கான்கிரீட் கலவையின் விகிதம்

கான்கிரீட் கலவையின் விகிதம்
Updated on
1 min read

கட்டிடத்தின் உறுதியை நிர்ணயிப்பதில் கான்கிரீட் கவலைக்குத்தான் முக்கிய இடம். கான்கிரீட் கலவை என்பது சிமெண்ட், ஜல்லி, மணல், தண்ணீர் ஆகியவற்றின் கலவை.

தரமான சிமெண்ட், தரமான ஜல்லி என ஒவ்வொன்றாகப் பார்த்துப் பார்த்து வாங்கிவிட்டோம். இந்தத் தரம்மிக்க கட்டுமானப் பொருள்களைக் கொண்டு கான்கிரீட் கலவையைத் தயாரித்துவிட்டால் கலவை தரமானதாக ஆகிவிடுமா? இல்லை. இதில் முக்கியமானது கான்கிரீட் கலவையைச் சரியான விகிதத்தில் கலக்க வேண்டும் அது மிகவும் முக்கியமானது.

கட்டிடத்துக்கான கான்கிரீட் தயாரிக்கும்போது சிமெண்ட், மணல், ஜல்லி ஆகியவற்றை 1:2:4 என்ற விகிதத்தில் கலக்க வேண்டும். இதில் சிமெண்டின் பாதி அளவுக்குத் தண்ணீர் சேர்க்க வேண்டும். இதில் இந்தச் சேர்க்கை அதிகமானாலும் குறைந்தாலும் கலவையின் தரம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. தண்ணீரின் அளவு அதிகமானால் கான்கிரீட் கலவையின் தரம் குறைந்துவிடும். சிமெண்டில் உள்ள நுண்ணிய துகள்கள் சுருங்கி அங்கு காற்று உட்புகுந்து கான்கிரீட்டின் தரம் பாதிக்கப்படும். தண்ணீரின் அளவு குறைந்தால் கலவை சரியான பிணைப்பில்லாமல் இருக்கும். இதனால் கலவையின் உறுதித் தன்மை பாதிக்கப்படும். கான்கிரீட் கலவையை உண்டாக்க உப்புத் தண்ணீர் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். இதனாலும் கான்கிரீட் கலவையின் தரம் பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது. சில இடங்களில் விழிப்புணர்வு இல்லாமல் உப்புத் தண்ணீரைப் பயன்படுத்துகிறார்கள். இதைத் தவிர்க்க வேண்டும்.

கான்கிரீட் கலவையின் உறுதித்தன்மையை அதிகரிக்கச் சில பொருள்களை அதனுடன் சேர்க்கலாம். எரிசாம்பல், எரி உலைக் கசடுகள் போன்றவற்றைக் கலக்கலாம்.

கான்கிரீட் பூச்சுக்குக் கலவை தயாரிக்கும்போது 1:4 என்ற விகிதத்தில் இருக்க வேண்டும். ஒரு மூட்டை சிமெண்டுக்கு 4 மூட்டை மணல் என்ற அளபில் கலவை இருக்க வேண்டும். இப்படிக் கலக்கும்போது அது மென்மையாக இருக்கும். இது மேல் பூச்சுக்கு உகந்ததாக இருக்கும். வெளிப்பூச்சுக்கு 1:5 என்ற விகிதத்தில் கலக்க வேண்டும். இது வெளிப்புறப் பூச்சுக்கு உகந்ததாக இருக்கும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in