அலங்காரமான அலமாரிகள்!

அலங்காரமான அலமாரிகள்!
Updated on
2 min read

மனதுக்கு நெருக்குமான பொருட்களை அலமாரிகளில் அதற்கே உரிய முக்கியத்துவத்துடன் அடுக்கிவைப்பதுகூட ஒரு கலைதான். உங்களுக்குப் பிடித்த பொருட்களை அனைவருடைய பார்வையில் படும்படி அடுக்கிவைத்துப் பாராட்டுகளைப் பெறமுடியும். உங்கள் ஷோகேஸ், புத்தக அலமாரிகளில் பொருட்களை அழகாக அடுக்கிவைப்பதற்கான சில வழிமுறைகள்...

கதை சொல்ல வேண்டும்

அலமாரிகளில் பொருட்களை அடுக்கும்போது, அவை உங்களுடைய கதையைச் சொல்லும்படி அடுக்க வேண்டும். உங்களுக்குப் பிடித்த பொருட்களை மட்டும் அடுக்கும்போது, அந்தப் பொருட்களே உங்கள் கதையை எல்லோருக்கும் சொல்லிவிடும். இப்படி அடுக்குவதால், உங்கள் அலமாரி ‘நிறச்சரிவை’போல் காணப்படும். அடுக்கும்போது, நிறம், அமைப்பு, தன்மை போன்றவற்றைக் கணக்கில் எடுத்துக்கொள்ளலாம். உதாரணத்துக்கு, நீங்கள் பயணப்பிரியர் என்றால், உங்களிடம் இருக்கும் பயணங்களின் புத்தகங்களைப் புத்தக அலமாரியில் முன்னுரிமை கொடுத்து அடுக்கலாம். பல்வேறு பயணங்களின்போது நீங்கள் வாங்கிய பொருட்கள், பயணங்களின்போது எடுத்துக்கொண்ட படங்கள் போன்றவற்றையும் சேர்த்து அடுக்கலாம்.

உயரத்தின் அழகு

அலமாரியின் அழகைக் கூட்டுவதற்கு நீங்கள் அடுக்கும் பொருட்களின் உயரமும் உதவும். பல்வேறு விதமான உயரங்களில் இருக்கும் உங்களுக்குப் பிடித்தமான பொருட்களைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள். இந்தப் பொருட்களை அடுக்குவதற்கு கற்பனையில் ஒரு முக்கோண வடிவத்தை உருவாக்கிக்கொள்ளுங்கள். சிறிய பொருட்கள் முக்கோணத்தின் அடிப்பாகத்தில் இருக்க வேண்டும். உயரமான பொருள் முக்கோணத்தின் உச்சியாக இருக்கவேண்டும். தொட்டியில் இருக்கும் பூங்கொத்துகள், படச் சட்டகங்கள், கண்ணாடிகள், மேசை விளக்குகள், செங்குத்தான பொருட்கள் போன்றவற்றை உயரமான தோற்றத்தை அளிப்பதற்குப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

மாறுபட்ட அமைப்புகள்

வீட்டின் உட்புற அலங்காரத்தில், எப்படிப் பல்வேறு அமைப்புகளைச் சேர்க்கிறோமோ, அதே மாதிரி அலமாரிகளிலும் பல்வேறு அமைப்பில் (டெக்ஸ்ச்சர்) இருக்கும் பொருட்கள் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். அலமாரியில் ஒரே அமைப்பில் இருக்கும் பொருட்களை அடுக்கும்போது சலிப்பான தோற்றத்தைக் கொடுக்கும். மரத்தாலான பொருட்கள், பழமையைப் பறைசாற்றும் பொருட்கள், பசுமையை உணர்த்தும் பொருட்கள் எனப் பலவும் அலமாரியில் இடம்பெறுமாறு பார்த்துக்கொள்ளலாம். இது ஒருவிதமான பிரகாசமான தோற்றத்தை அலமாரிக்குக் கொடுக்கும்.

புத்தகங்களுக்காக மட்டுமல்ல

புத்தக அலமாரிகளில் புத்தகங்களை மட்டுந்தான் அடுக்க வேண்டும் என்பதில்லை. அங்கே உங்களுக்குப் பிடித்த வித்தியாசமான பொருட்களையும் அடுக்கலாம். எப்படிப் பொருட்களை வைத்து கதை சொல்கிறோமோ, அதே மாதிரிதான். புத்தகங்களுடன் உங்கள் ரசனையை வெளிப்படுத்தும் பொருட்களையும் இணைக்க வேண்டும். உதாரணத்துக்கு, உங்களுக்கு வரலாற்றுப் புத்தகங்கள் பிடிக்குமென்றால், புத்தக அலமாரியின் முதல் அடுக்கில் வரலாற்றுப் புத்தகங்களை அடுக்கிவிட்டு, அதற்கு அடுத்த அடுக்கில் வரலாறு தொடர்பாக உங்களிடம் இருக்கும் கலைப்பொருட்களை அடுக்கலாம். இது புத்தக அலமாரிக்குப் புதுமையான தோற்றத்தைக் கொடுக்கும்.

காலி இடத்தின் எழில்

அலமாரியின் எல்லா இடங்களையும் பொருட்களை வைத்து நிரப்ப வேண்டும் என்ற அவசியம் இல்லை. சில இடங்களைக் காலியாக வைப்பதன் மூலமாகவும் அலமாரிக்கு எழிலான தோற்றத்தைக் கொடுக்க முடியும். இது பார்வைக்கு ஓய்வுக்கொடுக்கும். நிறைய பொருட்களை ஒரே இடத்தில் குவித்துவைக்காத மாதிரியும் இருக்கும்.

விதிகள் தேவையில்லை

இந்த அலமாரி அலங்காரத்திற்கு எந்த விதிகளையும் கட்டாயமாகப் பயன்படுத்த வேண்டுமென்ற அவசியமல்ல. பக்கத்து வீட்டிலோ, உங்கள் நண்பர்களின் வீட்டிலோ எப்படி அடுக்கிவைத்திருக்கிறார்களோ, அதேமாதிரிதான் அடுக்கவேண்டும் என்று யோசிக்காதீர்கள். உங்கள் பயணத்தின்போது வாங்கிய சிறிய அணிகலனாக இருந்தாலும் சரி, உங்கள் பாட்டி, தாத்தாவின் தேநீர் கோப்பைகளாக இருந்தாலும் சரி, உங்களுக்குப் பிடித்திருந்தால் அவற்றை அலமாரியில் வைக்கலாம். இந்த ஷோகேஸில் இருக்கும் பொருட்களை உங்களுக்கு நேரம் கிடைக்கும்போதெல்லாம் மாற்றி வைக்கலாம். எல்லா பொருட்களையும் மொத்தமாக அலமாரியில் வைக்காமல், குறிப்பிட்ட பொருட்களைத் தேர்ந்தெடுத்து ஆறு மாதத்துக்கு ஒருமுறை மாற்றலாம்.

சுவர் அலங்காரம்

பின்னால் இருக்கும் சுவர்கள் தெரியும்படி அலமாரிகளை வைக்கவேண்டும். இப்படிவைப்பதால், அந்தச் சுவர்களையும் அலமாரிகளுக்கு ஏற்றமாதிரி அலங்கரிக்க முடியும். இந்தச் சுவர்கள் உயரத்தையும், செங்குத்துக் கோடுகளையும் உருவாக்கும். அந்த சுவர்களில் கண்ணாடிகளையும், கலைப்பொருட்களையும் மாட்டிவைக்கலாம். ஒருவேளை, அந்தப்பொருட்களைச் சுவரில் மாட்டிவைக்க முடியவில்லையென்றால், சாய்த்துவைக்கலாம். அந்தப் பொருட்களின் உயரம் அலமாரிக்கு ஏற்றமாதிரி இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

இந்த ஆலோசனைகளை வைத்து உங்கள் அலமாரிகளின் தோற்றத்தைப் புதுமையாக மாற்றலாம். ஆனால், இவையெல்லாம் கட்டாயமாகப் பின்பற்றவேண்டிய விதிகள் இல்லை. வெறும் ஆலோசனைகள் மட்டும்தான். உங்கள் அலமாரியின் தோற்றம் உங்களைப் பிரதிபலிக்க வேண்டும் என்பதுதான் முக்கியம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in