உங்கள் வீட்டின் மதிப்பு என்ன?- உதவுகிறது இணையதளம்

உங்கள் வீட்டின் மதிப்பு என்ன?- உதவுகிறது இணையதளம்
Updated on
1 min read

புதிய வீட்டையோ அல்லது பழைய வீட்டையோ வாங்கப் போகிறீர்களா? ஒரு பகுதியில் வீடுகள் என்ன விலையில் விற்கப்படுகின்றன என்பதில் குழப்பமாக உள்ளதா? கவலையை விடுங்கள். இதற்கும் அரசின் பத்திரப்பதிவுத் துறை இணையதளம் உதவுகிறது.

ஒரு இடத்துக்கான சந்தை வழிகாட்டி மதிப்பையும்கூடப் பத்திரப்பதிவு இணையதளத்தில் பார்க்க வழி உள்ளது. பலரும் மனையின் சந்தை வழிகாட்டி மதிப்பை மட்டும் பார்த்துவிட்டு இருந்துவிடுவார்கள். வீடுகளுக்கும்கூடச் சந்தை வழிகாட்டி மதிப்பைப் பார்க்க வழி உள்ளது. இதற்கான சுட்டியைச் சொடுக்கி, அங்கே கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்குப் பதில் கூறினால் நிலத்தின் மதிப்பு மட்டுமின்றி கட்டிடத்துக்கான மதிப்பையும் தெரிந்துகொள்ளலாம்.

வீடுகள் பற்றிய மதிப்பை அறிய இந்த இணையப் பகுதியில் இரண்டு வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அடுக்குமாடி வீடு, தனி வீடு என இரு பிரிவுகள் உள்ளன. அடுக்குமாடி வீடு பகுதியில் வீடு எந்த எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ளது, யுடிஎஸ் எனப்படும் கட்டிடத் தளப் பரப்பு எவ்வளவு, வீடு அமைந்துள்ள மொத்தச் சதுர அடி, வீடு பழையதா புதியதா, வீட்டின் வயது, எந்தத் தளத்தில் வீடு உள்ளது, வீட்டில் பயன்படுத்தப்பட்டுள்ள மர வகை, கட்டுமானத்துக்குப் பயன்படுத்தப்பட்டுள்ள பொருட்கள், மேற்கூரை வகை, வீட்டில் பயன்படுத்தப்பட்டுள்ள உயர் ரகக் கற்கள் வகைகள் பற்றித் தெளிவாகக் குறிப்பிட வேண்டும். இதற்கான பதில்கள் தெளிவாக இருந்தால் வீடு அமைந்துள்ள மனையின் மதிப்பு, கட்டிடத்தின் மதிப்பு தனித்தனியாகக் கொடுக்கப்படும். இதில் அதிகபட்சமாக 60 ஆண்டுகள் ஆன கட்டிடத்தின் மதிப்பை மட்டுமே பார்க்க முடியும்.

இதே போலத்தான் தனி வீட்டுக்கும் கேள்விகள் தொகுத்துக் கேட்கப்படுள்ளன. வீடு அமைந்துள்ள எல்லை, வீட்டின் மொத்தப் பரப்பளாவு, வீடு பழையதா புதியதா, வீட்டின் வயது, தளம், மர பயன்பாடு, கட்டுமானப் பொருள் பயன்பாடு, மேற்கூரை வகை, உயர் ரகக் கற்கள் பயன்பாடு ஆகியவற்றுடன் சில வசதிகள் பற்றிய கேள்விகளும் கேட்கப்படுள்ளன. மின்சாரம் வசதி, சுகாதார வசதி, குடி நீர் வசதி, வீட்டைச் சுற்றியுள்ள சுற்றுச்சுவரின் விவரங்களையும் அளித்தால் வீட்டின் மதிப்பும், அந்த வீடு அமைந்துள்ள மனையின் மதிப்பையும் தெரிந்துகொள்ளலாம்.

இந்த மதிப்பானது நாம் ஒரு இடத்தில் வீட்டைப் பார்க்கவும், அதன் அடிப்படையில் வீடு விலை குறித்துப் பேரம் பேசவும் வீடு வாங்குவது தொடர்பான முடிவுக்கு வரவும் ஓரளவுக்கு உதவும். கேட்கப்பட்ட கேள்விகளுக்கு நீங்கள் அளிக்கும் பதிலைப் பொறுத்தே நிலம் மற்றும் வீட்டின் மதிப்பு கொடுக்கப்படுகிறது என்பதால், இந்த மதிப்பை அப்படியே எடுத்துக்கொள்ளக் கூடாது.

சந்தை நிலவரம், ரியல் எஸ்டேட் நிலவரத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும். அரசின் பத்திரப் பதிவு இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருப்பதால், இது வீடு வாங்க உத்தேசித்துள்ளவர்களுக்கு ஓரளவு பயனுள்ளதாகவே இருக்கும்.

மேலும் விவரங்களுக்கு >http://bit.ly/1EXusC9 என்ற இணையதளத்தைப் பாருங்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in