

கட்டிடக்கலை என்பது எதிர்காலத்தின் கலாச்சாரம் என்றார் பிலிப் ஜான்சன். கட்டிடக் கலையின் நவீன கலாசாரத்திற்கு வித்திட்டர்வர்களில் ஒருவர். 1906-ம் ஆண்டு அமெரிக்காவில் கிளவ்லேண்ட் நகரத்தில் பிறந்தார். அமெரிக்காவில் உள்ள ஹார்வேர்ட் கல்லூரியில் உளவியல் துறையில் பட்டம் பயின்றார்.
இதனடிப்படையில் இவரது கட்டிடங்கள் ஒரு புதிய உணர்வை கட்டிடக் கலைக்கு அளித்தது எனலாம். நவீன ஓவிய அருங்காட்சியகத்தில் நவீனக் கட்டிட வடிவமைப்பையும் ஒரு பிரிவாக உருவாக்கினார். இதன் மூலம் கட்டிடம் என்பதும் ஒரு போற்றப்படக்கூடிய கலைதான் என உரைத்தார். கட்டிட வரலாற்றாசிரியரான ஹென்றி ரஸல் ஹிட்சாக்குடன் இணைந்து கட்டிட வடிவமைப்பில் புதிய கொள்கையை வடிவமைத்தார்.
‘The International Style’ என அழைக்கப்படும் இந்தத் தேற்றத்தின் அடிப்படையில்தான் பிலிப் பின்னாளில் கட்டிடங்களை உருவாக்கினார்.
கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் கட்டிடத்துறையில் இயங்கிய இவர் 20-ம் நூற்றாண்டின் கட்டிடக் கலையில் மிகப் பெரிய தாக்கத்தை விளைவித்தவர். இன்றைக்கு பிரம்மாண்டமாக எழுந்து நிற்கும் வானுயர் கட்டிடங்களுக்கு ஆணிவேர் இவர்தான். இவ்வளவு தொழில்நுட்டம் வளர்ந்துவிட்ட பிறகு இன்றைக்குப் பிரம்மாண்டமான கட்டிடங்களை உருவாக்குவது அவ்வளவு சிரமமான காரியமல்ல.
ஆனால் 1950களிலேயே இவர் அம்மாதிரியான கட்டிடங்களை உருவாக்கினார். இவரத் கட்டிடங்கள் எந்த பழைய கட்டிட மரபையும் சாராமல் புதிய கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் வகையில் உருவாக்கினார்.
முழுவதும் கண்ணாடியிலான வீட்டை அவருக்காக 1949-ல் உருவாக்கினார். பிலிப் இறந்த பிறகு அந்த வீடு ஓர் வரலாற்றுச் சின்னமாக உள்ளது. இங்குதான் அவர் இறக்கும் வரை தனது வாழ்க்கைத் துணையாளரான டேவிட் விட்னியுடன் வாழ்ந்து மறைந்தார்.
கட்டிடக் கலைக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான பிரிட்ஸ்கர் (Pritzker) விருது, அமெரிக்க கட்டிடக்கலைக் கல்லூரியின் வாழ்நாள் சாதனையாளார் விருது உள்ளிட்ட பல உயரிய விருதுகளைப் பெற்றுள்ளார்.