

கட்டிடம் கட்டி முடித்தால் போதுமானதா? ‘இல்லை, இல்லை’. அதுவும் இந்தக் காலத்தில் கட்டாயமாக இல்லை. கட்டிடங்கள் என்பது சிமெண்டும், மண்ணும் சேர்ந்த கலவை அல்ல. கட்டிடங்கள் முழுமை பெற ‘கட்டிட மேலாண்மைப் பணிகள்’ அவசியம். இந்தக் கட்டிட மேலாண்மை முறை என்பது இப்போது ஒரு கட்டிடத்துக்கு அவசியமான ஒன்று. இதை பி.எம்.எஸ். (Building Management System - BMS) எனச் சுருக்கமாக அழைப்பார்கள்.
பி.எம்.எஸ். சேவையை டாடா ஹனீவெல் போன்ற பல நிறுவனங்கள் வழங்கிவருகின்றன. ஒரு பெரிய கட்டிடத்தை முழுமையாகக் கண்காணிக்கும் வகையிலான எல்லா வசதிகளையும் செய்துகொடுத்துவிடுவார்கள். உதாரணமாக 12 அடுக்கு மாடி கொண்ட ஒரு வியாபாரத் தலம் இருக்கிறது என வைத்துக்கொள்வோம்.
அந்தக் கட்டிடம் முழுமைக்கும் கண்காணிக்கும் கேமரா, தீ தடுக்கும் வகையிலான தண்ணீர்க் குழாய் அமைப்பு, திருட்டைத் தடுக்க ஒலிப்பான் போன்ற பல வகையான சேவைகள் ஒருங்கிணைத்துச் செய்துகொடுப்பார்கள். இருபதாம் நூற்றாண்டில்தான் இந்தச் சேவை வழக்கத்துக்கு வந்தது. ஐரோப்பிய நாடுகளில் பரவலாக இந்த முறை பின்பற்றப்படுகிறது.
அரபு நாடுகளிலும் இந்த முறை கடைப்பிடிக்கப்படுகிறது. தேலீஸ், டாடா ஹனீவெல் உள்ளிட்ட பல நிறுவனங்கள் இந்தச் சேவை உலக அளவில் வழங்கி வருகின்றன. பொதுப் பயன்பாட்டு தலங்களான ரயில்வே நிலையங்கள், விமான நிலையங்கள், மருத்துவமனைகள் போன்ற இடங்கள் பெரும்பாலும் இப்போது இந்த முறையைப் பின்பற்றிதான் கட்டப்படுகின்றன.
சரி பி.எம்.எஸ். எல்லாக் கட்டிடத்துக்கும் அவசியமா, என்று ஒரு கேள்வி வருகிறது. நாம் வாழச் சிறியதாக வீடு கட்டிக்கொள்கிறோம். அதற்கு பி.எம்.எஸ் அவசியமா, எனக் கேட்டால் சிறிய வீட்டுக்கான கட்டிட மேலாண்மை என்பது சிறிய அளவிலானது. அதற்காகத் தனியான நிறுவனங்கள் தேவை இல்லை. உங்கள் வீட்டுக்கான கண்காணிப்பு கேமாரா, தீ தடுப்பானை கட்டிடப் பணியாளர்களைக் கொண்டே பொருத்திக்கொள்ள முடியும். ஆனால் பெரிய கட்டிடங்களுக்குத் தனியான சேவை தேவைப்படும்.
ஐஎம்ஆர்பி வியாபார ஆராய்ச்சி நிறுவனம் இந்திய அளவில் நடத்திய கணக்கெடுப்பின்படி இந்தியக் கட்டிடங்கள் ஸ்மார்ட் பில்டிங்குகளாக ஆக இன்னும் முதலீடு தேவை எனத் தெரியவந்துள்ளது. இந்தியா வேகமாக நகரமயமாகி வரும் சூழலில் இந்தியக் கட்டிடங்கள் பிஎம்எஸ் முறைப்படி ஸ்மார்ட் ஆக வேண்டியது அவசியம் என அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
டாடா ஹனீவெல் நிறுவனம்தான் இந்த ஆராய்ச்சியை ஒருங்கிணைத்துள்ளது. ஸ்மார்ட் பில்டிங் என்பதற்கு அவர்கள், மின்சாரம், கட்டிடத்தின் வெப்பம், குளுமை, தகவல் தொடர்பு, கண்காணிப்பு உள்ளிட்ட 15 விதமான அம்சங்களை முன்னிறுத்துகிறது. இந்த அடிப்படையிலேயே ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இம்மாதிரியாக கட்டிடங்கள் ஸ்மார்ட் ஆக மாறினால் விபத்துகள், ஆபத்துகளிலிருந்து நம் கட்டிடங்கள் மட்டுமல்ல, நாமும் தப்பிக்கலாம்.