மவுசு கூடும் கேட்டட் கம்யூனிட்டி வீடுகள்

மவுசு கூடும் கேட்டட் கம்யூனிட்டி வீடுகள்
Updated on
2 min read

ஜி.எஸ்.எஸ்.

பெருநகரங்களில் அடுக்குமாடி வீடு வாங்கத் தீர்மானிப்பவர்களில் பலர் இப்போது கேடட் கம்யூனிட்டி (Gated Community) வீடுகளை வாங்க விருப்பப்படுகிறார்கள். அதாவது வளாகத்துக்குள்ளேயே ஒரு குட்டி சமூகம்.
நாற்புறமும் சுவர்களால் சூழப்பட்ட பகுதிக்குள் வானுயர் கட்டிடங்கள். நுழைவாயில் வழியாக வீடுகளின் உரிமையாளர்களோ, அவர்களால் அங்கீகரிக்கப்பட்டவர்களோ மட்டும்தான் நுழைய முடியும். உள்ளுக்குள் சிறிய சாலைகள் இருக்கும்.

வீட்டு உரிமையாளர்களின் வாகனங்கள் நிறுத்த சமதளம், பேஸ்மெண்ட் (சில பிரம்மாண்ட அடுக்ககங்களைப் பொறுத்தவரை முதல் தளம்கூட) காணப்படும். உள்ளுக்குள்ளேயே ஜிம் வசதி இருக்கும், நீச்சல் குளம் இருக்கும். விளையாட்டு அரங்கங்கள் காணப்படும். அதாவது டென்னிஸ் கோர்ட், பேட்மிண்டன் கோர்ட் போன்றவை இருக்கக் கூடும். ஸ்பா எனப்படும் மசாஜ் மையங்கள்கூட இருக்கலாம்.

இவ்வளவு வசதிகளோ, இவற்றில் பெரும்பாலானவையோ இருந்தால் நிச்சயம் அதிக விலை கொடுத்துதான் அங்கு வீட்டை வாங்க முடியும். மேலே குறிப்பிட்ட பொழுதுபோக்கு வசதிகளைவிட வேறு ஏதாவது நன்மைகள் இதுபோன்ற வீடுகளில் உண்டா? பாதுகாப்பு என்பது முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. பரந்துபட்ட சுவர்களைத் தாண்டி உள்ளுக்குள் பிறர் வர முடியாது. வாசலில் காவலாளிகள் அனுமதிக்க மாட்டார்கள். வளாகத்துக்குள் நடைப்பயிற்சிக்கான பாதை இருக்கும். போக்குவரத்து போன்ற இடைஞ்சல் இல்லாமல் பயிற்சிகளை மேற்கொள்ள முடியும்.

பல குடும்பங்கள் ஒரே வளாகத்தில் இருக்கும்போது அவர்களது சமூக வாழ்க்கையும், ஒருங்கிணைந்து செயல்படும் தன்மையும் அதிகரிக்கும். சில நாட்களில் விருந்தாளிகள் அதிக அளவில் வந்தபோதும் அவர்கள் வண்டிகளை நிறுத்துவதற்குப் போதிய இடம் இருக்கும். வாங்கிய வீட்டை உரிய விலைக்கு வாடகைக்கு விட முடியும். அந்த விதத்தில் ஒரு நல்ல முதலீடு.

பலரும் வங்கிக் கடனைக் கொண்டு வீடு வாங்கி இருப்பார்கள். பல வங்கிகளின் வழக்கறிஞர்கள் ஆவணங்களைச் சரிபார்த்திருப்பார்கள் என்பதால் வில்லங்கம் இல்லாத வீடு உங்கள் கைக்கு வந்து சேர வாய்ப்பு அதிகம்.
குப்பை, சாக்கடை போன்ற தொல்லைகள் இல்லாமல் ஆரோக்கியமான சூழலில் நம்மால் இருக்க முடியும்.
விளையாட்டு, நீச்சல், நடைப்பயிற்சி போன்றவற்றின்போது பிற வீட்டு உரிமையாளர்களுடன் தொடர்பு ஏற்படுவது என்பது பலவிதங்களில் உதவிகரமாக இருக்கும். தொழில் முறையில்கூட இது உதவலாம். ஏதாவது அவசரம் தோன்றும்போது உதவுவதற்குச் சிலராவது இருப்பார்கள்.

வேளை கெட்ட வேளையில் விற்பனைப் பிரதிநிதிகள், நிதி உதவி கேட்பவர்கள் போன்றவர்கள் நம்மை அணுகுவது என்பது இருக்காது. வாசலில் நிற்கும் செக்யூரிட்டியே இவர்களைத் திருப்பி அனுப்பி வைத்து விடுவார்.
பின்னாளில் நீங்கள் விற்க நினைத்தால் இதை விற்பதற்கு அதிக முயற்சி எடுத்துக் கொள்ள வேண்டி இருக்காது.
இதுபோன்ற பல இடங்களில் பசுமை காணப்படும். எனவே ஆரோக்கியமான காற்று இங்கே கிடைக்க வாய்ப்பு உண்டு.

குழந்தைகளுக்கான பூங்கா இருப்பதால் அது இளம் பெற்றோருக்கு வசதியாக இருக்கும்.
வீட்டில் ஏதோ பிரச்னை காரணமாக எலக்ட்ரீஷியன், பிளம்மர், தச்சர் போன்றவர்களின் உதவி தேவைப்பட்டால் வளாக குடியிருப்போர் நலச் சங்கச் செயலாளரிடம் கூறிவிட்டால் அவர் ஏற்பாடு செய்வார். சி.சி.டி.வி. கேமராக்கள் பல இடங்களில் பொருத்தப்பட்டிருப்பது பாதுகாப்பை அதிகரிக்கும்.

சுதந்திரத் திருநாள், தீபாவளி, பொங்கல் போன்ற விசேஷ நாட்களில் அனைத்துக் குடும்பங்களும் சேர்ந்து பொதுவாகக் கொண்டாடுவதால் உற்சாகமான சூழல் நிறைந்திருக்கும். நகரின் மையத்திலும்கூட இதுபோன்ற வளாகங்கள் அமைந்திருப்பதால் விரைவில் பல இடங்களுக்குச் சென்றடைய முடியும் என்பதோடு அமைதியான சூழலிலும் வாழ முடியும் என்கிற இரட்டைப் பலன் இதில் கிடைக்கும்.
இவற்றின் காரணமாக இளையதலைமுறையினர் கேட்டட் கம்யூனிட்டி வீடு வாங்குவதற்கு முன்னுரிமை கொடுக்கிறார்கள். சில பிரம்மாண்டமான கேட்டட் கம்யூனிட்டிகளில் கடைகளும் வளாகத்தின் உள்ளேயே அமைந்திருக்கும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in