வாசகர் பக்கம்: வீட்டுக்குள் தோட்டம்

வாசகர் பக்கம்: வீட்டுக்குள் தோட்டம்
Updated on
1 min read

நம்மில் பலருக்கும் வீட்டில் செடி வளர்க்க ஆசை இருக்கும். ஆனால் இன்றைய அபார்ட்மெண்ட் வாழ்க்கையில் தோட்டம் போட இடம் இருக்காது. ஆனாலும் அதையும் மீறிக் கிடைக்கும் சிறிய இடத்தில் தோட்டம் போடத் துடிப்போம். அப்படியான துடிப்பில் வீட்டுக்குள் சிறிய தோட்டம் வைத்த எனது அனுபவத்தில் சில குறிப்புகளைத் தருகிறேன்.

வீட்டுக்குள் எல்லா வகைச் செடிகளும் வளராது. அலங்காரச் செடி வகைகள் மட்டுமே வீட்டுக்குள் வளர்க்க ஏற்றவை. (உ.ம்) மணி பிளான்ட், போதொஸ், ப்ளீடிங் ஹார்ட், பைலோடென்ரான் , ஆர்னமேண்டல் பாம், பெரணி போன்றவை.

பெரும்பாலான அலங்காரச் செடிகள் அவற்றின் அழகிய இலைகளுக்காகவே வளர்க்கப்படுகின்றன. மணி பிளான்ட்டைக் கண்ணாடிக் குடுவையிலோ தொட்டியில் வைத்தோ வளர்க்கலாம். அதைச் சணல் சுற்றிய கம்பியிலோ படரவிடலாம்.

வீட்டுக்குள் வைக்கும் செடிகளுக்கு அதிகமான வெயிலோ, தண்ணீரோ தேவைப்படாது.

அலங்காரச் செடிகள் பெரும்பாலும் மியூடன்ட் (mutant) வகையைச் சேர்ந்தவை என்பதால் அவற்றை வெயிலில் வைத்தால் அதன் நிறம் மாறிவிடும்.

சோற்றுக் கற்றாழை , காக்டஸ் போன்றவற்றில் அதிக வகைகள் உண்டு. பராமரிப்பும் குறைவு.

வீட்டுக்கு அரண் போல வைக்க பைசோனியா, குரோட்டன்ஸ் உபயோகிக்கலாம். இதை எளிதாகப் பதியம் மூலம் வளர்க்கலாம்.

மினியேச்சர் செடிகள் வளர்க்க விரும்புபவர்கள் சிட்ரஸ், பைகஸ், மூங்கில் வகைகளை போன்சாய் மூலம் வளர்க்கலாம்.

சிறிய அளவில் காய்கறித் தோட்டம் போட விரும்புபவர்களுக்கு ஏற்ற இடம் மொட்டை மாடிதான். தொட்டியில்தான் வளர்க்க வேண்டும் என்று இல்லை. மாடிச் செடிக்கேற்ற பாலிதீன் பைகள் கடைகளில் கிடைக்கின்றன.

மாடித் தோட்டத்துக்கு அதிக அளவு தண்ணீர் பாய்ச்சினால் மாடியில் ஈரம் படியலாம். எனவே சொட்டு நீர்ப் பாசனம் சிறந்தது.

ரசாயன உரங்களைத் தவித்து, காய்கறிக் கழிவு, மண்புழு போன்றவற்றை உரமாக இடலாம்.

மாடித் தோட்டத்தில் நீண்ட நாள் பயிர்களை வளர்க்காமல், குறுகிய காலப் பயிர்களாக கீரைகள், தக்காளி, வெண்டை, புடலை வகைகளைப் பயிரிடலாம்.

ஆனால் அதிகமான எடையைக் கட்டிடத்தின் மேல் ஏற்றுவது கட்டிடத்தின் பாதுகாப்புக்கு உகந்ததல்ல. எனவே அதிகமான தொட்டிகளை மாடியில் ஏற்ற வேண்டாம்.

- எம். விக்னேஷ்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in