

விபின்
மகாத்மா காந்தி கிராமப் பொருளாதாரத்துக்கும் தன் பங்களிப்பை நல்கியுள்ளார். பசுமைக் கட்டிட வடிவமைப்பும் அதில் அடக்கம். காந்தி தென்னாப்பிரிக்காவில் இருந்தபோது தன் நண்பர்களுடன் இந்தப் பசுமைக் கட்டிட வடிவமைப்பு பற்றிப் பேசியிருக்கிறார். காந்தியின் இந்தப் பசுமைக் கட்டிடக் கலைத் தத்துவத்தால் வடிவமைப்பாளர்கள் பலரும் ஈர்க்கப்பட்டனர். லாரி பேக்கர், நாரிமன் காந்தி போன்றவர்கள் அவர்களுள் குறிப்பிடத்தகுந்தவர்கள்.
காந்தி, ஒரு வீடு எப்படி இருக்க வேண்டும் என்பதைப் பற்றித் திட்டமான அபிப்ராயம் வைத்திருந்தார். ஒரு வீடு கட்டப்படும் சுற்றுப்பகுதியில் கிடைக்கும் கட்டுமானப் பொருட்களைக் கொண்டுதான் வடிவமைக்கப்பட வேண்டும். அந்தப் பகுதியில் கிடைக்கும் மண், கிடைக்கும் கல், மரங்கள் ஆகிவற்றைக் கொண்டுதான் வீடு உருவாக்கப்பட வேண்டும். மேலும் வீட்டின் வடிவமைப்பு, இயற்கை ஒளியை, காற்றை அனுமதிப்பதாக இருக்க வேண்டும். காந்தி வாழ்ந்த அவரது சபர்மதி ஆசிரமம் இப்படித்தான் வடிவமைப்பட்டது.
ஆனால், அதற்கு முன்பே தென்னாப்பிரிக்காவில் இருந்தபோது தன் நண்பர் ஹெர்மன் கல்லென்பேக்குக்கு இதைப் பற்றிச் சொல்லியிருக்கிறார். காந்தி சொன்னதன் அடிப்படையில் ஆப்பிரிக்கக் கட்டிடக் கலையில் க்ரால் வீட்டை அவர் கட்டினர். அந்த வீட்டில் காந்தி 5 வருடங்கள்வரை வாழ்ந்ததாகச் சொல்லப்படுகிறது. அதன் பிறகு ஹெர்மன் உதவியால்தான் புகழ்பெற்ற டால்ஸ்டாய் பண்ணையை ஜோகன்னஸ்பெர்க் அருகில் காந்தி உருவாக்கினர். இங்கும் காந்தி சில காலம் வாழ்ந்தார். இதுபோல் காந்தி வாழ்ந்த சில வீடுகளின் ஒளிப்படத் தொகுப்பு இது: