

வீட்டுக்கு எது அழகோ அதற்குத் தகுந்தாற்போல் வீட்டை அலங்கரித்த காலம் இன்று மலையேறி வருகிறது. எல்லாப் பொருட்களையும் பொருந்தும்படி பார்த்து பார்த்து வீட்டை அலங்கரித்துக் கொண்டிருந்த வழக்கம் மாறி, இப்போது பொருத்தமற்ற பொருட்களை வைத்து அலங்கரிக்கும் முறை பரவி வருகிறது.
பொருத்தமற்ற பொருட்களின் கலவையில் வீட்டை அலங்கரிப்பது ஒருவகையான கலை. இப்படியான அலங்காரம் வீட்டுக்குப் புதுமையான தோற்றத்தைக் கொடுக்கும். ஆனால், இந்தப் பொருத்தமற்ற பொருட்களை வைத்து ஏனோ தானோவென்று வீட்டை அலங்கரித்துவிட முடியாது.
அந்தப் பொருட்களின் கலவை ஏதாவது இரண்டு விஷயங்களிலாவது ஒருங்கிணைந்ததாக இருப்பது மிகவும் அவசியம். அப்படியில்லாவிட்டால் இந்த ‘மிஸ்-மேட்சிங்’ அலங்காரம் சரியானதாக இல்லாமல் போய்விடும்.
பொருத்தமற்ற நாற்காலிகள்
டைனிங் டேபிள் எனப்படும் சாப்பிடும் மேஜையில் போட்டிருக்கும் நாற்காலிகளை வைத்து வீட்டுக்கு ‘மிஸ்-மேட்சிங்’ தோற்றத்தை அழகாகக் கொடுக்கலாம். சாப்பிடும் மேஜையில் எப்படி வித்தியாசத்தைக் காட்ட முடியும் என்று நீங்கள் நினைக்கலாம். அதற்குச் சில வழிகள் உள்ளன.
சாப்பிடும் மேஜை வாங்கும்போது நாற்காலிகளின் வடிவமைப்புகளை ஒரே மாதிரி இல்லாதவாறு பார்த்து வாங்க வேண்டும். ஆனால், அதன் இருக்கைகளின் துணி, நிறம், அமைப்பு எல்லாம் ஒரேமாதிரி இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
இந்தப் பொருத்தமற்ற நாற்காலிகள் சாப்பாட்டு மேஜைக்கு வித்தியாசமான அழகைக் கொடுக்கும். சாப்பாட்டு மேஜையின் மீது வைக்கும் பூந்தொட்டிகளையும் பொருத்தமற்ற வடிவங்களில் வைக்கலாம்.
பொருத்தமற்ற மேஜைகள்
மேஜைகளை வாங்கும்போதும் வடிவங்கள் வெவ்வேறாக இருக்கலாம். ஆனால், நிறமும் அளவும் பொருந்தும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். இந்த மேஜைகளைப் படுக்கைக்கு இரு புறமும் வைக்கும்போது வெவ்வேறு வடிவத்தில், ஒரே மாதிரியான தோற்றத்தைக் கொடுக்கும்.
பொருத்தமற்ற ஃபிரேம்கள்
வரவேற்பறையில் மாட்டப்படும் ஒளிப்படங்களின் ஃபிரேம்களைப் பொருத்தமற்றதாக மாட்டுவதன் மூலம்கூட வீட்டுக்குப் புதுப்பொலிவைக் கொடுக்கலாம். ஃபிரேம்கள் வெவ்வேறு நிறங்களிலும், அமைப்பிலும் இருக்கலாம். ஆனால், ஏதாவது ஒரு ஒற்றுமை அவற்றுக்குள் இருக்குமாறு பார்த்துக்கொண்டாலே போதும்.
பொருத்தமற்ற அறை கலன்கள்
ஃபர்னிச்சர்கள் எனப்படும் அறைகலன்களைத் தேர்ந்தெடுக்கும்போது அவை ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்பதில்லை. இந்த அறைகலன்களின் அமைப்பு, நிறம், இருக்கை என எல்லாமே வித்தியாசமானதாக இருக்கலாம்.
ஆனால், அவற்றின் உயரமும், அறைகலன்கள் செய்யப்படும் பொருளும் மட்டும் ஒரே மாதிரி இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். உதாரணத்துக்கு, உங்களுக்கு மரத்தாலான அறைகலன்கள் பிடிக்குமென்றால், அவற்றை வித்தியாசமான வடிவங்களிலும், ஒரே உயரத்திலும் செய்து பயன்படுத்தலாம்.
இப்படி இன்னும் நிறைய ‘மிஸ்-மேட்சிங்’ விஷயங்கள் வீட்டை அலங்கரிப்பதில் உள்ளன.