

ஜி.எஸ்.எஸ்.
வீட்டு விற்பனைப் பத்திரம் என்பது மிக முக்கியமானது. அரசின் முத்திரைத் தாள்களில் பதிவாளரால் கையெழுத்திடப்பட்ட ஆவணம் இது. வீட்டை உங்களுக்கு விற்றவரது, வாங்கிய உங்களது சாட்சிகளின் கையெழுத்துகளும் அதில் இருக்கும். சொல்லப்போனால் குறிப்பிட்ட வீட்டின்மீது உங்களுக்கு உரிமை இருக்கிது என்பதைத் தீர்மானிப்பதே இந்த விற்பனைப் பத்திரம்தான். இது பதிவுசெய்யப்படும்போதுதான் அந்த வீட்டுக்கு நீங்கள் அதிகாரபூர்வ உரிமையாளராகிறீர்கள்.
வீட்டின்மீது வருங்காலத்தில் ஏதாவது வழக்கு தொடரப்பட்டால் வீட்டின் உரிமையாளர் என்ற கோணத்தில் உங்கள் உரிமையை நிலைநாட்டலாம். அதற்கான முக்கியக் கவசம் அல்லது ஆதாரம் விற்பனைப் பத்திரம்தான். இதன்மூலம்தான் வீட்டின் முந்தைய சொந்தக்காரர் தனது உரிமையை உங்களுக்கு அளிக்கிறார்.
உரிய முத்திரைத்தாள் எவ்வளவு மதிப்பு ஸ்டாம்பு கொண்டதாக இருக்கவேண்டும் என்பதைத் தீர்மானிப்பது அரசுதான். இருதரப்பினரின் முழுப்பெயர், முகவரி, வயது போன்றவை இதில் இடம்பெறும். இவற்றில் எது இல்லை என்றாலும் விற்பனைப் பத்திரம் செல்லாததாகிவிடும். கூடவே உங்கள் வீடு தொடர்பான அடிப்படை விவரங்களும் இதில் இருக்கும்.
அதன் பரப்பளவு எவ்வளவு, அதன் நான்கு பரப்புகளிலும் எல்லைகளாக அமைந்துள்ளவை யாருடைய வீடு அல்லது எந்தத் தெரு போன்ற விவரங்களும் இதில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கும். பத்திரத்துக்கான ஸ்டாம்பு கட்டணத்தைச் சொத்தை வாங்குபவர்தான் கொடுக்க வேண்டும். அதேநேரம் அந்த வீடு தொடர்பான சொத்து வரி, தண்ணீர் வரி, மின்சாரக் கட்டணம் போன்றவற்றை விற்பனைப் பத்திரம் பதிவு செய்யப்படும் நாள்வரை வீட்டை விற்பவர் செலுத்தி இருக்க வேண்டும்.
இவ்வளவு மதிப்பு வாய்ந்த விற்பனைப் பத்திரத்தை நாம் தொலைத்துவிட்டால் அது பல சிக்கல்களுக்கு வழிவகுக்கும். எனவே, விற்பனைப் பத்திரம் கைக்கு வந்தவுடன் அதைப் பிரதி எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். ஸ்கேன் செய்து வைத்துக்கொள்வது மேலும் நல்லது. விற்பனைப் பத்திரத்தைத் தொலைத்து விட்ட ஒரே காரணத்தால் நீங்கள் அந்தச் சொத்தின் உரிமையாளர் அல்ல என்று ஆகிவிடாது என்பது உண்மைதான் என்றாலும், பிரதி எடுத்து வைத்திருந்தாலும், மூல ஆவணத்தைத் தொலைத்துவிட்டால் சும்மா இருந்துவிடக் கூடாது.
வீடு இருக்கும் பகுதியிலுள்ள சார்பதிவாளர் அலுவலகத்துக்குச் சென்று உங்கள் விற்பனைப் பத்திரத்தின் சான்றளிக்கப்பட்ட பிரதி (Certified copy) ஒன்றை விண்ணப்பித்து அதைப் பெற்றுக் கொள்ளுங்கள். கூடவே விற்பனைப் பத்திரம் தொலைந்துபோனதிலிருந்து தற்போதுவரை உள்ள காலகட்டத்துக்கான ஒரு வில்லங்கமில்லாச் சான்றிதழையும் பெற்றுக்கொள்ளுங்கள். இதன் மூலம் தொலைந்த உங்களது விற்பனைப் பத்திரம் தவறான முறையில் பயன்படுத்தப்படவில்லை என்பதை உறுதி செய்துவிடலாம்.
என்றாலும், உங்கள் வீட்டை விற்கும்போது சிக்கல் எழலாம். உங்களிடமிருந்து வீட்டை வாங்குபவருக்கு சந்தேகம் வரலாம். உங்களிடமுள்ள சான்றளிக்கப்பட்ட பிரதியைக் கொண்டுதான் நீங்கள் அவரை நம்பவைக்க முடியும். அவர் வங்கிக் கடன் மூலம் உங்கள் வீட்டை வாங்குவதாக இருந்தால் அது மேலும் சங்கடம். வங்கி அதிகாரிகளை வேறு நீங்கள் நம்ப வைக்க வேண்டியிருக்கும்.
உங்கள் ஒரிஜினல் விற்பனைப் பத்திரம் தொலைந்துவிட்டால் நீங்கள் உடனடியாக எடுக்க வேண்டிய சில நடவடிக்கைகள் உண்டு. முதலில் இது தொடர்பாக காவல் நிலையத்தில் ஒரு புகார் அளியுங்கள். ஆவணத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்ற சான்றிதழைக் (Non traceable Certificate) காவல்துறையிடமிருந்து பெற வேண்டும். ஓர் ஆங்கில நாளிதழிலும், ஓர் உள்ளூர் நாளிதழிலும் விற்பனைப் பத்திரம் தொலைந்ததை விளம்பரப்படுத்த வேண்டும். இது தொடர்பாக - அதாவது உங்கள் வீட்டின் உரிமை தொடர்பாக - யாருக்கும் எதிர்ப்பு இல்லை என்பதை வழக்கறிஞர் கடிதம் மூலம் நீங்கள் பெறவேண்டும்.
உங்கள் வீட்டை விற்கிறீர்கள் என்றால் உங்களிடமிருந்து வீட்டை வாங்குபவர் ஓர் உறுதிமொழிக் கடிதத்தை (Undertaking letter on Affidavit) பெற்றுக்கொள்வார். அதாவது வருங்காலத்தில் மூல விற்பனைப் பத்திரம் எப்படியோ உங்கள் வசம் வந்து சேர்ந்தால் அதை அவருக்குத் தருவீர்கள் என்பதற்கான உறுதிமொழி.
மூல ஆவணங்களை மிகுந்த பாதுகாப்புடன் வைத்திருக்க வேண்டியது அவசியம். வங்கி லாக்கர்களை நகைகளை வைக்க மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பதில்லை. முக்கிய ஆவணங்களைப் பாதுகாக்கவும்தான் அதைப் பயன்படுத்த வேண்டும். இவற்றையும் மீறி அது தொலைந்து விட்டால் உடனடியாக மேற்படி நடவடிக்கைகளை எடுப்பது புத்திசாலித்தனம்.