

கனி
ஒரு நாளை யோகா போன்ற உடற்பயிற்சியுடன் தொடங்குவது சிறந்த விஷயம். உங்களுடன் நீங்கள் தொடர்பை ஏற்படுத்திக்கொள்வதற்கான வழியாக யோகா செயல்படுகிறது. காலை, மாலை என இரண்டு வேளையிலும் நீங்கள் யோகா பயிற்சியை மேற்கொள்ளலாம். யோகா வகுப்புகளிலோ, பூங்காக்களில் யோகா குழுவுடன் பயிற்சி மேற்கொள்வது போல உங்கள் வீட்டிலும் பிரத்யேகமான இடத்தை வடிவமைத்தோ யோகா பயிற்சிகளைச் செய்யலாம். யோகா பயிற்சிக்கென்று தனியாக ஒரு அறை தேவையில்லை. வீட்டின் ஒரு மூலையைக்கூட யோகா பயிற்சிக்கான இடமாக மாற்றிக்கொள்ளலாம்.
எங்கு அமைக்கலாம்
நீங்கள் யோகா பயிற்சி செய்யத் தேர்ந்தெடுக்கும் இடம் வெளிச்சமாக, காற்றோட்டமாக இருக்க வேண்டியது அவசியம். தோட்டத்துக்கு அருகில் இருக்கும் அறை, ஜன்னலுக்கு வெளியே பசுமை தெரியும் இடம், செடிகள் இருக்கும் பகுதி என ஏதோவொரு விதத்தில் இயற்கையுடன் இணைந்து யோகா செய்வது பொருத்தமாக இருக்கும். அதேபோல், இயற்கையான வெளிச்சம் கிடைக்கும் இடத்தில் நீங்கள் யோகா செய்யும் இடம் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். இயற்கையான வெளிச்சம் இல்லையென்றால் ‘எல்இடி’ விளக்குகளைப் பயன்படுத்தலாம்.
வாசனை
யோகா பயிற்சிகளின்போது ஆழமான மூச்சுப் பயிற்சி செய்ய வேண்டியிருக்கும். அதனால் நீங்கள் யோகா பயிற்சி மேற்கொள்ளுமிடத்தில் கூடுமானவரை காற்றோட்டம் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். மிதமான வாசனை மெழுகுவர்த்திகள் யோகா பயிற்சிகளுக்கு ஏற்றவை. யோகா அறையின் வாசத்தையும் அதை வடிவமைக்கும்போது கவனத்தில் எடுத்துக்கொள்வது அவசியம்.
தடுப்பான்கள்
யோகா செய்வதற்கென்று தனியாக ஒரு அறையை ஒதுக்க முடியாவிட்டால், மூங்கில் அல்லது மரத்தாலான திரைகளை அறைப் தடுப்பான்களாகப் பயன்படுத்தலாம். அத்துடன், மனதை ஆற்றுப்படுத்தும் நேர்மறையான மேற்கோள்களைச் சுவரொட்டிகளாக மாட்டிவைக்கலாம். மென்மையான யோகா பாய்கள், வசதியான ‘குஷன்’கள் போன்றவற்றைத் தேர்ந்தெடுப்பதும் அவசியம்.
இசை கேட்கலாம்
யோகா பயிற்சி செய்யும் இடத்தில் இசையைக் கேட்பதற்கான ஒலிபெருக்கிகளைப் பொருத்துவதற்கு ஓர் இடத்தை ஒதுக்கலாம். யோகா, தியானம், உடற்பயிற்சியைச் செய்யும்போது இசையைக் கேட்டபடி செய்யலாம். பறவைகளின் ஒலி, அருவி விழும் சத்தம், மழையின் ஓசை என இயற்கையான சத்தங்களின் பின்னணியில் யோகா செய்வது பொருத்தமானதாக இருக்கும்.