

உயிர்மூச்சு (31.1.2015) இதழில் வெளியான சூழலியல் எழுத்தாளர் நக்கீரனின் நேர்காணலில் ஆனைச்சாத்தான் பறவையே கரிச்சான் குருவி என்று ஒரு முதியவர் தெரிவித்ததாகக் கூறியிருந்தார்.
அவர் கூறியுள்ளது போலவே, ஆனைச்சாத்தான் என குறிப்பிடப்படுவது கரிச்சான் குருவிதான் என்பது சரியான கருத்து.
இது அதிகாலை 4 மணிக்கு கீச்சு கீச்சு என்று இனிமையாக ஒலி எழுப்பும். அத்துடன் பசுக்கள் மேயும் இடத்தில் பசுக்கள் மீது ஏறி சவாரி செய்யும் காட்சியையும் காணலாம்.
திருப்பாவை பாடலில் வரும் ஆனைச்சாத்தான் பறவை எது என்று மூன்று ஆண்டுகளுக்கு முன் நானும் தேடினேன். அது கரிச்சான் குருவி என்ற முடிவுக்கு நான் வந்ததற்குக் காரணம் இருக்கிறது.
ஆநிரை என்றால் பசுக்கள் கூட்டம். சாத்தான் என்பது சார்ந்து இருப்பது அல்லது காவல் புரிவது (காத்தான்). இதனால் இந்தப் பறவை ஆநிரைச்சாத்தான் என்று அழைக்கப்பட்டு, பின்னர் அது ஆனைச்சாத்தான் என்று மருவி இருக்கலாம்.
இதை பறவைகளின் அரசன் என்றும் கூறுவார்கள். உருவத்தில் சிறிய இப்பறவையைக் கண்டால் மற்ற பறவைகள் ஓடிவிடும்.
காகங்கள், பசுக்களின் உடலில் உள்ள சிறிய காயங்களைக் கொத்திப் பெரிதாக்கிவிடும். இதைத் தடுக்கவே இவை பசுக்கள் மீது அமர்ந்திருக்கலாம் என்று நான் கருதுகிறேன்.
- பாவனா ஆரிச்சன், திருநெல்வேலி