

முகேஷ்
பூமியின் வெப்பமாதலுக்கான முக்கியமான காரணங்களில் ஒன்று கட்டுமானத் துறை. நேரடியாகவும் மறைமுகமாகவும் இதனால் அதிக அளவில் வெப்பம் வெளியாகிறது. அதனால் கட்டுமானப் பொருட்கள் ஒவ்வொன்றுக்கும் மாற்று அவசியமானதாகிறது. கட்டுமானக் கல்லுக்கான அப்படியான ஒரு மாற்றுதான் கார்பன் பஸ்டர் கல்.
தொழிற்சாலைக் குப்பைக் கரியிலிருந்து இது தயாரிக்கப்படுகிறது. இது கரியமில வாயுவை உள்ளிழுத்துக் கொள்ளும் ஆற்றல் பெற்றது. இதனால் சுற்றுச்சூழலுக்கும் இந்தக் கல் நன்மை செய்கிறது. சுமார் ஒரு டன் எடை கொண்ட கார்பன் பஸ்டர், 14 கிலோ அளவுக்கான கார்பன் டை ஆக்ஸைடு வாயுவை உள்ளிழுத்துக் கொள்ளும். இங்கிலாந்தில் பரவலாக இந்தக் கல்லைக் கட்டுமானத்துக்குப் பயன்படுத்துகிறார்கள்.
இந்தியாவில் இந்தக் கல் கிடைக்கிறது. அனல் மின் உற்பத்தி நிலையங்கள் போன்ற ஆலைகளில் ஏராளமான பொருட்கள் எரிக்கப்படும். சாம்பலாகக் கழிவு அதிகளவில் கிடைக்கும். அப்படிக் கிடைக்கும் கழிவுகளுடன் தண்ணீரைக் கலந்து, புது வகையான கட்டுமானப் பொருளைத் தயாரிக்கிறார்கள். இந்த கார்பன் பஸ்டர் கட்டுமானப் பொருளைச் செங்கல்லாகவும், ஜல்லிக் கற்களுக்கு மாற்றாகவும் பயன்படுத்தலாம்.
கார்பன் பஸ்டரை அனல் மின் நிலையக் கழிவுகள் மட்டுமின்றி மரச் சீவல், கண்ணாடி, கிளிஞ்சல்களைக் கொண்டும் தயாரிக்க முடியும். இதுபோன்ற பொருட்களைக் கொண்டு கட்டுமானப் பொருட்களைத் தயாரிக்கும்போது கரியமில வாயும் குறைந்த அளவே வெளிப்படுவதால் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற கட்டுமானப் பொருளாக கார்பன் பஸ்டர் பார்க்கப்படுகிறது