வீடு கட்டலாம் வாங்க 02: வீட்டின் முகப்பு வடிவமைப்பு அவசியமா?

வீடு கட்டலாம் வாங்க 02: வீட்டின் முகப்பு வடிவமைப்பு அவசியமா?
Updated on
2 min read

ஜீ.முருகன்

நகரில் இன்று கட்டப்பட்டிருக்கும் வீடுகளில் 90 சதவீத வீடுகளின் முன் பகுதியில் செய்திருக்கும் முகப்பு வடிவமைப்பு (Elevation design) எடுத்துவிட்டுப் பார்த்தால் எல்லா வீடுகளும் தீப்பெட்டி போலவே (கனசதுரமாகவே) தென்படும். இதற்காகவே சிலர் லட்சங்களைச் செலவிடுகிறார்கள். நிழலைக் கொடுப்பது, மழையைத் தடுப்பது என அது எந்த வேலையையும் செய்யாமல் பிராதனக் கட்டிடத்தில் பகட்டாக ஒட்டிக்கொண்டிருக்கும்.

இதெல்லாம் வீண் செலவு என அவர்களுக்குத் தெரிவதில்லை. ஏராளமான பணத்தைக் கையில் வைத்திருப்பவர்களோ, மாத வருமானம் அதிகம் உள்ளவர்களோ இந்த விரயத்தைச் செய்யலாம். ஆனால் பல வருஷங்களாகச் சேமித்து, வங்கிக் கடன் வாங்கி வீடு கட்டுபவர்களுக்கு தேவையில்லாத செலவு இது. அதனால் வீட்டுக்கான வரைபடம் தயாரிக்கும்போதே இதற்கான திட்டத்தை நீங்கள் உருவாக்கிக்கொள்வது சிறந்தது.

பெரும்பாலானவர்கள் செய்வது மனை இத்தனை அடி நீளம் அகலம், வீடு எந்த திசையைப் பார்த்திருக்கிறது என்பதைப் பொறுத்து அந்த எல்லைக்குள் வாஸ்து சாஸ்திரப்படி சமையலறை, படுக்கையறை, பூஜையறை, கழிப்பறை போன்றவற்றை நிர்ணயித்து ஒரு எளிமையான வரைபடம் வரைந்து வேலையைத் தொடங்கிவிடுகிறார்கள்.

பில்லர் அமையும் இடைத்தை மார்க் செய்து அடித்தளம் போட்டு, சுவர் எழுப்பி, கான்கிரீட்டும் போட்டுவிடுவார்கள். அதன் பிறகு பூச்சுவேலை நடக்கும்போதுதான் அதை எப்படி அழகுபடுத்துவது என்ற யோசனையே வரும். எலிவேஷன் செய்வதற்கென்றே வேறு மேஸ்திரிகள் இருப்பார்கள். அவர்கள்தாம் சில ஆயிரங்களை வாங்கிக்கொண்டு சிமெண்ட் கலவையில் வட்டமாகவும் சதுரமாகவும் பல வடிவங்களைப் பூசி வீட்டை அழகாக்கித் தருவார்கள். வண்ணம் பூசுபவர் அதற்கு உலகத்தில் இருக்கும் எல்லா வண்ணங்களையும் அடித்து மேலும் அழகூட்டுவார். சிலர் டைல் ஒட்டி அழகுபடுத்துகிறார்கள்.

அப்படி இல்லாமல் ஆரம்ப வரைபடம் தயாரிக்கும்போதே, அமையவிருக்கும் வீட்டின் முப்பரிமாணத்தையும் யோசித்துவிட்டால் அடித்தள வடிவத்தில் சில மாற்றங்களைச் செய்துகொள்ளலாம். அதற்கு மேல் எந்த இடத்தில் சுவர் வேண்டும் எந்த இடத்தில் அவசியமில்லை என்பதை முடிவுசெய்து கட்டுமானத்தை வளர்க்க வேண்டும். இப்படி முன் திட்டத்துடன் செயல்படுத்தும் வீட்டுக்கு முகப்பு வடிவமைப்பு என்கிற தேவையில்லாத செலவு குறைக்கப்படும்.
சில இடங்களில் செங்கல் சுவர்களுக்குப் பதில் கருங் கற்களையோ வெளித்தெரியும் செங்கல்லையோ (exposed brick) பயன்படுத்திக் கட்டுவதன் மூலம் வீட்டின் அழகைக் கூட்டலாம். சிமெண்ட் பூசி வண்ணம் அடிக்கவும் தேவையில்லை.

இப்படி இல்லாமல் பலரும் செங்கல் சுவரை எழுப்பிவிட்டுக் கருங்கல் சுவர்போல டைல் ஒட்டிக் கொள்கிறார்கள். இது செயற்கையாக இருப்பதோடு செலவும் கூடுதலாகிறது. சுவர் கட்டும்போதே இதை யோசித்து விட்டால் இதெல்லாம் தேவை இல்லைதானே?
வீட்டைத் தாங்கும் பில்லர்களின் வரிசை நேர் நேராக இருப்பது நியாயம்தான். அதற்காக வீட்டை நீள் சதுரமாக மட்டுமே கட்ட வேண்டும் என்ற ஏதாவது விதி இருக்கிறதா? வீட்டின் முன்புற மூலைகளை வட்ட வடிவிலோ, திரிகோண வடிவிலோ மாற்றி அமைப்பதன் மூலம் வீட்டைத் தட்டைத் தன்மையிலிருந்து விடுவிக்கலாம். இப்படி மாற்றும்போது பில்லர் அமையும் இடமும் மாறும். மாறட்டுமே. அதற்குத் தகுந்தாற்போல டைபீம் அமைப்பை மாற்றிக்கொள்ளலாம். இந்தச் சிக்கலைப் பொறியாளர்களோ, கொத்தனார்களோ எதிர்கொள்ளத் தயங்குகிறார்கள். வீட்டு உரிமையாளர் இதில் உறுதியாக இருந்து அவர்களிடம் இதைச் செயல்படுத்திக்கொள்ள வேண்டும்.

லோடு பியரிங் முறையில் அடித்தளம் அமைக்க முடிவு செய்துவிட்டால் இந்த பில்லர் சிக்களிலிருந்தும் விடுபட்டுவிடலாம். வட்டமாகவோ, அறுகோண வடிவத்திலோ வீட்டைக் கட்டிக் கொள்ளலாம். வட்ட வடிவக் கட்டிடங்களையே புகழ்பெற்ற இயற்கைக் கட்டிடக் கலைஞர் லாரி பேக்கர் முன்மொழிந்தார்.
வீட்டின் ஒவ்வொரு பகுதியும் அவசியம் கருதியும் அர்த்தபூர்வமாகவும் மட்டுமே அமைக்கப்பட வேண்டும். அவற்றை எப்படி நேர்த்தியாகக் கட்டுவது என்பதில் கவனம் செலுத்தினாலே போதும் வீடு அழகாக நின்றுவிடும்.
வீட்டின் ஆதார வடிவமே அழகாக இருந்துவிடுமானால் முகப்பு வடிவமைப்பு எதற்கு?

கட்டுரையாளர், எழுத்தாளர்,
தொடர்புக்கு:
gmuruganjeeva@gmail.com

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in