

எல். ரேணுகாதேவி
சீனாவில் நட்சத்திர வடிவ அமைப்பைக் கொண்ட புதிய விமான நிலையம் அண்மையில் திறக்கப்பட்டுள்ளது. சீன மக்கள் குடியரசின் எழுபதாவது ஆண்டை ஒட்டி இந்த விமான நிலையம் திறக்கப்பட்டுள்ளது. தலைநகர் பெய்ஜிங்க்கு அருகில் டாக்ஜிங் என்ற பகுதியில் இந்த விமான நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இது சீனத் தலைநகரின் இரண்டாவது விமான நிலையம்.
சீனாவின் வான்வழி போக்குவரத்தை ஊக்கப்படுத்தும் நோக்கில் திறக்கப்பட்டுள்ள இந்த விமான நிலையம் 17 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது. 173 ஏக்கர் பரப்பளவில் இந்த விமான நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இது 100 கால்பந்தாட்ட மைதானங்களுக்கு ஒப்பான பரப்பாகும்.
இதனால் உலகின் மிகப்பெரிய விமான நிலையம் என்ற பெயரைப் பெற்றுள்ளது. உலகிலேயே மிக நீண்ட ஒற்றை முனைய விமான நிலையம் என்ற பெயரும் இதற்குக் கிடைத்துள்ளது. இங்கு ஏழு ஓடுபாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் ஒரே நேரத்தில் இரண்டு விமானங்கள் புறப்படவும், இரண்டு விமானங்கள் தரையிறங்கவும் முடியும்.
இவ்வளவு சிறப்புகளைக் கொண்ட இந்த விமான நிலையம் ஐந்தாண்டுகளிலேயே கட்டி முடிக்கப்பட்டுள்ளது. அதேபோல் விமான நிலையத்தில் கூட்ட நெரிசலைத் தவிர்க்க இரண்டு தளங்களைக் கொண்ட புறப்பாடு, வருகைக் கதவுகள் (Double-Deck departure, Double Deck Arrival) இங்கு அமைக்கப்பட்டுள்ளது.
வருடத்துக்கு ஒரு கோடிப் பயணிகள் இந்த விமான நிலையத்தைப் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பெய்ஜிங்கை அடுத்து மிக முக்கியமான விமான நிலையமாக டாக்ஜிங் விமான நிலையம் மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரபல பெண் கட்டிட வடிவமைப்பாளரான ஜஹா ஹாதீத் (ZAHA HADID) நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் இந்த நட்சத்திர வடிவமைப்பை உருவாக்கி உள்ளனர். சீன விமான வடிவமைப்பு நிறுவனங்களைத் தவிர்த்து ஹாங்காங்கைச் சேர்ந்த பிரபல ‘ஸ்டுடியோ லீட் 8’ நிறுவனம், நெதர்லாந்தைச் சேர்ந்த புகழ்பெற்ற நாகோ (NACO) விமானக் கட்டுமான நிறுவனம், பாரீஸைச் சேர்ந்த ஏடிபி ஆகியவை நட்சத்திர விமான நிலையை வடிவமைப்பு பணியில் ஈடுபட்டுள்ளன.
இக்கட்டிடத்தின் உட்புற அமைப்புகள் சீனக் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் வகையில் உள்ளது. விமான நிலையத்தின் தூண்கள் ஒவ்வொன்றும் இரும்புக் கம்பிகளால் இணைக்கப்பட்டுள்ளன. இந்த விமான நிலையமே சுற்றுலாத் தலம்போல் ரசனையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.