

ஜெகதா குமார்
சொந்த வீடு என்பது பலருக்கும் வாழ்நாள் கனவாக இருக்கும். சிலருக்கு அது இயற்கையாகவே அமைந்திருக்கும். எங்களுக்கு அது தர்மசங்கடத்திலிருந்து உருவானது. ஒருவிதத்தில் அதைத் தெய்வச் செயல் என்றும் கூறலாம்.திருச்சியில் எஸ்.பி.எஸ். காலனியில் நாங்கள் கட்டியுள்ள இந்த வீட்டுக்கான தொடக்கப்புள்ளி பத்தாண்டுகளுக்கு முன்பு தொடங்கியது.
அதற்கு முன்னால் சொந்த வீடு தரும் சுதந்திரம் பற்றி ஒன்றும் தெரியாது. ஏனெனில், என் பிறந்த வீட்டில் நாங்கள் ரயில்வே காலனியில் வசித்து வந்தோம். என் அப்பா ரயில்வேயில் வேலை பார்த்தார். அந்த வீட்டை நாங்கள் சொந்த வீட்டைப் போல்தான் பாவித்தோம். அதனால் வாடகை வீட்டின் சிக்கல்கள் எனக்குத் தெரியாது. அண்டை வீட்டாரும் எங்களுடன் சிநேகத்துடன் பழகினர். ஆணி அடித்தாலே, வேறு எதுவும் சப்தம் கேட்டாலும் பக்கத்து வீட்டுக்காரர்கள் எதுவும் சொல்ல மட்டார்கள். வீட்டுக்கு சொந்தக்காரர்கள் வந்தாலும் பிரச்சினை இல்லை. ஆனால், நான் வாழ்க்கைப்பட்டு போன இடம் வாடகை வீடு.
என் அத்தை மகனைத்தான் நான் திருமணம் செய்துகொண்டேன். வாடகை வீட்டின் உரிமையாளர் பக்கத்திலேயே இருந்தார். அவர்கள் அன்பாகப் பழகினாலும் வீட்டு விஷயத்தில் கொஞ்சம் அதிகக் கவனத்துடன் நடந்துகொள்வார்கள். எங்கள் வீட்டில் சிறிய ஓசை கேட்டுவிட்டாலே பூகம்பம் வந்த அதிர்ச்சியுடன் ஓடிவந்து பார்ப்பார்கள். என் கணவர் ஒரு தேங்காய்ப்பூத் துண்டு வாங்கிவந்திருந்தார். ஒருநாள் அந்தத் துண்டைத் துவட்டுவதற்காக எடுத்து உதறியபோது ‘டப்’ என்ற சத்தம் வந்தது. அவ்வளவுதான் வீட்டின் உரிமையாளர் தன் மனைவி, குழந்தைகளுடன் வந்துவிட்டார். “கதவைப் பார்த்து மூடக் கூடாதா?” எனக் கேட்டனர். அவர்கள் கேட்ட தொனியில் எனக்கு அழுகையே வந்துவிட்டது.
“அது கதவை மூடிய சத்தம் அல்ல. துண்டை உதறியதால் வந்த சத்தம்” என நாங்கள் எடுத்துக் கூறியும் அவர்கள் அதை நம்பவில்லை. அவர்கள் பிடித்தபிடியில் இருந்தார்கள். என்னால் அந்தச் சம்பவத்தைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. என் கணவர் என்னைத் தேற்றினார். ஆனால் எனக்கு மனது கேட்கவில்லை. “கவலைப்படாதே நாம் ஒரு சொந்த வீடு கட்டிவிடலாம்” என என் கணவர் சமாதானம் கூறினார். “பைசாவே இல்லை, எப்படி வீடு கட்டுவீர்கள்?” என நான் கேட்டதற்கு, “ஒரு குடிசை வீடாவது உனக்குக் கட்டித் தருகிறேன்” என்றார். அதற்குப் பிறகு நான் அதை மறந்துவிட்டேன்.
ஒருநாள் நாங்கள் தெருவில் நடந்துகொண்டிருந்தபோது அந்த வழியே சென்ற ஒரு பெண் எங்கள் அருகில் வந்து “நீங்கள் சீக்கிரம் சொந்த வீடு கட்டுவீர்கள்” என்றார். எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. ஆனால், அதைக் கடமைபோல் சொல்லிவிட்டு அவர் சென்றுவிட்டார்.
எங்களுக்கு இது ஆச்சரியமாக இருந்தது. ஆனால், ஒரு மாதம் சென்று பிறகு நாங்கள் சீட்டுக் கட்டிச் சேமித்த 1,66,000 ரூபாய் கைக்குக் கிடைத்தது. எங்களுக்கு அது பெரிய நம்பிக்கையைத் தந்தது. இதை வைத்து வீட்டு வேலையைத் தொடங்கிவிடலாம் எனத் தீர்மானித்தோம். அத்துடன் கொஞ்சம் கடன் வாங்கினோம். வங்கிக் கடன் வாங்கினோம்.
அப்படி இப்படிச் சிரமப்பட்டு எப்படியோ 2008-ல் எங்கள் கனவு இல்லத்தைக் கட்டி முடித்தோம். இந்த வீட்டைக் கட்ட என் அம்மாவும் உறவினர்களும் உருதுணையாக இருந்தனர். பத்து வருடத்தில் வங்கிக் கடனையும் அடைத்துப் பத்திரத்தைக் கையில் வாங்கிவிட்டோம். அந்தத் தருணம் மிகப் பெரிய நிம்மதியையும் மன மகிழ்ச்சியையும் தந்தது. இறைவன் அருளும் எங்கள் முயற்சியும் இந்த சொந்த வீட்டுக் கனவை நனவாக்கியது.
| என் வீடு என் அனுபவம் வீடு வாங்குவது, சொந்த வீடு, |