வீடு கட்டலாம் வாங்க 01: வீட்டைத் தேடி ஒரு பயணம்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் 
ஜீ. முருகன் கட்டியுள்ள வீடு
திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் ஜீ. முருகன் கட்டியுள்ள வீடு
Updated on
2 min read

ஜீ. முருகன்

வீடு கட்டத் தொடங்கும் முன் பல்வேறு இடங்களுக்குப் பயணம்செய்து பல்வேறு தொழில்நுட்பங்களில் கட்டப்பட்ட வீடுகளைப் பார்ப்பது சிறந்தது. அவற்றின் உரிமையாளர்களிடம், முடியுமானால் அவற்றின் பொறியாளர்களிடமும் உரையாட வேண்டும். இந்த அறிவு உங்களுக்குத் பல தெளிவுகளையும் தைரியத்தையும் கொடுக்கும்.

குறைந்தது மூன்று தலைமுறையாவது வசிக்கப்போகும் ஒரு வீட்டைக் கட்ட ஏன் இப்படியான பயணத்தை மேற்கொள்ளக் கூடாது, பல லட்சம் போட்டு வீடு கட்டப் போகும் நீங்கள் ஏன் சில ஆயிரங்களை இந்தத் தேடுதலுக்காகச் செலவிடக் கூடாது?

நீங்கள் புதிதாக ஏதாவது முயன்றால் அதை உங்கள் குடும்பம் எளிதில் ஏற்றுக்கொள்ளாது. நாம் ஏற்கெனவே பழக்கப்பட்டிருக்கும் ஒரு வீடுதான் அவர்கள் மனத்தில் இருக்கும். “இவ்வளவு செலவு செய்து கட்டும் வீட்டில் என்ன விஷப்பரிட்சை?” என்பார்கள். எனவே, வித்தியாசமான சிறப்பாகக் கட்டப்பட்ட ஒரு வீட்டைப் பார்க்கப் போகிறீர்கள் என்றால் அவசியம் உங்கள் மனைவியையும் உடன் அழைத்துச் செல்வதே உத்தமம்.

அது போன்ற வீட்டை அவர்கள் பார்ப்பதும் அங்கு வசிக்கும் பெண்களுடன் அவர்கள் உரையாடுவதும் உங்கள் வேலையைச் சுலபமாக்கிவிடும், பல தடைகள் தகர்க்கப்பட்டுவிடும். வெறும் களிமண்ணாலோ, கருங்கற்களைக் கொண்டோ, சுவர் பூசப்படாத, சுட்ட செங்கற்களைக் கொண்டோ, சுடப்படாத அழுத்தப் பட்ட மண் கற்களைக் கொண்டோ, இன்டர்லாக் கல்லைக் கொண்டோ கட்டப்பட்ட வீடுகளைப் பார்க்கிறீர்கள் என்றால் அவற்றை ஒளிப்படமாவது எடுத்து வந்து உங்கள் மனைவியிடம் காட்டுங்கள். ஒரு கட்டத்தில் அவர்கள் உங்கள் வழிக்கு வந்துவிடுவார்கள்.

சிமெண்ட் பூசி, வண்ணம் அடித்த பகட்டான வீடுகளைப் பார்த்து வியந்து பழக்கப்பட்ட நம் மனத்தை இயற்கையோடு இணைந்த ஒரு நிலைக்குக் கொண்டு வந்து சேர்ப்பது அவ்வளவு எளிதல்ல. இது திரும்புதல். முன்னே செல்லவே பழக்கப்பட்ட நம் மனத்தைப் பின்னுக்கு இழுப்பது சற்றுக் கடினம்தான். ஆனால், அந்தத் தேவை உணரப்படும்போது அதற்கு இடமளிப்பது பெரிய சிரமமான காரியமல்ல.
மண்ணின் நிறம்தான், கற்களின் நிறம்தான் உண்மையான அழகு என்று ஒரு மனம் ஒப்புக்கொண்டுவிட்டால், சிமெண்ட் பூசி, வண்ணம் அடிக்கப்பட்டு செல்வத் திமிரோடு நிற்கும் வீடுகளைப் பார்க்கும்போது அந்த மனம் அசூயை கொள்ளத் தொடங்கிவிடும்.

இயற்கை சார்ந்த, திண்ணை, முற்றம் போன்ற மரபுக் கூறுகள் கொண்ட வீட்டைக் கட்ட ஆயிரம் தடைகள் இருந்தாலும் அது கட்டி முடிக்கப்பட்ட பின் அதற்கான வரவேற்பையும் மதிப்பையும் பெற்று விடும் என்பது உறுதி. உங்கள் மனைவியே பலரிடம் பெருமைப்பட்டுப் பேசிக்கொள்வார்கள். உங்கள் பகுதிக்குச் சிறந்த முன்னுதாரண மாகவும் உங்கள் வீடு மாறிவிடும்.

தமிழின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுள் ஒருவர் ஜீ.முருகன். இவர் திருவண்ணாமலை அருகில் செங்கத்தில் பசுமைக் கட்டுமான முறையில் வீடு கட்டியிருக்கிறார். இந்தியப் பசுமைக் கட்டிடக் கலை முன்னோடி லாரி பேக்கரின் கட்டிடக் கலை முறை தந்த உந்துதலால் தனது வீட்டை அதே முறையில் வடிவமைத்துள்ளார். இதற்காக அவர் எதிர்கொண்ட சவால்கள், வீடு கட்டப் போகும் ஒவ்வொருவரும் தெரிந்துகொள்ள வேண்டியவை. அந்த அனுபவங்களை இந்தத் தொடரில் அவர் பகிர்ந்துகொள்ள இருக்கிறார்.

கட்டுரையாளர் தொடர்புக்கு: gmuruganjeeva@gmail.com

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in