பத்திரப்பதிவுச் சீர்திருத்தம் 03: நில அளவைத் துறையைப் பத்திரப்பதிவுடன் இணைக்க வேண்டும்!
ஏழுமலை
கூட்டுப் பட்டாக்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே சென்றது. இதனால் ஒரு நிலத்துக்கு உரிமையாளர்கள் பலரின் பெயரில் உள்ள கூட்டுப் பட்டாவைப் பிரித்துத் தனிப் பட்டா வழங்க 1981-ம் ஆண்டு தமிழக அரசால் தொடங்கப்பட்டதுதான் நில உடைமைப் பதிவு மேம்பாட்டுத் திட்டம். நில உடைமைப் பதிவு மேம்பாட்டுத் திட்ட பணிக்காக 1981-ம் ஆண்டு நில அளவைத் துறைக்குப் பணியாளர்கள் 12 ஆயிரம் பேர் தொகுப்பு ஊதியத்தில் நியமிக்கப்பட்டார்கள்.
கிட்டதட்ட 8 ஆண்டுகள் இந்தப் பணி நடந்து முடிந்து அதில் ஏற்பட்ட குறைபாடுகளை நிவர்த்திசெய்ய UDR to UDR என்ற குறை நிவர்த்தித் திட்டமும் செயல்படுத்தப்பட்டது. இருந்தும் இந்தத் திட்டத்தின் நில அளவைத் துறை உயர் அதிகாரிகளின் அவசரத்தாலும் அலட்சியத்தாலும் அனுபவ சுவாதீனம் என்ற ஒரே அடிப்படையில் எல்லைகள், உட்பிரிவு, மாறுபாடு, பரப்பளவு வித்தியாசம் போன்ற குறைகள் இருந்தன. இவை நீதிமன்றத்தாலும் வருவாய்த் துறையாலும் நில அளவைத் துறையாலும் தீர்க்கப்படாமலேயே உள்ளன.
முப்பது ஆண்டுகளுக்கு ஒரு முறை நிலங்கள் அளவை செய்யப்பட்டு ஆவணங்கள் தயாரிக்கப்பட வேண்டும் என்பது நில அளவைத் துறை முன்னோடிகளால் ஏற்படுத்தப்பட்ட விதி. 1867, 1912, 1923, 1971, 1981 ஆண்டுகளில் நில அளவையும் மறு நில அளவையும் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டன. 1971க்கு முன்புவரை சொத்துப் பரிமாற்றம் மிகக் குறைவாகவே இருந்தது. அதனால் வருவாய்த் துறை ஆவணங்களில் பட்டாக்கள் கூட்டுப் பட்டாக்களாகவே பதிவுசெய்யப்பட்டன.
தற்போது வருவாய்த் துறை, நில அளவைத்துறை ஆகிய துறை ஆவணங்களைப் பத்திரப் பதிவுத் துறையுடனே இணைக்க வேண்டும். பத்திரத்தில் உள்ள செக்குபந்திக்குப் பதிலாக வரைபடம் பதிவுசெய்து இணைத்து சர்வே எண்ணின் எந்தப் பகுதியில் சொத்துப் பரிமாற்றம் ஏற்படுகிறதோ அதை அடையாளம் காண்பித்து அதன் கீழ் நில அளவர் சான்றளிக்க வேண்டும். வருவாய்த் துறையில் இயங்கும் நில அளவைத் துறை தன் பணியைப் பத்திரப் பதிவுத் துறையின்கீழ் செய்ய வேண்டும்.
கட்டுரையாளர்,
ஓய்வுபெற்ற நில அளவையர்.
