

ஜீ.முருகன்
உரம், பூச்சிக் கொல்லியைப் பயன்படுத்தினால்தான் பயிர் விளையும் என எப்படி இன்றைய (வளமான காட்டுப் பகுதியில் வசித்தாலும்) நவீன விவசாயி மூளைச் சலவை செய்யப்பட்டிருக்கிறானோ அப்படித்தான் பில்லர் போட்டு வீடு கட்டினால்தான் உறுதியாக நிற்கும் என்று இன்றைய சராசரி மனிதனும் நம்பவைக்கப்பட்டிருக்கிறான்.
‘இவ்வளவு காசு போட்டு வீடு கட்றோம், அது உறுதியாக நிக்க வேணாமா?’ என்ற பயம் பல பொய்களை நம்ப வைக்கிறது. ஏதோ பத்து மாடி வீடு கட்டப்போகிறவர் போல் பில்லர்களை எழுப்பி நிற்க வைத்துவிடுகிறோம்.
சுவர் அமையப்போகும் இடத்தில் எல்லாம் சுமார் நான்கடி ஆழத்துக்கு (இது தரையின் உறுதித் தன்மையைப் பொறுத்து மாறும்) பள்ளம் தோண்டி, அதில் குண்டுக் கற்களையும் சேற்றையும் நிரப்பி 3 அடிக்குக் கட்ட வேண்டும். அதற்கு மேல் கருங்கற்களால் ஒன்றரை அடி அகல சுவர் எழுப்பித் தரைக்கு மேல் எவ்வளவு உயரம் வேண்டுமோ அதுவரை கட்ட வேண்டும். அதற்கு மேல் ஒரு பெல்ட் கான்கிட்ரீட் போட்டு முக்கால் அடிச் சுவரைக் கட்ட வேண்டும். இதை load bearing structure என்று சொல்வார்கள். நம் தாத்தா, அப்பா காலத்தில் இப்படித்தான் அடித்தளம் போட்டு வீடு கட்டினார்கள்.
Framed structure முறை சுமார் 6 அடி ஆழத்துக்குக் குழி தோண்டி பில்லர் எழுப்பி கட்டுவது. பில்லர்களுக்கு நடுவே மறைப்பாகச் சுவர் நிற்கும். கட்டிடத்தைத் தாங்குவது பில்லர்களே. தரை உறுதியாக இருக்கிறதோ இல்லையோ இதைத்தான் இன்றைக்குப் பெரும்பாலானவர்கள் பின்பற்றுகிறார்கள். இன்னொரு முறை இருக்கிறது. அதுதான் Semi load bearing structure. இந்த முறையில் பில்லர் கம்பிகளை பெல்ட் கான்கிரீட்வரை மட்டுமே எழுப்பி முடித்துக்கொள்வது. சுவர்களுக்கு நடுவே பில்லர் இருக்காது, லோடு பியரிங்கில் போலக் கட்டிடத்தைத் தாங்கி நிற்பது சுவர்களே.
நான்கடி ஆழத்திலேயே செட்டு (உறுதியான தரை) கிடைத்தாலும் பில்லர் போட்டுத்தான் வீடு கட்ட வேண்டும் என எங்கள் வீட்டில் ஒரு விவாதம் நடந்தது. அதன் முடிவில் நான் செமி லோடு பியரிங்கி முறையைப் பின்பற்ற முடிவு செய்தேன். அதாவது பில்லரை பெல்ட் கான்கிரீட்டோடு முடித்துக்கொண்டோம்.
சிமெண்ட் பூசாத வீடுகள் கட்டப்போகிறீர்கள் என்றால் சுவர்களுக்கு நடுவே பில்லர் இல்லாமல் இருப்பது அவசியம். நண்பர் ஒருவர் கேரளத்திலிருந்து இன்டர்லாக் கற்களைக் கொண்டுவந்து வீடுகட்டினார். ஆனால், பில்லர்களையும் எழுப்பிவிட்டார். பில்லர் இல்லாமல் வீடு கட்டுவதா?
பொறியாளருக்கும் இந்த உண்மை தெரியும். ஆனால், வாடிக்கையாளரின் நம்பிக்கையை மதிக்க வேண்டும் என்பதற்காக, நமக்கெதுக்கு வம்பு, ஏதாவது சிக்கல் வந்தா நம்மைக் காரணமாக்கிவிடுவார்கள் என பில்லர்களை எழுப்பிக் கொடுத்துவிடுகிறார். வீட்டுக்கான கூரைத் தளம் (roof concret) 8 மி.மீ., 10 மி.மீ. கம்பிகளை 7 அங்குல இடைவெளியில் குறுக்கு மறுக்காகப் போடுவார்கள்.
இதற்கு நண்பர் ஒருவர் 12 மி.மீ. கம்பிகளை மட்டுமே பயன்படுத்தினார். மேலும் அதற்காகப் பெருமையும்பட்டுக்கொண்டார். ஒரு வேளை அவருக்கு மொட்டை மாடியில் யானைப் பண்ணை அமைக்கும் திட்டம் இருந்திருக்கலாம். வீட்டுக் கூரை என்பது வெயில், மழை வீட்டுக்குள் இறங்காமல் பாதுகாப்பதற்குத்தான். இது போன்ற எளிய உண்மையை உணர்ந்துகொண்டாலே போதும் பல செலவுகளைக் குறைத்துவிடலாம்.
கட்டுரையாளர், சிறுகதை எழுத்தாளர் ‘ஜீ.முருகன் கதைகள்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்
தொடர்புக்கு:
gmuruganjeeva@gmail.com