ஒழுங்கமைக்கப்பட்ட வீட்டுக்கான ரகசியங்கள்

ஒழுங்கமைக்கப்பட்ட வீட்டுக்கான ரகசியங்கள்
Updated on
2 min read

கனி

சில வீடுகள் எப்போது நுழைந்தாலும் ஒரே மாதியாக ஒழுங்கமைக்கப்பட்ட தோற்றத்துடனே காணப்படும். வீட்டிலுள்ளவர்களின் மனநிலை, மெனக்கெடல் ஆகியவைதாம் அதற்கான முக்கியக் காரணங்கள். எவ்வளவுதாம் பணிகள் இருந்தாலும் சிலர் எப்போதும் ஒரேமாதிரியாகத் தங்கள் வீட்டைப் பராமரிக்கிறார்கள். வீட்டை ஒழுங்குப்படுத்துவது என்பது கடினமான விஷயமல்ல. சிறிய அளவிலான முயற்சிகளை மேற்கொண்டாலே எளிமையாக வீட்டை ஒழுங்கமைத்துவிடலாம். வீட்டை ஒழுங்குபடுத்துவதற்கான சில ஆலோசனைகள்…

வேண்டாம் என்ற முடிவு

ஒழுங்கமைக்கப்பட்ட அழகான வீட்டுக்கான முக்கியமான ரகசியம், தேவையில்லாத பொருட்களை உடனடியாக அகற்றுவதுதான். இப்போதைக்குப் பயன்பாடில்லாத பொருட்களை வீட்டில் சேகரித்துவைப்பது புத்திசாலித்தனமல்ல. என்றாவது ஒரு நாள் பயன்படும் என்று சேகரித்து வைக்கும் பொருட்கள்தாம் வீட்டை ஒழுங்கமைப்பதைச் சிக்கலாக்கிவிடுகின்றன.

பொருந்தாத, பழைய, பயன்படுத்தாத ஆடைகளை அவ்வப்போது அப்புறப்படுத்திவிடுவது சிறந்தது. ஆடைகள் மட்டுமல்லாமல் தேவையில்லாமல் சேகரித்து வைத்திருக்கும் பழைய பரிசுப்பொருட்கள் போன்றவையும் வீட்டின் பெரும்பகுதியை அடைத்துக்கொண்டிருக்கும். உண்மையாக நேசிக்கும் பொருட்களை மட்டும் வீட்டில் வைத்துக்கொண்டு மற்ற தேவையில்லாத பொருட்களையெல்லாம் அகற்றிவிடுவதுதான் ஒழுங்கமைக்கப்பட்ட வீட்டை உருவாக்குவதற்கான முதல் படி.

வீட்டுக்கு வேண்டும் என்ற பொருட்களைப் பட்டியலிடுவதைவிட, வேண்டாம் என்ற பட்டியிலை முதலில் தயாரித்தால் வீட்டை எளிமையாக ஒழுங்கமைத்துவிடலாம். உதாரணமாக, குழந்தைகள் காகிதங்களில் வரைந்து வைத்திருக்கும் ஓவியங்கள், அவர்களின் பழைய ‘புராஜெக்ட்ஸ்’ ஆகியவற்றையெல்லாம் எல்லாம் தூக்கிப்போடாமல் அப்படியே சேகரித்து வைத்திருந்தால், அவற்றை ஒளிப்படங்கள் எடுத்து ஒரு ‘போட்டோ ஆல்ப’மாக மாற்றிவிடலாம்.

இசை, படங்கள், புத்தகங்கள்

திரைப்படங்கள், இசை போன்றவற்றை ‘டிவிடி’, ‘சிடி’-க்களில் சேகரித்துவைக்காமல் கணினி, ‘ஹார்ட் டிஸ்க்’ போன்ற மின்னனு சாதனங்களில் சேகரித்து வைப்பது சிறந்தது. அத்துடன், புத்தகங்களுக்கும் இது பொருந்தும். பெரும்பாலும் ஆன்லைன் பதிப்பில் கிடைக்கும் புத்தகங்களைப் பதிவிறக்கம் செய்து ஆன்லைனில் படிக்கும் பழக்கத்தை வளர்த்துகொண்டால் வீட்டில் அதிக அளவில் புத்தகங்களைச் சேகரித்து வைப்பதைக் குறைக்க முடியும். பலருக்குப் புத்தகங்களைக் கணினியிலோ கைபேசியிலோ படிப்பது பிடிக்காது. அப்படிப்பட்டவர்கள், புத்தகங்களைத் தேர்வுசெய்து வாங்கிப்படிக்கலாம். நண்பர்களுக்குள் வாசகர் வட்டம் ஒன்றை உருவாக்கி புத்தகங்களைப் பகிர்ந்துகொள்ளலாம்.

ஆடை அலமாரிகள்

ஆடை அலமாரிகளில் தேவையில்லாமல் சேர்த்துவைத்திருக்கும் ஆடைகளை அடிக்கடி அப்புறப்படுத்திவிடுவது சிறந்த விஷயம். நீங்கள் அணியாமல் நீண்டகாலமாக அப்படியே வைத்திருக்கும் ஆடைகளைத் தேவையிருப்பவர்களுக்கு அளித்துவிடலாம். பெரும்பாலான வீடுகளில் ஆடைகள்தாம் பெரிய இடத்தை ஆக்கிரமித்துக்கொண்டிருக்கும்.

அதனால், மூன்று மாதங்களுக்கொருமுறை ஆடை அலமாரியை அலசி, தேவையில்லாதவற்றை நீக்குவது சிறந்ததாக இருக்கும். அத்துடன், ஆடித் தள்ளுபடி, விழாக்காலத் தள்ளுபடி எனத் தள்ளுபடி நேரத்தில் ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்ற வகையில் ஆடைகளை வாங்கிக் குவிக்காமல் இருந்தால் தேவையில்லாத ஆடைகள் சேர்வதைத் தடுக்க முடியும்.

சமையலறைப் பொருட்கள்

வாரத்துக்கு ஒருநாள் ஃப்ரிட்ஜைச் சுத்தப்படுத்துவது பயன்படுத்த முடியாத பழைய காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை அகற்றுவதற்கு வசதியாக இருக்கும். அத்துடன், நீங்கள் சாப்பிட மாட்டீர்கள் என்று தெரிந்தால் அந்தப் பொருட்களை வாங்காமல் இருப்பதுதான் தேவையில்லாமல் வீட்டில் குப்பை சேர்வதைத் தடுக்க ஒரே வழி. தேவைக்கு அதிகமான உணவுப் பொருட்களை வாங்கிவைக்கும்போது அவை பாழாகாமல் தடுப்பது என்பது இயலாத காரியமாகிவிடும். அதனால், கூடுமானவரை தேவையான உணவுப் பொருட்களை வாங்கிப் பயன்படுத்தும் பழக்கத்தை வளர்த்துக்கொள்வது சரியானதாக இருக்கும்.

பொருட்கள் வாங்குவது

வீட்டுக்குப் பொருட்கள் வாங்கும்போதே கவனமாக இருந்தால் தேவையில்லாமல் வீட்டில் பொருட்கள் சேர்வதைத் தடுக்கலாம். எந்தப் பொருளை வாங்குவதற்குமுன், வீட்டில் அவற்றை வைப்பதற்கு இடமிருக்கிறதா என்பதை யோசித்தபிறகு வாங்குவதுதான் சிறந்தது. வீட்டில் இடப்பற்றாக்குறை இருந்தால், தேவையில்லாமல் எந்தப் பொருளையும் வாங்காமல் இருப்பதுதான் சரியானது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in