

இந்தியாவின் மக்கள் தொகை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. மக்கள் தொகைக்கு ஏற்ப குடியிருக்க வீடுகள் இல்லை. இந்தியாவின் வீட்டுத் தேவையைப் பூர்த்திசெய்வது இன்று மத்திய அரசுக்குச் சவாலான காரியமாக இருக்கிறது. அதனால் கட்டுமானங்கள் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன. அதுபோலக் கட்டுமானப் பொருள்களுக்கான தேவையும் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. சிமெண்ட், மணலின் விலை அதனால்தான் விண்ணைத் தொட்டுக் கொண்டிருக்கிறது.
மண்ணுக்கு உள்ள தேவையைக் கணக்கில் கொண்டு ஆற்றில் அதிகமான அளவு மண் எடுக்கப்படுகிறது. இப்போது அரசே குவாரிகளை ஏற்று நடத்துவதால் ஓரளவு மணல் கொள்ளை கட்டுக்குள் வந்திருக்கிறது. என்றாலும் தொடர்ந்து ஆற்றில் மண் எடுப்பதால் நமது சுற்றுச்சுழலும் பாதிப்புக்குள்ளாகிறது.
ஆற்று மணலை அதிகளவில் எடுப்பதால் நிலத்தடி நீர் மட்டம் குறையும். ஆற்றை நம்பியிருக்கும் மீன் போன்ற நீர்வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படும். இதுமட்டுமல்லாமல் ஆற்று மணலை நம்பி பல்லாயிரம் உயிரினங்கள் இருக்கின்றன. மேலும் மணல், ஆற்று நீரை பூமியில் சேமிக்க உதவுகிறது. நீரில் உள்ள கிருமிகளை நீக்க மணல் ஒரு வடிகட்டியாகப் பயன்படுகிறது.
மணலை இழப்பது நம்மை நாமே அழித்துக்கொள்வதற்குச் சமம் எனலாம். அதைப் போக்கத்தான் இப்போது மாற்று மணல் கண்டுபிடிக்கப்பட்டுச் சந்தைக்கு வந்துள்ளது. பெரும் அளவில் உபயோகப்படுத்தப்பட்டும் வருகிறது.
கருங்கற்களை வெட்டிக் கிடைக்கும் துகள்களை மாற்று மணலாகப் பயன்படுத்தலாம். இந்த முறையில் தயாரிக்கப்பட்ட மணல் இப்போது மணல் தட்டுப்பாட்டுக்குச் சிறந்த தீர்வாக ஆகிறது. இது கட்டிடத்தின் ஆயுளைப் பாதிக்கும் என்னும் கருத்தும் பரவலாக உள்ளது. ஆனால் இந்த மணலைக் கட்டிடம் கட்டப் பயன்படுத்தலாம் என ஆய்வு மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
பெங்களூர் விமான விரிவாக்கப் பணிகள், மெட்ரோ ரயில் பணிகள் போன்ற பல பெரிய திட்டங்களுக்கு இந்த வகை மணலைப் பயன்படுத்தி வெற்றி கண்டிருக்கிறார்கள். மேலும் இந்திய அறிவியல் கழகமும் இதைக் கட்டுமானப் பணிகளுக்குப் பயன்படுத்தலாம் எனப் பரிந்துரைத்துள்ளது.
இதில் உள்ள நன்மை என்னவென்றால் இதில் உருவாகும் கழிவுகள் ஆற்று மணலுடன் ஒப்பிடும்போது மிகவும் குறைவு. M-sand மணல் துகள்கள் அனைத்தும் சரியான அளவுகளில் ஒரே சீராக இருப்பதால் அதிக வலிமையான கான்கிரீட் அமையப் பயன்படுத்துகின்றனர். பல்வேறு அரசுப் பணிகளுக்கும் இந்த மாற்று மணல் இப்போது உபயோகிக்கப்பட்டுவருகிறது. இது ஓர் ஆரோக்கியமான தொடக்கம்.