Last Updated : 07 Feb, 2015 12:40 PM

 

Published : 07 Feb 2015 12:40 PM
Last Updated : 07 Feb 2015 12:40 PM

வீட்டுக்கு ரிமோட் கன்ட்ரோல்

உட்கார்ந்த இடத்திலிருந்தே சாவகாசமாகத் தொலைக்காட்சி பெட்டியையும், குளிர்சாதனப் பெட்டியையும் ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்கிக் கொண்டிருக்கும் உங்களுக்கு ஒட்டுமொத்த வீட்டையும் இயக்க ஒரே ரிமோட் கண்ட்ரோல் கிடைத்தால் எப்படி இருக்கும்?

அப்படியொரு ரிமோட் கண்ட்ரோல் உள்ளது. அதைத் ‘தானியங்கி வீடு’ என்று அழைக்கிறார்கள். வீட்டில் உள்ள மின் மற்றும் மின்னணுப் பொருள்களைக் கட்டுப்பாட்டில் வைக்கத் தனித்தனியே ரிமோட் கண்ட்ரோல் பயன்படுத்துவதற்குப் பதிலாக அனைத்துக்கும் ஒரே கட்டுப்பாடு மையம். வீட்டின் ஒளி அமைப்பு முதல் பாதுகாப்பு, கண்காணிப்பு வரை பலதரப்பட்ட விஷயங்களை ஒரு புள்ளியில் இணைக்கும் தொழில்நுட்பம்தான் தானியங்கி வீட்டுத் திட்டம்.

ரிமோட் கண்ட்ரோல் போன்ற ஒரு சாதனம் மூலம் இவை அத்தனையையும் இயக்கலாம். ஆனால் இன்று அப்படி ஒரு தனிக் கருவிகூட வாங்கத் தேவையில்லை. நீங்கள் வைத்திருக்கும் ஸ்மார்ட் போன் அல்லது டேப்லட் கணினி மூலமாகவே இவை அனைத்தும் சாத்தியம்.

எங்கிருந்தும் இயக்கலாம்

தானியங்கி வீட்டுத் திட்டத்தின் தனிச் சிறப்பு எதுவெனில் இது தொழில்நுட்பம் மூலம் வீட்டில் உள்ள கருவிகளை எளிமையாகக் கட்டுப்படுத்த உதவும். பொதுவாக ரிமோட் கண்ட்ரோல் கொண்டு ஒரு கருவியை இயக்கும்போது அதிகபட்சம் 25 அடி தொலைவில் இருந்துதான் இயக்க முடியும். அதுவும் குறுக்கே தடுப்பு இருக்கக் கூடாது.

ஆனால் தானியங்கி வீட்டுத் திட்டத்தை உங்கள் வீட்டில் நிறுவிய பிறகு தூரம் என்பது ஒரு தடை அல்ல. உலகின் எந்த மூலையில் இருந்தபடியும் நீங்கள் உங்கள் வீட்டை முற்றிலுமாக உங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள முடியும். அதற்குக் காரணம், தானியங்கி வீட்டுத் திட்டம் கணினி தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இயங்குகிறது. இணையதளம் மூலம் இது ஒருங்கிணைக்கப்படுவதால் நீங்கள் எங்குச் சென்றாலும் உங்கள் கை கணினி அல்லது ஸ்மார்ட் போனை வருடிய நொடியில் உங்கள் வீட்டில் நீங்கள் செய்ய நினைக்கும் மாற்றம் நடந்தேறும்.

சேமிப்புத் திட்டமும் கூட!

மின் விளக்குகளை இயக்க இதில் டைமர் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டைமரில் ஆன் மற்றும் ஆஃப் நேரத்தைக் குறித்தால் போதும் விளக்குகள் தானாக இயக்கப்படும். இதன் மூலம் மின் ஆற்றலைச் சிக்கனப்படுத்தலாம். அதுமட்டுமல்லாமல் வீட்டின் பாதுகாப்புக்கும் இது உதவும்.

நீங்கள் நினைத்த மாத்திரத்தில் எந்த விளக்கையும் ரிமோட் கண்ட்ரோல் மூலம் ஆன், ஆஃப் செய்ய முடிந்தால் உங்கள் வீடு முழுவதும் உங்கள் நேரடி கண்காணிப்பில் இருப்பதாக வெளியில் இருப்பவர்களுக்கும் தோன்றும். வீட்டின் ஒளி அமைப்பைத் தானியங்கி திட்டத்துக்குள் கொண்டுவர வீட்டின் மின் கம்பத்துடன் நேரடி தொடர்பு ஏற்படுத்துவது ஒரு முறை. ஆனால் இதற்கு அதிகம் செலவாகும். அதற்குப் பதிலாக நீங்கள் குறைந்த செலவில் ஒரு மின் கருவியை வீட்டுக்குள்ளேயே பொருத்தலாம்.

யார் அது?

வீட்டின் பாதுகாப்பு என்பது மிகப் பெரிய சிக்கலாக இன்றைய சூழலில் உருவெடுத்து வருகிறது. வீட்டின் அழைப்பு மணி அடிக்கும் போதெல்லாம் மனதுக்குள் ஒரு விதமான பதற்றம் தொற்றிக் கொள்கிறது. கதவைத் திறக்கலாமா? வேண்டாமா? எனப் பயந்து பயந்து மெதுவாகத் திறந்து பார்க்கிறோம்.

இது போன்ற சிக்கல்களைக் கையாளக் கதவைத் துப்பறியும் கருவி முதல் அசைவைக் கண்காணிக்கும் கருவி, ஆன்லைன் கேமரா மற்றும் முகத்தை அடையாளம் காணும் தொழில்நுட்பம் வரை பலவிதமான தானியங்கி தொழில்நுட்பங்கள் உள்ளன.

வெப்பமோ, குளிரோ

ஹெச் வி ஏ சி (HVAC) என்று அழைக்கப்படும் சூடேற்றுதல், காற்றோட்டம் மற்றும் குளிர்சாதனப் பராமரிப்பு இப்படிப் பல்வேறு விஷயங்களையும் தானியங்கி தொழில்நுட்பம் கொண்டு கட்டுப்படுத்தலாம்.

ஒவ்வொரு அறையும் எவ்வளவு தட்ப வெப்பத்தில் இருக்க வேண்டும் என நீங்கள் விரும்புகிறீர்களோ அதற்கேற்ற ஒரே கருவி கொண்டு வெப்ப நிலையைச் செட் செய்து கொள்ளலாம்.

நவீனமான விஷயங்களை வீட்டில் பொருத்திப் பார்க்க ஆசைப்படுபவர்களுக்குத் தானியங்கி வீடு உற்ற நண்பனாகச் செயல்படும்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x