

கனி
புதுமையான அறைக்கலன்களுக்கான தேடல் எப்போதும் இல்லாத அளவுக்கு இப்போது அதிகரித்துவருகிறது. இந்தக் காரணத்தால், ஸ்மார்ட் அறைக்கலன்கள் உள்அலங்காரத் துறையில் பிரபலமாகத் தொடங்கியிருக்கின்றன. ஸ்மார்ட் அறைக்கலன்களில் இருக்கும் பன்முகத் தன்மையே அவை வெற்றியடைவதற்குப் பெரிய காரணமாகியிருக்கிறது. இனிவரும் காலங்களில், ஸ்மார்ட் அறைக்கலன்களே வீடுகள், அலுவலகங்கள் என எல்லா இடங்களிலும் ஆதிக்கம் செலுத்த இருக்கின்றன.
1. ஸ்மார்ட் அறைக்கலன்களில் முக்கியமான அம்சம் இடத்தைச் சேமிப்பதாகும். சிறிய வீடுகளை விரும்பும் போக்கு பிரபலமாகி வருவதற்கும், ஸ்மார்ட் அறைக்கலன்களை விரும்புவதற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. சுவரோடு சுவராகப் பொருத்தப்பட்டிருக்கும் கட்டில், காஃபி மேசை-நாற்காலிகள், சாப்பாட்டு மேசைகள், அலமாரிகள் என அனைத்துவிதமான அறைக்கலன்களிலும் தற்போது ஸ்மார்ட் அறைக் கலன்கள் உருவாக்கப்படுகின்றன.
உதாரணமாக, நாற்காலிகள், கட்டில் போன்றவற்றைப் பயன்படுத்திவிட்டுத் தேவை முடிந்தவுடன் இடத்தை அடைத்துக்கொள்ளாமல் அவற்றை மேசைக்குள்ளோ சுவரிலோ மீண்டும் பொருத்திவிடலாம். இதன்மூலம், அறைக்கலன்கள் வீட்டின் பெரும்பாலான இடத்தை அடைத்துக்கொண்டிருப்பதைத் தவிர்க்கலாம்.
2. வெளியிலிருந்து பார்த்தால் ஓர் அறைக்கலனாகத் தெரியும். ஆனால், அதற்கு இரண்டு பயன்பாடுகள் இருக்கும். உதாரணமாகச் சுவரில் பொருத்தப்பட்டிருக்கும் கட்டில். இந்தக் கட்டிலைக் காலையில் படிக்கும் மேசையாகவும் இரவில் கட்டிலாகவும் பயன்படுத்திக்கொள்ளலாம். இப்படி, ஒரே இடத்தை இரண்டு விதமாகப் பயன்படுத்த உதவுவது ஸ்மார்ட் அறைக்கலன்களின் முக்கியமான அம்சமாக இருக்கிறது.
3. சோஃபா, கட்டில், தொலைக்காட்சி மேசைகள், சாப்பாட்டு மேசைகள் மட்டுமல்லாமல் துணி அலமாரிகளும் ஸ்மார்ட் அலமாரிகளாக வடிவமைக்கப்படுகின்றன. இதனால், எல்லாத் துணிகளையும் மடித்துவைக்க வேண்டிய கட்டாயம் இல்லாமல் போகிறது. பன்முகத்தன்மையுடன் வடிவமைக்கப்படும் இந்த அலமாரிகள் பெரிய அளவில் துணி அடுக்குவதற்கான இடநெருக்கடியைப் பெரிதும் குறைக்கின்றன.
4. ஒரு ஸ்மார்ட் சோஃபாவில் பொருத்தப்பட்டிருக்கும் தலை சாய்க்கும் பகுதியை வசதிக்கேற்ப மாற்றிக்கொள்ளலாம். அத்துடன், தனியாக மேசையில்லாமல் சோஃபாவில் கைப்பிடியிலேயே தேநீர் கோப்பையை வைத்துக் கொள்ளலாம். முதுகு, கால் பகுதியில் பிரச்சினையிருப்பவர்களுக்கு உதவும்படி, சில சோஃபாக்களில் அவர்கள் எழும்போது உயரத்தை ரிமோட் மூலம் மாற்றிக்கொள்ளும் வசதியுடன் வடிவமைக்கப்படுகின்றன.
5. மடித்து வைக்கும்படியான சாப்பாட்டு மேசைதான் இப்போது மற்ற ஸ்மார்ட் அறைக்கலன்களைவிட அதிக பிரபலமாக இருக்கிறது. சாப்பிடும் நேரத்தில் மட்டும் இதை விரித்து சாப்பிட்டுவிட்டு, மற்ற நேரங்களில் அதை எளிமையாக மடித்துவைத்துவிடலாம்.