

தெருவோரம் நின்று பார்த்தால் வீட்டின் வெளிப்புறக் கூரை முதல் கடைசி செங்கல்வரை வெள்ளை பெயிண்டு பூசி மெழுகப்பட்ட சராசரியான இரண்டு அடுக்குக் குடியிருப்புதான். ஆனால் வீட்டுக்குள் அடியெடுத்து வைத்தால் நவீன ஓவியம் போலத் தலை, கால் எதுவும் புரியவில்லை. எது மேல் கூரை? எது தரை? வரவேற்பறை எங்குத் தொடங்குகிறது? சுவர் எங்கே? தூண்கள் எங்கே?
பாழடைந்த வீட்டின் நடுவே ஓட்டை போட்டுப் புதிய வீட்டை உருவாக்கியிருக்கிறது கொச்சி எனும் கட்டிடக்கலை நிறுவனம். ஜப்பானில் உள்ள டோக்கியோ நகரின் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள ஒரு பழுதடைந்த அடுக்குமாடிக் குடியிருப்பு இடிக்கப்பட வேண்டும் எனப் பேசப்பட்டது. அப்போது கசுயாசு கொச்சி எனும் கட்டிடக்கலை நிபுணர் இரண்டு அடுக்கு மற்றும் எட்டு அறைகள் கொண்ட அந்த வீட்டின் குறுக்கே ஓட்டை போட்டு வீட்டைப் புதுப்பித்துவிட்டார்.
பொதுவாக வீட்டுக்குள் நுழைந்தவுடன் வரவேற்பறை வீட்டின் மையத்தில் கட்டப்பட்டிருக்கும். வரவேற்பறையின் சுவரைச் சுற்றிலும் வெவ்வேறு அறைகள் அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் இந்த வீட்டின் அறைகளை வரவேற்பறையி லிருந்து பிரித்துக் காட்டுவது சுவர் அல்ல வெற்றிடம்.
முழுவதுமாக மரப்பலகைகள் கொண்டு கட்டப்பட்ட 1908.55 சதுர அடி வீட்டை வெவ்வேறு வடிவியல் கோணங்களில் குறுக்கு மறுக்காக அறுத்தார் கசுயாசு கொச்சி. பின்னர் ஒவ்வொரு பலகைக்கும் விதவிதமான வண்ணங்கள் பூசப்படவே ஒட்டுமொத்த வீடே ஒரு நவீன ஓவியம்போலக் காட்சியளிக்கிறது.
இப்படி எக்குத்தப்பாக வடிவமைக்கப்பட்ட கட்டிடத்தை வீடு என எப்படிச் சொல்ல முடியும் எனும் கேள்வி எழலாம். வரவேற்பறை, படுக்கை அறை, குழந்தைகள் அறை, படிக்கட்டுகள், புத்தக அறை, குளியலறை என அத்தனை லட்சணங்களும் கொண்ட முழுமையான, புதுமையான வீடு இது.