

பிராலாயிட் ரைட் (Frank Lloyd Wright) 1867-ம் ஆண்டு அமெரிக்காவில் பிறந்தவர். நவீனக் கட்டிடக் கலைத் தத்துவத்தில் ஒன்று ஆர்கானிக் கட்டிடக் கலை (Organic architecture). இந்தத் தத்துவம் ரைட்டால்தான் உருவானது.
அதனால் இவரை ஆர்கானிக் கட்டிடக் கலையின் தந்தை எனலாம். இந்தத் தத்துவத்துக்கு உதாரணமாகக் காட்டப்படும் கட்டிடம் 1935-ம் ஆண்டு அமெரிக்காவில் மில் ரன் என்னும் இடத்தில் கட்டப்பட்ட ஃபாலிங்வாட்டர் (Fallingwater) என்னும் கட்டிடம்தான். இதைக் கட்டியது ரைட்தான்.
குறிப்பிடும்படியான செல்வச் செழிப்பான குடும்பப் பின்னணி கொண்டவர் அல்ல ரைட். மேலும் இவர் பொறியியல் பட்டதாரியும் அல்ல. இவர் பட்டதாரியே அல்ல எனவும் சொல்லப்படுகிறது. பள்ளிப் படிப்பை முடித்த பிறகு மியாமி பல்கலைக்கழகத்தில் மேற்படிப்புக்காகச் சேர்ந்திருக்கிறார். ஆனால் படிப்பைத் தொடராமல் பாதியிலேயே விட்டுவிட்டதாகச் சொல்லப்படுகிறது.
படித்துக்கொண்டிருக்கும்போதே பொறியியலாளர் ஒருவரிடம் பகுதி நேரமாக வேலை பார்த்துள்ளார். பிறகு சிக்காக்கோ சென்று வேலை தேடியிருக்கிறார். அங்கு டிராஃப்ட்மேனாக வேலை கிடைத்திருக்கிறது. தொடர்ந்து அந்தத் துறையில் அனுபவத்தை வளர்த்துக்கொண்டு மற்றொரு புகழ்பெற்ற கட்டிட வல்லுநரான லூயீ சல்லிவனுடன் வேலை பார்க்கும் அனுபவம் ரைட்டுக்குக் கிடைக்கிறது.
அவருடன் இணைந்து மிக முக்கியமான கட்டிடங்களை வடிவமைத்தார். அமெரிக்காவில் எழுந்த Arts and Crafts movement என்னும் புத்துயிக்கத்தால் ஊக்கம் பெற்ற கட்டிடக் கலை நிபுணர்களில் ஒருவர் சல்லிவன். அதனால் அதன் தாக்கத்தை ரைட்டும் பெற்றார். அதை இன்றும் கம்பீரம் வீசும் அவர் கட்டிடங்களில் உணர முடிகிறது.
ரைட் பிறகு சல்லிவனிடம் இருந்து விலகித் தனியாகக் கட்டிடங்களை வடிவமைக்கத் தொடங்கினார். அமெரிக்கா மட்டுமின்றி, ஜப்பான், அயர்லாந்து உள்ளிட்ட நாடுகளிலும் கட்டிடங்களை வடிவமைத்தார். இவர் 1959-ம் ஆண்டு மரணமடைந்தார். இவரை கவுரவிக்கும் வகையில் அமெரிக்க அரசு சிறப்பு தபால் தலையை வெளியிட்டுள்ளது.
பிராங்க் லாயிட் ரைட்