

கனி
வீட்டை வாங்கியவுடன் அதற்கு வெள்ளையடிப்பதைப் பற்றித்தான் முதலில் யோசிப்போம். பலரும் வீடு முழுக்க வெள்ளை நிறத்தை அடித்து முடித்தவுடன்தான் மற்ற அம்சங்களைப் பற்றிச் சிந்திப்பார்கள். சில அறைகளில் அற்புதத்தை நிகழ்த்தும் இந்த வெள்ளை நிறம், சில அறைகளுக்குப் பொருந்தாது. மற்ற நிறங்களைப் போல வெள்ளை நிறத்துக்கும் வெப்பநிலை, ஒளிப் பிரதிபலிப்பு, பராமரிப்புத் தேவைகள் போன்ற அம்சங்கள் இருக்கின்றன. வெள்ளை நிறத்தை வீட்டில் பயன்படுத்தும்போது கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டிய அம்சங்கள்:
இயற்கையான வெளிச்சம்
ஓர் அறைக்கு முழுமையாக வெள்ளை நிறம் அடிப்பதற்கு முன்னால், அதன் தன்மையைத் தெரிந்துகொள்வது அவசியம். மதிய வெயில் படாத அறைகளில் சாம்பல்-நீல வெளிச்சம் கிடைக்கும். அப்படியிருக்கும் அறைகளுக்கு வெள்ளை நிறத்தைப் பயன்படுத்துவது பொருத்தமாக இருக்கும். அவற்றின் வெளிச்சத்தை மேம்படுத்துவதற்கு இது உதவும். படுக்கையறை, உடற்பயிற்சி அறை, அலுவலக அறை போன்ற அறைகள் இதற்கு ஏற்றவையாக இருக்கும். ஆனால், அதே வெள்ளை நிறம் தெற்கு நோக்கி இருக்கும் அறைக்குப் பொருந்தாது.
தெற்கு வாசல் கொண்ட அறைகளாக இருக்கும்பட்சத்தில், வெள்ளை நிறத்தை சிவப்பு, மஞ்சள், ஆரஞ்சு போன்ற வண்ணங்களுடன் சேர்த்து பயன்படுத்துவது ஏற்றதாக இருக்கும். வடக்கு வாசல் கொண்ட அறைகளுக்கு, நாளின் பெரும்பாலான நேரம் சூரிய வெளிச்சம் கிடைக்கும். அந்த அறைக்குச் சிவப்பு-மஞ்சள் வெளிச்சம் இயல்பாகவே கிடைக்கும். பெரிய ஜன்னல்கள் இருக்கும் அறையாக இருந்தால், வெள்ளை நிறத்துடன் சாம்பல் நிறத்தையும் பயன்படுத்தலாம். இது அறையின் பிரதிபலிப்புத் தன்மையைக் கூடுதலாக்கும்.
கலை அரங்கச் சுவர்கள்
கலை அரங்கங்களின் சுவர்களுக்கு வெள்ளை நிறத்தைப் பயன்படுத்துவதற்குக் காரணம் இருக்கிறது. ஏனென்றால், வெள்ளை நிறம் அறையின் கட்டிடக்கலை நுணுக்கங்களை மட்டுப்படுத்தும். இதனால், பார்வையாளர்களின் கவனம் இயல்பாகவே கலைப் படைப்பின் மீது விழும். இந்த நுட்பம் வீடுகளுக்கும் பொருந்தும்.
நீங்கள் கலை ஆர்வலராக இருக்கும்பட்சத்தில் தயக்கமின்றி உங்கள் வரவேற்பறைக்கு வெள்ளை நிறத்தைப் பயன்படுத்தலாம். உங்கள் ரசனைக்கேற்ற கலைப் படைப்புகளை வரவேற்பறைச் சுவரில் மாட்டிவைக்கலாம்.
முழு வெள்ளை வேண்டாம்
செம்மையான பண்புகொண்ட நிறங்களில் வெள்ளை நிறத்துக்குக் கூடுதல் முக்கியத்துவம் உண்டு. ஆனால், அதற்காக வீட்டுக்கு முழுமையாக வெள்ளை நிறத்தைப் பயன்படுத்துவது பொருத்தமாக இருக்காது. அதனால், வெள்ளை நிறத்தைப் பயன்படுத்தும்போது அதனுடன் எந்த மாதிரியான வண்ணங்களைச் சேர்த்துப் பயன்படுத்தலாம் என்பதைத் தீர்மானிப்பது அவசியம்.
விசாலமாக்கும் வெள்ளை
வெள்ளை நிற அறைகள், ஒளிப் பெருக்கத்தால் விசாலமாகத் தெரியும். வெள்ளை நிறம் பயன்படுத்தப்பட்டிருக்கும் அறைகளில் நிழல்களும் முனைகளும்கூட காணாமல் போகும். உங்கள் வீட்டில் இருப்பதிலேயே சிறிய அறைக்கு வெள்ளை நிறத்தைப் பயன்படுத்துவது ஏற்றதாக இருக்கும்.
அமைப்புகள்
எந்த வடிவமைப்பும் இல்லாமல் சுவர்களுக்குப் பயன்படுத்துவதைவிட சில அமைப்புகளுடன் (Textures) வெள்ளை நிறத்தைப் பயன்படுத்துவது அறையின் தோற்றத்தை மெருகேற்ற உதவும்.