

கனி
வீடு அமைதியைத் தரும் இடமாக இருக்க வேண்டும் என்பதுதான் நம்மில் பலரின் விருப்பமாக இருக்கிறது. வீட்டில் அந்த அமைதியைக் கொண்டுவருவதற்காக நாம் பல முயற்சிகளைச் செய்கிறோம். அதில் முக்கியமானது வீட்டின் வடிவமைப்பு. நீரூற்று, தியான அறை, அமைதி தரும் வண்ணங்கள் என வடிவமைப்பில் மாற்றங்கள் செய்தால் வீட்டில் அமைதியைக் கொண்டுவந்துவிடலாம். அமைதியான வீட்டை வடிவமைப்பதற்கான சில ஆலோசனைகள்:
இயற்கையான பொருட்கள்
வீட்டின் பெரும்பாலான அறைகளில் இயற்கையான பொருட்களைப் பயன்படுத்துவது இயல்பாகவே அமைதியைக் கொண்டுவரும். மட்பாண்டங்கள், கையால் முனையப்பட்ட கூடைகள், மரப் பொருட்கள், கடற்சங்குகள், சிப்பிகள் வண்ணக் கற்கள், இலைகள், பூக்கள் என இயற்கையோடு தொடர்புடைய அம்சங்களால் வீட்டின் எல்லா அறைகளையும் வடிவமைக்க முடியும்.
அமைதியான வண்ணங்கள்
இயற்கையை, அமைதியைப் பிரதிபலிக்கும் வண்ணங்களான நீர் நீலம், நீர்ப் பச்சைப் போன்ற வண்ணங்களை அதிகமாகப் பயன்படுத்தலாம். நீலம் பிடிக்கவில்லையென்றால், இளஞ்சிவப்பு, ‘பீச்’ போன்ற வண்ணங்களைப் பயன்படுத்தலாம்.
மூடப்பட்ட அலமாரிகள்
பெரும்பாலும் வீட்டின் அறைகளில் மூடப்பட்ட அலமாரிகளைப் பயன்படுத்துவது சிறந்தது. மூடப்பட்ட அலமாரிகள், இழுப்பறைகள், துணி அலமாரிகள் போன்றவை அறைக்குள் ஒருவித அமைதியைக் கொண்டுவரும். எந்தெந்தப் பொருட்களை அனைவரும் பார்க்கும்படி வைக்கவேண்டியய கலைப் பொருட்கள், மலர்கள் போன்றவறைத் திறந்த அலமாரியில் வைக்கலாம்.
விளக்குகள்
செயற்கையான விளக்குகளைவிட, இயற்கையான நாளின் வெளிச்சம் வீட்டுக்குள்படும்படி வீட்டை வடிவமைப்பதுதான் சிறந்தது. பெரும்பாலும் வெளிச்சம் இருக்கும்வரை, வீட்டின் ஜன்னல்களைத் திறந்துவைத்திருப்பது சிறந்தது. ஒருவேளை, ஜன்னல்களைத் திறப்பதற்குச் சாத்தியமில்லையென்றால், வெளிச்சத்தை வீட்டுக்குள் பிரதிபலிக்கும் திரைச்சீலைகளைப் பயன்படுத்தலாம். இரவில், வீட்டின் சுவர்களில் விளக்குச் சரங்கள், மெழுகுவர்த்திகள், கூண்டுவிளக்குகள் போன்றவற்றைப் பயன்படுத்தலாம்.
தொழில்நுட்பச் சாதனங்கள்
மடிக்கணினி, அலைப்பேசி போன்ற தொழில்நுட்பச் சாதனங்களைப் பெரும்பாலும் பயன்படுத்திவிட்டு மறைவான இடங்களில் வைப்பது சிறந்தது. கூடுமானவரை, வயரில்லாத சாதனங்களை வாங்கிப் பயன்படுத்தலாம். அப்படியில்லாவிட்டால், வயர்களை வெளியே தெரியாமல் பொருத்தலாம். வயர்களற்ற வாசிப்பு மேசை, புத்தகங்களை வாசிக்கும்போது கூடுதல் மனஅமைதியைக் கொடுக்கும்.
நீரோசை
ஒரு சிறிய நீரூற்றைப் பொருத்துவதன் மூலம் வீட்டுக்குள் இயற்கையான நீர் ஓட்டத்தின் சத்தத்தை உணரமுடியும். நகரத்தின் வீடுகளிலும் இந்த நீரூற்று இயற்கையோடு வாழும் உணர்வைக் கொடுக்கும். நீருற்றுகள் பெரிதாகவோ, விலை உயர்ந்ததாகவோ இருக்க வேண்டிய அவசியமில்லை. ரூ. 2000 –த்திலிருந்து வீட்டில் பொருத்தக்கூடிய இந்த நீரூற்று அமைப்புகள் ஆன்லைன் தளங்களில் கிடைக்கின்றன.
பயிற்சி அறை
உடற்பயிற்சி, யோகா, தியானம் போன்றவற்றைச் செய்வது உங்கள் மனதில் அமைதியைக் கொண்டுவருவதற்கான சிறந்தவழி. இவற்றை அன்றாடம் பயிற்சி செய்வதற்கு ஓர் அறையோ, இடமோ என ஏதோவொன்றை உருவாக்கிக்கொள்ளலாம். இந்த இடத்தில் பெரிதாக எந்தப் பொருட்களையும் வைக்க வேண்டிய அவசியமில்லை. செடிகள், தரைவிரிப்புப் போன்றவை இருந்தால் போதுமானது. பால்கனி பெரிதாக இருந்தால், அங்கேயே உங்கள் தியான இடத்தை அமைத்துக்கொள்ளலாம்.
குறைவான பொருட்கள்
குறைவான பொருட்களைப் பயன்படுத்த வேண்டுமென்பதை லட்சியமாக வைத்துக்கொள்ளுங்கள். ஆனால், எந்தெந்த பொருட்களைப் பயன்படுத்துகிறீர்களோ அவையெல்லாம் உங்களுக்குப் பிடித்தமானவையாக இருக்க வேண்டியது அவசியம். உங்கள் மனதுக்குப் பிடிக்காத, பயன்படுத்தாத பொருட்கள் வீட்டில் இருந்தால் அவற்றை உடனடியாகக் களைந்துவிடுங்கள்.