

உலகின் முதல் இருமாடி முப்பரிமாண அச்சு (3D Printing) வீடு துபாயில் கட்டப்பட்டுள்ளது. 6,889 சதுர அடியில் 31 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ள இந்தக் கட்டிடம் கடந்த வாரம் முடிக்கப்பட்டது. இந்த வீடு கின்னஸ் சாதனைப் புத்தகத்திலும் இடம்பிடித்துள்ளது. பெரிய 3டி பிரிண்ட் இயந்திரங்கள் கொண்டு இந்த வீடு கட்டப்பட்டுள்ளது. வேலையாட்கள் 15 பேரைக் கொண்டு மூன்று மாதத்துக்குள் இந்தக் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
மேலும் சாதாரணமாக இரு மாடி வீடு கட்ட ஆகும் செலவில் 50 சதவீதம்தான் இந்த வீடு கட்ட ஆகியுள்ளது என இந்தத் திட்டத்தை மேற்கொண்ட துபாய் நகர சபை தெரிவித்துள்ளது. அச்சு இயந்திரமே கட்டுமானப் பொருட்களைக் கையாள்வதால் பொருட்கள் வீணாவது தடுக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இந்தத் தொழில்நுட்பத்தைக் கட்டுமானத் துறையில் புகுத்தவும் துபாய் நகர சபை தீர்மானித்துள்ளது.
2000-ம் ஆண்டுக் கட்டுமானம் சிதைவு
விசாகப்பட்டினம் அருகே தொட்லகொண்டா மலையிலுள்ள பழமையான புத்த ஸ்தூபி மழையால் சேதமடைந்துள்ளது. இந்த மலையில் செயல்பட்ட புத்த மடாலயம், அடிப்படைக் கட்டுமானத்துடன் வடிவமைக்கப்பட்டது. உணவுகான இடம், தியானக் கூடம், போதனைக் கூடம் போன்றவற்றுடன் வடிவமைக்கட்டிருந்தது. 2000 ஆண்டுப் பழமையான இந்த மகா ஸ்தூபி சிதிலமடைந்ததைத் தொடர்ந்து அதைச் சீர்படுத்தும் பணியில் ஆந்திர மாநிலச் சுற்றுலாத் துறை இறங்கியுள்ளது.
புது நாடாளுமன்றக் கட்டிடம்
நாடாளுமன்றக் கட்டிட வளாகத்தைப் புதுப்பிக்கும் பணிகளை மேற்கொள்வதற்கான கட்டுமான ஒப்பந்தம் அகமதாபாத்தைச் சேர்ந்த எச்.சி.பி. டிசைன் (HCP Design) என்ற நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசு இந்திய நாடாளுமன்றத்துக்குப் புதிய கட்டிடம், செயலகம் ஆகியவற்றைக் கட்ட திட்டமிட்டுள்ளது. அதற்கான மாதிரி வரைபடத்தைச் சமர்ப்பிக்க தேசிய, சர்வதேசக் கட்டிட வடிவமைப்பு நிறுவனங்களுக்கு மத்திய பொதுப்பணித் துறை கடந்த செப்டம்பர் மாதம் 2 அன்று அழைப்பு விடுத்தது.
அதைத் தொடர்ந்து பல நிறுவனங்கள் தங்கள் மாதிரி வரைபடங்களைச் சமர்ப்பித்திருந்தன. அவற்றுள் எச்.சி.பி. டிசைன் நிறுவனமும் ஒன்று. பரிசீலனைக்குப் பிறகு அந்நிறுவனத்தை மத்திய அரசு தேர்ந்தெடுத்துள்ளது. இந்நிறுவனம் குஜராத்தில் சபர்மதி ஆற்றங்கரை மேம்பாட்டு திட்டத்தை ஏற்கெனவே செயல்படுத்தியுள்ளது.
தொகுப்பு: விபின்