

சுனில்
மாடிப் படிகளுக்கு நம் நினைவுகளில் தனித்த இடமுண்டு. பாடம் படிக்க, கதைகள் பேச, வேடிக்கை பார்க்க எனப் படிகளைப் பயன்படுத்தாதவர்கள் குறைவு. இப்படிப்பட்ட படிகளை அமைப்பதில் கவனம் செலுத்த
வேண்டியது அவசியம்.
படிகளைப் பொறுத்தவரை வீட்டுக்குள் அமைப்பது ஒருமாதிரியாகவும் வெளிப்புறமாக அமைக்கும் படிகளை வேறுமாதிரியாகவும் வடிமைக்க வேண்டும். வீட்டுக்குள் இருக்கும் படிக்கட்டுகள் வீட்டின் அழகை மிளிரச் செய்ய உதவும். அதனால் இதைக் கலா ரசனையுடன் வடிவமைக்கலாம். அதுபோல் கைப்பிடியாக மரத்தைப் பயன்படுத்தலாம். அதுபோல் படிக்கு கிரானைட் இடலாம்.
இதற்கெனப் பிரத்யேக கிரானைட் சந்தையில் கிடைக்கிறது. சொரசொரப்பாக இருக்கும். வெளியில் இரும்புக் கம்பியைக் கைப்பிடிக்குப் பயன்படுத்துவது பொருத்தமாக இருக்கும். மரத்தால் ஆன கைப்பிடிகள் மழை, வெயில் பட்டு எளிதில் இற்றுவிடும். துருப்பிடிக்காத எஃகு கம்பிகளைப் பயன்படுத்தும்போது அவை வெப்பத்தை அதிகமாக ஈர்க்கும். அதனால் வெயில் நேரத்தில் அதைத் தொடக்கூட முடியாது.
படிக்கட்டுகளின் அமைப்பைப் பொறுத்தவரை உயரத்தைவிட அகலமாக அமைக்க வேண்டும். படிகளின் உயரம் குறைவாகவும், கால் வைக்கும் பகுதி அகலமாகவும் இருக்க வேண்டும். படிக்கட்டுகள் அழகாக இருப்பதைவிடப் பயன்படுத்துவதற்கு எளிதாக இருக்க வேண்டும். குழந்தைகள், முதியோர்கள் எளிதாக ஏறி இறங்க வசதியாக வீதியாகவும் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
அதுபோல படிக்கட்டுகள் எல்லாம் சம அளவாக இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். வெவ்வேறு அளவுகள் இருக்கும்போது நாமே அடி சறுக்கி விழக்கூடிய ஆபத்தும் இருக்கிறது. மாடிப் படிக்கட்டுகள் மீது கார்பெட் விரிக்கும்போது கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும். கார்பெட்டின் முனைகள் கூர்மையாக இல்லாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.