

எங்கு சென்றாலும் பணம் எடுத்துச் செல்கிறோமோ இல்லையோ கைபேசியை மறக்காமல் எடுத்துச் சென்றுவிடும் வழக்கம் நம்மில் பலருக்கும் வந்துவிட்டது. அப்படிக் கைபேசியை மறந்துவிட்டால் ஏதோ ஒரு கையே உடைந்துபோனதைப் போல் நாம் பலவீனமாக உணர்வோம்.
அந்த அளவுக்குக் கைபேசி முக்கியத்துவம் மிகுந்த ஒன்றாக ஆகிவிட்டது. கைப்பேசிக்கு இப்போது இணைய வசதி வந்து பிறகு எல்லாவற்றையும் கையடக்கத் தொலைபேசிக்குள்ளே சாதித்துவிட முடிகிறது. அந்த வகையில் நமது கனவு இல்லத்தைத் தேடவும் கைபேசி மிக அதிக அளவில் பயன்படுகிறது. சமீபத்தில் வெளியான இந்தியா ப்ராபர்டி டாட் காம் நிறுவனத்தின் அறிக்கை இதை உறுதிப்படுத்துகிறது.
ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் ஸ்மார்ட் போன் அப்ளிகேஷன்களாலும் இணைய வசதியாலும் கம்யூட்டரின் உதவியால் வீடு தேடுவதைக் காட்டிலும் ஸ்மார்ட் போன் வழியாக வீடு தேடுவது 3 மடங்கு அதிகரித்துள்ளதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
இந்த ஆண்டில்தான் பல முன்னணி நிறுவனங்கள் தங்கள் வடிக்கையாளர்களுக்காக ஸ்மார்ட் போன் அப்ளிகேஷன்களை உருவாக்கினார்கள். இந்த அப்ளிகேஷன்கள் வீடு தேடுவதில் மிகப் பெரிய மாற்றத்தை விளைவித்துள்ளது. தரகர் மூலமாக, தெரிந்தவர்கள் மூலமாக வீடு தேடுவது வெகுவாகக் குறைந்துள்ளதாக அந்த அறிக்கை சொல்கிறது. இப்போது பெரும்பாலும் மக்கள் தங்கள் ஸ்மார்ட் போன் அப்ளிகேஷன் வழியாகவே வீடு தேடுகின்றனர். கடந்த ஆறு மாதங்களில் இது மிகவும் அதிகரித்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
கடந்த ஜனவரியில் ஸ்மார் போன் மூலம் வீடு தேடியவர்களின் சதவீதம் 10 சதவீமாக இருந்தது. அதுவே இந்த ஆண்டு மே மாதத்தில் 40 சதவீதமாக அதிகரித்துள்ளது. இரண்டாம் நிலை நகரங்களிலும் ஸ்மார்ட் போன் மூலம் வீடு தேடுவது அதிகரித்துள்ளது. இந்திய அளவில் ஒப்பிடும்போது இது 1.3 சதவீதமாக உள்ளது.
வயது வித்தியாசத்திலும் இந்த ஆய்வு எடுக்கப்பட்டுள்ளது. 18-ல் இருந்து 34 வயதுக்கு உட்பட்டவர்களில் 69 சதவீதத்தினர் ஸ்மார்ட் போனை பயன்படுத்தி வீடு தேடுதலில் ஈடுபடுகிறார்கள் என்றும், 35-ல் இருந்து 44 வயதுக்கு உட்பட்டவர்களில் 13 சதவீதத்தினர் ஸ்மார்ட் போனைப் பயன்படுத்தி வீடு தேடுதலில் ஈடுபடுகிறார்கள் என்றும், 45-ல் இருந்து 55 வயதுக்கு உட்பட்டவர்களில் 7 சதவீதத்தினர் ஸ்மார்ட் போனைப் பயன்படுத்தி வீடு தேடுதலில் ஈடுபடுகிறார்கள் என்றும், 65 வயதுக்கு மேற்பட்டவர்களில் 4 சதவீதத்தினர் ஸ்மார்ட் போனைப் பயன்படுத்தி வீடு தேடுதலில் ஈடுபடுகிறார்கள் என்றும் அந்த அறிக்கை சொல்கிறது.
இந்த அறிக்கையின் புள்ளி விவரங்களின்படி பார்த்தால் கணினி மூலம் வீடு தேடுபவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது வெகுவாகக் குறைந்துள்ளது. 18-ல் இருந்து 34 வயதுக்கு உட்பட்டவர்களில் 61 சதவீதத்தினர் மட்டுமே கணினியைப் பயன்படுத்தி வீடு தேடுகிறார்கள். மேலும் இந்த அறிக்கையின்படி ஸ்மார்ட் போன் மூலமாக வீடு தேடுபவர்களில் 54 சதவீதத்தினர் பெண்கள் என்றும் தெரியவந்துள்ளது. ஸ்மார்ட் போனின் இன்றியாமையாத தன்மையால் எல்லாமும் போனுக்குள் வந்துகொண்டிருக்கின்றன.
இதைத்தான் ஸ்மார்ட் ஆன வாழ்க்கை என்கிறார்களோ?