Published : 19 Oct 2019 12:06 PM
Last Updated : 19 Oct 2019 12:06 PM

விடு கட்டலாம் வாங்க 02: நம் மண், நம் கற்கள்

ஜீ.முருகன்

கடந்த வாரம் வெளியான எனது கட்டுரையையும் வீட்டு ஒளிப்படத்தையும் பார்த்துப் பலரும் எனக்கு ஆர்வத்துடன் மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்கள். இதில் பாதிக்கு மேற்பட்டோர் இத்துறையோடு தொடர்புள்ளவர்கள் என்பதுதான் ஆச்சரியமான விஷயம். பசுமைக் கட்டுமான முறை என்பது புதிய தொழில்நுட்பமல்ல. இயற்கை விவசாயம் போல நம் முன்னேற்றப் (?) பாதையில் கடாசிவிட்டு வந்தவை. அதன் பின்விளைவுகள் மேலெழும்போதெல்லாம் ஒரு குற்ற உணர்வு நம்மைத் திரும்பிப் பார்க்கச் செய்கிறது.

இயற்கை விவசாயத்தில் ஈடுபடுவதும் பசுமைக் கட்டுமான முறையில் வீடு கட்ட விரும்புவதும் வெறும் பேஷனாக மட்டும் இருந்துவிடக் கூடாது. அது இயல்பான வாழ்க்கை முறையாக மாற வேண்டும். நாம் அதற்கு ஒப்புக்கொடுத்துவிட வேண்டும். நம் தலையில் நிரப்பி வைத்திருக்கும் பலவற்றையும் தூக்கி எறிந்துவிட்டு எளிமைக்குத் திரும்ப வேண்டும். இது காந்தியத்தோடு தொடர்புள்ளது.

பசுமைக் கட்டுமான முறையில் வீடு கட்ட விரும்பும் நீங்கள் அவற்றைச் செயல்படுத்த வெறும் பணம் வைத்திருந்தால் மட்டும் போதாது. அவை குறித்த குறைந்த அளவிலான தொழில்நுட்ப அறிவையும் கொண்டிருக்க வேண்டும். காரணம் கொத்தனார் உங்களின் யோசனையைப் புரிந்து கொள்ளாமல் “அதெல்லாம் நல்லா இருக்காது சார், உறுதியா நிக்காது சார்” என்று சொல்லி அவர் வழிக்கு உங்களை இழுத்துச் சென்றுவிடுவார்.

உரிமையாளர், கொத்தனார், பொறியாளர் இந்த மூன்று பேரில் ஒருவருக்காவது அதன் முழுத் தொழில்நுட்பமும் தெரிந்திருக்க வேண்டும். அப்போதுதான் அதன் முழுப் பயனைப் பெற முடியும். பசுமைக் கட்டுமானத் தொழில்நுட்பம் தெரிந்த பொறியாளர்களும், கொத்தனார்களும் குறைவான எண்ணிக்கையிலேயே இருக்கிறார்கள்.

ஏனென்றால் அவர்களின் தேவை குறைவு. அப்படிக் கிடைத்தாலும் சிலர் வழக்கமான முறையில் ஒரு வீடு கட்டினால் எவ்வளவு செலவாகுமோ அதைவிடக் கூடுதலான செலவுக்கு உங்களை அழைத்துச் சென்றுவிடுவார்.

இந்நிலையில் நீங்களே அந்தத் தொழில்நுட்பத்தைக் கற்றுக்கொள்வதும், உள்ளூர்க் கொத்தனார்களைக் கொண்டு அதைச் செயல்படுத்திக்கொள்வதுதான் சிறந்த வழி. அந்தத் தொழில்நுட்பத்தை அவருக்கு நீங்கள் வழங்க வேண்டும். யூடியூப் போன்ற இணையதள வசதியைக்கொண்டு இந்த அறிவைப் பெறுவது பெரிய காரியமல்ல. கொஞ்சம் சிரத்தைக் காட்டினால் நீங்களும் ஒரு கட்டிடப் பொறியாளர்தான்.

மேலும், நீங்கள் கட்டப்போகும் வீட்டுக்கான கச்சாப் பொருட்கள் உங்கள் பகுதியில் கிடைக்கின்றனவா எனத் தேட வேண்டும். குறிப்பாகக் கட்டிடத்தை உருவாக்கப் போகும் கற்கள். வழக்கம்போல சிமெண்ட் பூசி வண்ணம் அடிப்பதாக இருந்தால் அருகில் கிடைக்கும் தரம் குறைந்த செங்கற்களே போதும். ஆனால், நீங்கள் சிமெண்ட் பூசப் போவதில்லை என்றால் தரமான கற்கள் அவசியம்.

அழகு, நேர்த்தி முக்கியமென்றால் ஒயர் கட் செங்கற்கள், எக்ஸ்போஸ்டு கற்கள், இன்டர்லாக் கற்கள் போன்ற விலை கூடுதலான கற்களைப் பயன்படுத்தலாம். கொஞ்சம் சிரத்தைக் காட்ட முடியுமானால் அழுத்தப்பட்ட நிலைத்த மண் கற்களைக் (CSEB) கொண்டு கட்டலாம்.

இதெல்லாம் சிக்கல் என்றால் செலவு குறைவான உங்கள் பகுதிகளிலேயே கிடைக்கக் கூடிய தரமான செங்கற்களையே பயன்படுத்தலாம். இந்தியப் பசுமைக் கட்டுமான முன்னோடி லாரி பேக்கரால் கட்டப்பட்ட பெரும்பாலான கட்டடங்கள் இந்தச் செங்கற்களைக் கொண்டு கட்டப்பட்டவைதாம்.

ஆனால், இந்தக் கல்லை வைத்துக் கட்டலாம் என நினைத்தால் “உப்புக் காற்றுக்கு அரித்துவிடும், மழையில் கரைந்துவிடும், பூசவில்லையென்றால் உறுதியாக நிற்காது” என்றெல்லாம் சொல்வார்கள். நீங்கள் “நூறு ஆண்டுகளுக்கு முன் ஆங்கிலேயேர் காலத்தில் இந்த பாணியில் கட்டப்பட்ட கட்டிடங்கள் இன்னும் அப்படியே நிற்கின்றனவே” என்று சொல்லிப் பார்ப்பீர்கள். “அந்தக் கற்கள் வேறு, இந்தக் கற்கள் வேறு” என அவர்கள் உங்கள் விருப்பத்துக்குத் தடை சொல்வார்கள். ஆனால், அந்தக் கட்டுமானக் கற்களை ஆங்கிலேயர்கள் என்ன இங்கிலாந்திலிருந்தா கொண்டு வந்தார்கள்?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x