

- ஜி.எஸ்.எஸ்
எனது நண்பர் ஒருவர் தனது சிறிய வீட்டை விற்றுவிட்டுப் பெரிய வீடு வாங்கத் தீர்மானித்தார். அவரை ஒருமுறை சந்திக்கச் சென்றிருந்தபோது பதற்றத்துடன், மிகுந்த கவலையுடன் காணப்பட்டார். காரணம் கேட்டேன், “எனக்கு இரண்டு வீடுகள் இருக்கின்றன. ஒரு வீட்டில் இருந்துகொண்டு இன்னொன்றை வாடகைக்குக் கொடுத்திருக்கிறேன். வாடகைக்குக் கொடுத்த வீட்டை விற்று விட்டுதான் பெரிய வீடு வாங்குவதாகத் தீர்மானித்திருக்கிறேன். என் வீட்டை வாங்குபவர்கள் அது காலியாக இருந்தால்தான் வாங்க விருப்பப்படுவார்கள். எனவே, அங்கே குடியிருப்பவர்களுக்கு நோட்டீஸ் கொடுத்துவிட்டேன். அவர்களும் இரண்டு மாதங்களில் காலிசெய்வதாகச் சொல்லி இருக்கிறார்கள்’’ என்றார்.
அப்புறம் எதற்காகக் கவலை என்று கேட்டேன். “வீடு விற்பனைக்கு இப்போதே ஆள் தேட வேண்டும். ஆன்லைனில் விளம்பரம் கொடுக்க இருக்கிறேன். வாங்க நினைப்பவர்கள் முதலில் வீட்டைப் பார்க்க வேண்டும் என்பார்கள். நான் இருப்பது நகரின் ஒரு கோடியில். வேலைக்குச் சென்று கொண்டிருக்கிறேன். இந்த நிலையில் எவ்வளவு பேரை நான் நேரடியாக அந்த வீட்டுக்கு அழைத்துச் சென்று காட்ட முடியும்? ஒவ்வொரு முறையும் அங்கே குடியிருப்பவருக்கு அந்த நேரம் வசதிப்படுமா என்பதை வேறு கேட்க வேண்டும். இப்படிப் பல நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன’’ என்றார்.
இது பற்றிக் கூறியபோது என் மகன் சில விவரங்களைக் கூறினான். சில நிறுவனங்கள் மேற்படிச் சூழலில் கைகொடுக்கின்றன. மூன்று மாதங்களுக்கு இவ்வளவு ரூபாய் என்று அவை உங்களிடமிருந்து வசூலித்துக்கொள்ளும். உங்கள் மூலமாக உங்கள் குடித்தனக்காரரிடம் தன்னை அறிமுகம் செய்துகொள்வார்கள். அதற்குப் பிறகு நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. தங்கள் வலைத்தளத்தில் உங்கள் வீடு தொடர்பான விவரங்களை அளிப்பார்கள். நீங்கள் எவ்வளவு தொகைக்கு அதை விற்கத் தயாராக இருக்கிறீர்கள் என்பதையும் குறிப்பிடுவார்கள். உங்கள் வீட்டைப் பலவிதக் கோணங்களில் சிறப்பாகப் ஒளிப்படங்கள் எடுத்து அவற்றையும் தங்கள் வலைத்தளத்தில் வெளியிடுவார்கள்.
விற்க விரும்புபவர் அவர்களைத் தொலைபேசியில் தொடர்பு கொள்வார்கள். அவர்களே உங்கள் குடித்தனக்காரரைத் தொலைபேசியில் அணுகி வசதியான நேரத்தில் அந்த வீட்டை வாங்க விரும்புபவர்களை அங்கு அழைத்துச் சென்று காட்டுவார்கள். அதன் பிறகு விற்கும் தொகை குறித்த பேச்சுவார்த்தையை வாங்க விரும்புபவர் நேரடியாக உங்களோடு நடத்துவார்.
ஆக, உங்களுக்குத் தேவையில்லாத தொலைபேசி அழைப்புத் தொந்தரவுகள் இருக்காது. நீங்களாகவே ஒவ்வொரு முறையும் நேரடியாகச் சென்று வீட்டைச் சுற்றிக் காட்ட வேண்டிய அவசியமில்லை. நான்கு நாட்களுக்கு ஒருமுறை யார் யார் அந்த வீட்டைப் பார்த்தார்கள் என்பது குறித்த தகவல்கள், அவர்களது தொலைபேசி எண்ணுடன், உங்களுக்கு அளிக்கப்படும். அவர்கள் உங்களை அதற்குப் பிறகு தொடர்பு கொள்ளவில்லை என்றால்கூட நீங்களே அவர்களுடன் பேசிப் பார்க்கலாம்.
ஒருவேளை நீங்கள் விற்க விரும்பும் வீடு காலியாக இருக்கிறது என்றால், அதன் சாவியை நீங்கள் அந்த நிறுவனத்திடம் கொடுத்துவிட வேண்டும் (காலியாகத்தானே இருக்கிறது. பெரிய தொந்தரவு கிடையாது). தேவையே கண்டுபிடிப்புகளின் தாய் என்பார்கள். அந்த விதத்தில் நவீன நாட்களில் நமக்கு வந்து சேர்ந்திருக்கும் இன்னொரு வசதி இது.