

இ.எம்.ஐ. கட்டிக்கொண்டிருக்கும் வீட்டை விற்க முடியுமா?
- செந்தில்குமார், கோயம்புத்தூர்.
இ.எம்.ஐ. கட்டிக்கொண்டிருக்கும் வீட்டினைத் தாராளமாக விற்க முடியும். ஆனால் அதற்குக் கடன் கொடுத்த வங்கி அல்லது தனியார் நிதி நிறுவனத்தின் அனுமதி தேவை. வங்கி அல்லது தனியார் நிதி நிறுவனத்தில் கடன் பெற்று வீடு வாங்கும்போது கடன் கொடுக்கும் வங்கியோ நிதி நிறுவனமோ வீட்டின் அசல் உரிமைப் பத்திரத்தையும் சொத்து சம்பந்தமான இதர அசல் ஆவணங்களையும் ஈடாக வாங்கி வைத்துக்கொள்ளும்.
வீட்டை வாங்குபவர் மொத்த கடன் தொகையையும் வங்கி அல்லது தனியார் நிதி நிறுவனத்திடம் நேரடியாகவோ அல்லது வேறு வங்கி அல்லது தனியார் நிதி நிறுவனத்திடம் கடன் பெற்றோ செலுத்தும்பட்சத்தில் ஏற்கனவே கடன் கொடுத்த வங்கி அல்லது தனியார் நிதி நிறுவனமானது அனைத்து அசல் ஆவணங்களையும் வீட்டினை வாங்குபவரிடம் நேரடியாகவோ அல்லது வாங்குபவருக்கு கடன் கொடுக்கும் வங்கி அல்லது தனியார் நிதி நிறுவனத்திடமோ கொடுத்துவிடும். அதன் பிறகு தான் வீட்டின் உரிமையாளர் வீட்டினை விற்க முடியும்.
அடுக்குமாடிக் குடியிருப்பில் வீடு வாங்க உள்ளேன். அதில் குறிப்பிடப்படும் யூடிஎஸ் (UDS-undivided share) முறையைப் பற்றிச் சொல்லுங்கள்...
- செல்வராஜ், சென்னை
ஓர் உதாரணத்திற்குச் சுமார் 10 ஆயிரம் சதுர அடி நிலத்தில் 25 குடியிருப்புகள் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டப்பட்டுள்ளது என்று வைத்துக்கொள்வோம். அதில் ஒவ்வொரு குடியிருப்பின் பரப்பளவும் மாறுபடும். அந்த அடுக்குமாடிக் குடியிருப்பின் மொத்த கட்டிடப் பரப்பளவில் (பொதுக் கட்டிடப் பகுதிகளின் பரப்பளவையும் சேர்த்து) ஒருவர் வாங்கப்போகும் குடியிருப்பின் பரப்பளவு எவ்வளவு சதவீதம் என்பதைக் கணக்கிட்டு, மொத்த நிலத்தின் பரப்பளவில் அதே சதவீதம் பிரிவு படாத பாகத்தை (Undivided Share UDS) அடுக்குமாடி குடியிருப்பினை வாங்குபவருக்கு விற்பனை செய்வர்.
குறிப்பிட்ட சதவீதம் பிரிவு படாத பாகம் மட்டுமே ஒவ்வொருவராலும் வாங்கப்படுவதால், அந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் குடியிருப்புகள் வாங்கியுள்ள ஒவ்வொருவருக்கும் மொத்த நிலத்தில் ஒவ்வொரு சதுர அடியிலும் பங்கு உண்டு. ஆகையால் எந்த ஒரு குடியிருப்பு வாங்குபவரும் மொத்த நிலத்தில் எந்த ஒரு பகுதியையும் தனக்கு மட்டுமே சொந்தம் என்று உரிமை கோர முடியாது.
எங்கள் வீட்டுக்கு 20 வருஷத்துக்கு முன்பு நாங்கள் காம்பவுண்ட் சுவர் கட்டிவிட்டோம். அந்த நேரத்தில் பக்கத்து இடம் காலி மனையாக இருந்தது. அதன் உரிமையாளரைத் தொடர்புகொள்ளவும் முடியவில்லை. இப்போது அந்த மனையை வாங்கி இருப்பவர், அவர் இடத்தின் மேல் காம்பவுண்ட் கட்டியிருப்பதாகச் சொல்கிறார். காம்பவுண்ட் கட்டுவதில் உள்ள சட்ட நடைமுறை என்ன?
- சதாசிவம், கள்ளக்குறிச்சி.
ஒருவர், தான் விலைக்கு வாங்கியுள்ள நிலத்தில் வீடு கட்டவோ காம்பவுண்ட் கட்டவோ முயலும் முன்பு, அந்த நிலம் அமைந்துள்ள தாலுகா அலுவலகத்தினை அணுகி தாலுகா நில அளவையர் மூலமாகவோ அல்லது அந்த நிலம் அமைந்துள்ள கிராம நிர்வாக அலுவலகத்தினை அணுகி கிராம நிர்வாக அலுவலர் மூலமாகவோ தான் வாங்கியுள்ள நிலத்தினைச் சரியாக அளந்து நான்கு மூலைகளிலும் கற்கள் பதித்துத் தருமாறு கோர வேண்டும்.
அவர்களும் அந்த நிலத்தின் நான்கு பக்கங்களிலும் உள்ள நில உரிமையாளர்களுக்கும் முறையாக அறிவிப்பு கொடுத்து அவர்கள் முன்னிலையில், அரசுப் பதிவேடுகளில் உள்ள நில அளவுகளைக் கணக்கில் எடுத்துக்கொண்டு, நிலத்தினைச் சரியாக அளந்து நான்கு மூலைகளிலும் கற்கள் பதித்துத் தருவார்கள். அதன் பிறகு அந்த நிலம் அமைந்துள்ள பகுதிக்குள் நிலத்தின் உரிமையாளர் வீட்டையும் காம்பவுண்டையும் கட்டுவதே சட்டப்படியான நடைமுறையாகும்.
அம்மா பெயரில் உள்ள நிலத்தை, அம்மா தாமாகத் தர முன்வராத நிலையில் அதை மகள்கள் உரிமை கோர முடியுமா?
- அமுதா, அம்பாசமுத்திரம்.
உங்கள் கேள்வியில் அம்மா பெயரில் உள்ள நிலம் என்று குறிப்பிட்டுள்ளீர்கள். ஆனால் நிலம் அம்மாவிற்கு எப்படி உரிமையானது என்பதைக் குறிப்பிடவில்லை. அம்மாவிற்கு இரண்டு வகைகளில் நிலம் உரிமையாக வாய்ப்புள்ளது. ஒன்று அம்மா தனது சுய சம்பாத்திய பணத்தினைக் கொண்டு தனது பெயரில் நிலம் வாங்குவதன் மூலம் அவருக்கு உரிமையாவது. இரண்டாவது மூதாதையர் நிலத்தினை அவர்கள் காலமான பிறகு வாரிசு என்ற அடிப்படையில் அம்மா அடைவதன் மூலம் அவருக்கு உரிமையாவது.
இதில் அம்மா தனது சுய சம்பாத்திய பணத்தினைக் கொண்டு தனது பெயரில் வாங்கும் நிலத்தினை அவர் தாமாக தர முன்வராத நிலையில் அதனை மகள்கள் சட்டப்படி உரிமை கோர முடியாது. ஆனால் மூதாதையர் நிலத்தினை அவர்கள் காலமான பிறகு வாரிசு என்ற அடிப்படையில் அம்மா அடைந்ததன் மூலம் உரிமை பெற்றிருந்தால் அவர் தாமாக தர முன்வராத நிலையில் அதனை மகள்கள் சட்டப்படி தகுந்த நீதிமன்றத்தினை அணுகி உரிமை கோரலாம்.
- உங்கள் சந்தேகங்களை அனுப்பலாம்.