

நாளுக்கு நாள் விரிவடைந்து கொண்டிருக்கிறது சென்னை மாநகரம். மக்களின் வீடு தேவைகளை நிறைவேற்றுவதில் சிறிய கட்டுமான நிறுவனங்கள் முதல் முன்னணி கட்டுமான நிறுவனங்கள் வரை போட்டி போட்டுக்கொண்டு மக்களை ஈர்த்து வருகின்றன என்பதும் நமக்கு தெரியும். ஆனால் சென்னையின் இந்த வளர்ச்சிக்கு முக்கியக் காரணமாக இருக்கிறது ஓஎம்ஆர் என்று அழைக்கப்படும் பழைய மகாபலிபுரம் சாலை. அந்நிய செலாவணி ஈட்டுவது முதல் அடுக்குமாடிக் குடியிருப்பு வளர்ச்சி வரைக்கும் முக்கியப் பங்கு வகிக்கிறது ஓஎம்ஆர்.
சென்னையின் மொத்த ரியல் எஸ்டேட் பரிவர்த்தனையில் ஓஎம்ஆர் பகுதி மட்டும் சுமார் 40 முதல் 50 சதவீதமாக உள்ளது. சென்னை நகரில் வீடு வாங்குபவர்களில் 50 முதல் 60 சதவீத நபர்களின் வயது 25 முதல் 35 ஆக இருக்கிறது. இவர்களில் குறிப்பிட்ட சதவீதத்தினர் ஐடி மற்றும் ஐடி துறை சார்ந்த பணியாளர்கள் என்கிறது ரியல் எஸ்டேட் துறை சார்ந்த புள்ளி விவரங்கள்.
வசதிகள் நிறைந்த பகுதி
வாழ்க்கை தரத்தைச் சிறப்பாக அமைத்துக் கொள்வதற்கான அனைத்து வசதிகளும் கொண்ட பகுதியாக இருப்பதுதான் இந்தச் சாலையின் சிறப்பு. வேலை பார்க்கும் அலுவலகம், குழந்தைகள் படிக்க பள்ளி, கல்லூரி, மருத்துவமனை, போக்குவரத்து, பொழுதுபோக்கு என எல்லா அம்சங்களிலும் பொருத்தமாக இருப்பதால் இளைய தலைமுறையின் தேர்வாக இந்தப் பகுதி உள்ளது.
பொதுவாக இந்தப் பகுதி ரியல் எஸ்டேட் வளர்ச்சி ஐ.டி நிறுவனங்களை நம்பியே உள்ளது. வேகமாக வளர்ந்து வரும் குடியிருப்புகளும் ஐ.டி நிறுவன ஊழியர்களையே குறிவைக்கின்றன. பெருங்குடியிலிருந்து சோழிங்கநல்லூர் வரை வேகமாக வளர்ந்துவிட்டது. ஆனால் இளைய தலைமுறையினர் முதலீட்டு நோக்கத்துக்காகவும் வீடுகளை வாங்கும் போக்கு அதிகரித்து உள்ளது.
சோழிங்கநல்லூர் வரை பரபரப்பாக இருக்கும் இந்த ஐடி காரிடர் அதற்கடுத்து சிறுசேரி வரை தற்போது மெல்ல மாற்றங்களைக் கண்டு வருகிறது. அடுத்த சில வருடங்களில் நிலை மாறலாம். அங்கிருந்து கேளம்பாக்கம் வரை தற்போது அடுக்குமாடிக் குடியிருப்புகள் வளர்ந்து வருகிறது. இன்னும் சில வருடங்களில் திருப்போரூர் வரை வளர்ச்சி எட்டிப் பிடித்துவிடும் என நம்பலாம். தற்போது படூர், கேளம்பாக்கம் பகுதிகள் வீடு வாங்குவது மக்களின் தேர்வாக உள்ளது. பண்டிதமேடு தண்டலம், வெங்கமேடு வரை ஒரு சில இடங்களில் மனை விற்பனை நடந்து வருகிறது.
அடுக்கு மாடிகள் நிறைந்தப் பகுதி
சென்னை ரியல் எஸ்டேட் விலை நிலவரங்களைப் பொறுத்தவரை கிழக்குக் கடற்கரைச் சாலை வழியில்தான் விலை அதிகமாக இருக்கும் என்கிற நிலைமை மாறிவிட்டது. தற்போது ஓஎம்ஆர் தான் விலை மதிப்பான பகுதி. எனவே இடம் வாங்கி வீடு கட்டுவது என்பது நடுத்தரவாசிகளுக்கு முடியாத காரியம். இந்தப் பகுதிகளில் சதுர அடி மற்றும் சென்ட் கணக்கில்தான் இடங்கள் விற்பனை நடக்கிறது. சென்னையின் பிற பகுதிகளைப் போல இங்கு அவ்வளவு எளிதில் மனை வாங்க முடியாது. புரமோட்டர்கள் பிரித்து விற்பதும் கிடையாது. இடத்தைப் பொறுத்து வாங்கும் நபர்களைப் பொறுத்தே விலை இருக்கும். தனிநபர்கள் இடம் வாங்கி வீடு கட்டுவது என்கிற பழக்கம் இந்தப் பகுதிகளில் இல்லை. அடுக்குமாடி வீடுகள்தான் மக்களின் தேர்வு என்று குறிப்பிடலாம்.
இதற்கேற்ப அடுக்குமாடிக் குடியிருப்புகளும் உருவாகி வருகிறது. வில்லாக்கள், இரண்டு தளம் கொண்ட வீடுகள், உயர் சொகுசு அடுக்குமாடி வீடுகள் இந்தப் பகுதிகளிள் வளர்ந்து வருகிறது. தவிர ரூ.25 லட்சம் 35 லட்சம் வரையிலான அடுக்குமாடி வீடுகளும் வளர்ந்து வருகின்றன.
சிறப்பாக வாழ்க்கைத் தரத்துக்கு ஏற்ப அமைந்துள்ள பகுதி இது. சென்னை நகரத்துக்கு வருவதற்கான போக்குவரத்து, கிழக்குக் கடற்கரைச் சாலை மற்றும் ஜிஎஸ்டி சாலையை சுலபமாக அடைந்து விடலாம். ஏர்போர்ட் செல்வதும் எளிது. அடையாறு, தரமணி, என அனைத்துப் பகுதிகளுக்கும் அரை மணி நேரத்தில் சென்றுவிடலாம்.
இந்தப் பகுதிகளில் கவனிக்க வேண்டிய விஷயமும் உள்ளது. திருப்போரூர் பக்கம் கோயில் நிலங்கள், நத்தம் நிலங்கள் உள்ளதால் ஆவணங்களைப் பார்த்து இடமோ வீடோ வாங்கவும். உயர் சொகுசு அடுக்குமாடி வீடுகளில் நீச்சல் குளம், நடைப்பயிற்சி பாதை, பூங்கா, அங்காடிகள் என அனைத்து வசதிகளுக்கும் பில்டர்கள் வாக்குறுதி கொடுக்கின்றனர். முக்கியமாக இந்தப் பகுதிகளில் உள்கட்டமைப்பு மக்களுக்குப் பொருத்தமாக இருப்பதால் வீடு வாங்குபவர்களின் இந்தப் பகுதியைத் தேர்வு செய்யலாம்..
ஓ.எம்.ஆர்.
‡ சென்னையின் பிற பகுதிகளைப் போல அனைத்துத் தரப்பு மக்களின் புழக்கம் இங்கே கிடையாது. குறிப்பிட்ட வருவாய் பிரிவினருக்கு என்றே உருவாக்கப்பட்ட பகுதியாக இருக்கிறது. குளோபல் மருத்துவமனை, செட்டிநாடு மருத்துவமனை உள்ளிட்ட பல சர்வதேசத் தரத்திலான மருத்துமனைகள் இப்பகுதியில் உள்ளன.
‡ சென்னையில் ஓடும் குளிர்சாதன வசதி கொண்ட பேருந்துகளில் சுமார் 50 சதவீத பேருந்துகள் இந்தப் பகுதிக்காக மட்டுமே இயக்கப்படுகின்றன.
‡ இப்பகுதியில் மோனோ ரயில் திட்டத்துக்கான அறிவிப்பும் உள்ளது.
‡ பன்னாட்டு உணவகங்கள், ஷாப்பிங் சென்டர்கள், பொழுதுபோக்கு மையங்கள் என அனைத்து வசதிகளும் கொண்ட பகுதி.
‡ நிலத்தடி நீர் தாராளமாக கிடைக்கிறது.