

நவீன வாழ்க்கை முறைக்கு ஏற்ப குடியிருக்கும் வீட்டை அழகுபடுத்திப் பார்க்கும் ஆசை எல்லோருக்கும் இருக்கும். ஆனால் இன்று பெரும்பாலோர் குடியிருக்கும் வீட்டின் அடித்தளம் பூமியின் மேல் இல்லை. வேறொரு வீட்டின் கூரை மேல்தான் உள்ளது.
அடுக்குமாடிக் குடியிருப்புகளின் நிலை அதுதானே! அப்படி இருக்க வீட்டைத் தன் இஷ்டம் போல மாற்றி வடிவமைப்பது, புதிய அறைகளைக் கட்டுவது என்பது சாத்தியமில்லை. அதற்குப் பதிலாகத் தற்காலிகமாக அதே சமயம் கலைநயத்தோடு நம் வீட்டைப் புதுப்பிக்க வழிவகை செய்துதரக்கூடியது அறை பிரிப்பான் (Room Divider).
இடம் இருந்தாலும், இல்லாவிட்டாலும்!
அறை பிரிப்பான் என்பது ஒரு அறையைப் பிரிக்கப் பயன்படும் திரை அல்லது பொருள். அறை பிரிப்பான்களை உங்கள் வீட்டில் பொருத்தினால், ஒரே அறையை இரண்டுக்கும் மேற்பட்ட அறைகளாகப் பிரித்து வெவ்வேறு விதமாகப் புழங்கலாம். நீங்கள் வெளிப் பார்வைக்குக் காட்ட விரும்பாத அறையை ஒரு பிரிப்பான் திரையிடுவதன் மூலம் மறைத்துக் கொள்ளலாம்.
அதே நேரம் இது உங்கள் வீட்டின் அழகையும் கூட்டும். நிரந்தரமாக ஓர் இடத்தில் பொருத்தக்கூடிய பிரிப்பான், இடம் பெயர்த்துக் கொண்டு செல்லும் பிரிப்பான், விரித்து மடக்கக்கூடிய பிரிப்பான், மேலிருந்து கீழே தொங்கவிடும் பிரிப்பான், அறையில் குறுக்கே அலமாரி போலப் பொருத்தப்படும் பிரிப்பான் எனப் பலவிதமான அறை பிரிப்பான்கள் உள்ளன.
உங்கள் வீட்டின் வரவேற்பறை விசாலமாக இருக்குமானால் அதை இரண்டு அறைகளாகப் பிரித்துக் கொள்ளக் குறுக்கே விரித்து மடக்கக்கூடிய பிரிப்பானைப் பொருத்தலாம். அதே உங்கள் வீட்டில் ஒரே ஒரு அறைதான் உள்ளது குழந்தைகள் இருக்கிறார்கள் என்றால், வண்ணமயமான திரை போன்ற பிரிப்பானைத் தொங்க விட்டால் அதைச் சுற்றியுள்ள பகுதியில் குழந்தைகள் விளையாட விரும்புவார்கள்.
இப்படி எந்தக் காரணமும் இல்லை. ஆனால் வீட்டைப் புதுப்பித்துப் பார்க்க ஆசையாக இருந்தால், கண்கவரும் வடிவமைப்பில் விதவிதமான பிரிப்பான்கள் உள்ளன. அவற்றைப் பொருத்திப் பார்த்துப் பார்த்து ரசிக்கலாம்.
பிரிப்பானுக்குப் பின்னால்…
அறை பிரிப்பான் என்பது நவீனக் கட்டிடக்கலையின் கண்டுபிடிப்பாகத் தோன்றலாம். ஆனால் இது 1300 ஆண்டுகள் பழமைவாய்ந்தது. ஏழாம் நூற்றாண்டில் சீனர்கள்தான் விரித்து மடிக்கும் அறை பிரிப்பானை முதன்முதலில் வடிவமைத்தார்கள். ஆனால் இடநெருக்கடியைச் சமாளிக்க அவர்கள் பிரிப்பானை உருவாக்கவில்லை.
அரசக் குடும்பத்தினர் தங்கள் அரண்மனையை அழகுபடுத்தப் பயன்படுத்தினார்கள். அப்போது பயன்படுத்தப்பட்ட பிரிப்பான்கள் கை வேலைப்பாட்டில் அலங்கரிக்கப்பட்டு மிகவும் கனமாக இருந்தமையால் இடம் பெயர்க்க முடியாதபடி ஒரே இடத்தில் பொருத்தப்பட்டிருந்தன.
பின்னர் எட்டாம் நூற்றாண்டில் ஜப்பானியர்கள் எடைக் குறைவானப் பிரிப்பான்களை வடிவமைத்துத் தேநீர் விருந்து, சமயச் சடங்குகளின் போது அந்தந்த இடத்துக்குக் கொண்டு சென்று விரித்துப் பயன்படுத்தியுள்ளார்கள். அதன் பின் ஐரோப்பிய யாத்ரீகர்கள் தோல், பட்டு, கண்ணாடி, மரம் உள்ளிட்ட பொருள்களால் செய்யப்பட்ட பிரிப்பான்களை பல்வேறு வடிவங்களில் உருவாக்கத் தொடங்கினார்கள்.
இத்தகைய வரலாற்று பின்புலம் கொண்ட பிரிப்பான்களைக் கொண்டு நாமும் நம் வீட்டை அழகுபடுத்தவும் அதேசமயம் வீட்டில் உள்ள இடத்தைத் திறம்படப் பயன்படுத்தவும் உபயோகிக்கலாமே!