

நாகரிக வளர்ச்சியின் முக்கியமான அம்சங்களில் ஒன்று கட்டிடக் கலை. மழை, வெயில், புயல் போன்ற இயற்கைச் சீற்றங்களில் இருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள ஆதி மனிதன் வீடுகளைக் கட்டினான். அதற்குப் பிறகு வந்த தலைமுறையினர் அதில் பலவிதமான புதுமைகளைக் கொண்டு வந்தனர். கட்டிடம் என்பதைக் கலையாக மாற்றினர்.
அந்தக் கலை இன்று அறிவியலின் வளர்ச்சியால் நவீனமடைந்துள்ளது. இதை நவீனமாக்கிய கட்டிடக் கலை சிற்பிகளில் குறிப்பிடத்தகுந்தவர் ஃபிராங்க் கெரி.
இவர் 1929 பிப்ரவரி 28-ம் தேதி கனடாவில் பிறந்தார். இளமையிலேயே ஓவியக் கலையில் விருப்பமுடன் இருந்தார். பிறகு 1947-ம் ஆண்டு அமெரிக்காவுக்கு இடம்பெயர்ந்தார். அங்கே லாரி டிரைவராகப் பணியாற்றிக்கொண்டே கல்லூரிப் படிப்பை முடித்தார்.
பிறகு தென் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் கட்டிடக் கலை குறித்த படிப்பில் சேர்ந்தார். கல்லூரிப் படிப்பை முடித்த பிறகு பல காலம் கட்டிடக் கலை அல்லாத மற்ற பணிகளில்தான் ஈடுபட்டார். அமெரிக்க ராணுவத்தில் பணியாற்றினார். 1957 கேம்பரிட்ஜ் நகருக்கு இடம்பெயர்ந்து அங்கு நகரத் திட்டமிடல் குறித்துப் படித்தார். இந்தப் படிப்பை முடித்த பிறகு முழுவதும் கட்டிடக் கலை சார்ந்த பணிகளில் ஈடுபடத் தொடங்கினார்.
கெரியின் கட்டிடக் கலை, நவீனத்துவத்திற்குப் பிந்தைய காலகட்டத்தை அடிப்படையாகக் கொண்டது. இருபத்தொன்றாம் நூற்றாண்டின் வாழ்க்கையையும் நவீனத்தையும் பிரதிபலிப்பதாக உள்ளது. இவரது கட்டிடக் கலை உலக அளவில் பிரசித்தம்.
வீடு, வர்த்தகக் கட்டிடங்கள், பொதுக் கட்டிடங்கள் எல்லாவற்றிலும் முத்திரை பதித்தவர். இவர் கட்டிய கட்டிடங்கள் எல்லாமும் சுற்றுலாத் தலங்களாக இன்று காண்பவரைக் கவர்ந்திழுத்துக் கொண்டிருக்கின்றன. 1980களில் தொடங்கிய கட்டமைப்பு விலக்கவாதப் (Deconstructivism) பாணியிலானவை இவரது கட்டிடங்கள்.