இரண்டே நாளில் வீடு கட்டும் ரோபோ

இரண்டே நாளில் வீடு கட்டும் ரோபோ
Updated on
1 min read

கதையாகச் சொல்லிக் கேட்டிருப்போம், ‘இனி எல்லாத்துக்கும் இயந்திரம் வந்துவிடும். மனுஷனை மாதிரியே எல்லா வேலைகளையும் செய்யும்’ என்று. ஆனால் இப்போது மனுஷன் மாதிரியே இல்லை. மனுஷனை விடப் பல மடங்கு வேலைகளைச் செய்யக் கூடிய இயந்திரம் வந்துவிட்டது. ஹாட்ரியன் என்று பெயரிடப்பட்டுள்ள அந்த ரோபோ இயந்திரம் கட்டுமானத் துறை பணிகளுக்காகக் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதன் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டே நாளில் ஒரு வீட்டைக் கட்டி முடித்துவிடுவோம்.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மார்க் பிவேக் என்னும் பொறியாளர்தான் இந்த இயந்திரத்தைக் கண்டுபிடித்துள்ளார். இங்கிலாந்தில் உள்ள பழமையான ஹார்டியன் சுவரை நினைவூட்டும் வகையில் இந்தச் சுவருக்கு கார்டியன் எனப் பெயரிட்டுள்ளார் பிவேக். ஹார்டியனில் முக்கியப் பணி, செங்கற்களை அடுக்குவதுதான். ஹார்டியன் இயந்திரத்துடன் சிமெண்ட் கலவையும் இணைக்கப்பட்டிருக்கும்.

ஹார்டியன் தன் இயந்திரக் கைகொண்டு முதலில் செங்கல்லை எடுத்து, அந்த சிமெண்ட் கலவையின் உள்ளே அதன் மேற்புறத்தில் படுமாறு அழுத்தும். இப்போது செங்கல்லின் ஒரு பாகம் மட்டும் பிடிப்புக்கான சிமெண்ட்டுடன் இருக்கும். இதை அப்படியே அதன் கைகொண்டு கட்டுமானத்தின் மீது வைக்கும். இப்படி ஒன்று ஒன்றாக அடுக்கி வைக்க, கட்டிடம் உயரும். இப்படியாக ஒரு மணி நேரத்தில் ஆயிரம் செங்கல்லை அடுக்கிவைக்கும் திறன் ஹார்டியனுக்கு உண்டு. 3டி பிரிண்டரின் தொழில் நுட்பத்தை முன்மாதிரியாகக் கொண்டு இது உருவாக்கப்பட்டுள்ளது.

பிவேக் இது பற்றிக் கூறும்போது, “6000 வருடங்களுக்கு முன்பிருந்தே நாம் செங்கல்லைக் கொண்டு வீடு கட்டி வருகிறோம். இதில் ஏதாவது புதுமையைச் செய்ய வேண்டும் என விரும்பினேன். அதன் விளைவுதான் ஹார்டியன்” என்கிறார். ஹார்டியன் முழுக்க கணினி மூலம் கட்டுப்படுத்தக்கூடியது. இதைத் தன் சகோதரருடன் இணைந்து உருவாக்கியுள்ள பிவேக்கிக்கு 10 வருடங்கள் வரை ஆனது. பிவேக் விமானத்துறையில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். இயந்திரவியலிலும் விமானவியலிலும் ஆழ்ந்த அறிவு அனுபவமும் உள்ளவர். “இன்னும் சில மாற்றங்கள் செய்தாலே போதுமானது இந்த ஹார்டியனைப் பொது உபயோகத்துக்குக் கொண்டுவந்துவிடலாம்” என உறுதி கூறுகிறார் அவர்.

ஃபாஸ்ட் பிரிக்ஸ் (Fastbrick Robotics) என்னும் நிறுவனத்தைத் தன் சகோதரருடன் இணைந்து பிவேக் தொடங்கியுள்ளார். இந்த நிறுவனத்துக்கு டிஎம்ஒய் என்னும் முதலீட்டு நிறுவனம் பண உதவிசெய்யத் தயாராக உள்ளது. இது மட்டுமல்லாது அவருக்கு அரசும் உதவ முன்வந்துள்ளது. கூடிய சீக்கிரம் ஹார்டியனைத் தயாரிக்கும் பணிகளை பிவேக் தொடங்கவுள்ளார். சீக்கிரம் நம் நாட்டிலும் ஹார்டியன் வேலை செய்யப் போவதை நாமும் பார்ப்போம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in