பூக்கள் இருந்தாலும் சரி, அதே நிறத்தாலான போல்கா புள்ளிகளை வைத்து அறைக்கலன்களை வடிவமைக்கலாம்.
போல்கா புள்ளிகளை அடர்த்தியாக இருக்கும்படி வடிவமைக்கலாம். இது அறை நிரம்பியிருப்பதைப் போன்ற தோற்றத்தை உருவாக்கும். அடர்த்தியில்லாத போல்கா புள்ளிகள் அறைக்கு அமைதியான தோற்றத்தைக் கொடுக்கும்.
சுவர்கள், கூரைகள் மட்டுமல்லாமல் புதுமை யான வழிகளிலும் போல்கா புள்ளிகளைப் பயன்படுத்த முடியும். உதாரணத்துக்குச் சாப்பாட்டு மேசையைப் போல்கா புள்ளிகள் இருக்கும்படி அமைக் கலாம். சமையலறையின் அலமாரிகளின் பின்னணியிலும் போல்கா புள்ளிகளை அமைக்கலாம். தலையணைகள், தரைவிரிப்புகள், திரைச்சீலைகள் என எல்லாவற்றிலும் இந்த போல்கா புள்ளிகளைப் பயன்படுத்த முடியும்.