

கட்டிடப் பணிகளை எளிதாக்கப் பலவிதமான பொருள்கள், உபகரணங்கள் இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை எல்லாமும் சந்தையில் கிடைக்கின்றன. முன்பு போலக் கட்டிடப் பணி அவ்வளவு கடினமான பணி இல்லை என்று ஆகிவிட்டது.
இதற்குக் காரணம் தொழில்நுட்பத் துறையில் ஏற்பட்ட வளர்ச்சிதான். அந்த வகையில் பெயிண்ட் அடிப்பதை எளிதாக்குவதற்கான தொழில்நுட்ப உபகரணம்தான், மூடுநாடா (Masking Tape).
புதுமையாக வண்ணம் பூச விரும்புவர்களுக்கு இந்த உபகரணம் மிகவும் பயனுள்ளது. சாதாரண இன்சுலேசன் டேப் போன்றதுதான் இது. வீட்டின் ஒரு பகுதியில் சதுர வடிவில் வண்ணம் பூச நினைக்கிறோம் என வைத்துக்கொள்வோம். அதாவது சுற்றிலும் ஒரு வண்ணமும் நடுவில் வெறொரு வண்ணமும் பூச இருக்கிறோம் என்றால் அந்த நேரத்தில் இந்த டேப் உதவும்.
அதாவது முதலில் நாம் வண்ணம் பூச வேண்டிய சதுர அளவுக்கு இந்த டேப்பை ஒட்டிக்கொள்ள வேண்டும். அந்தச் சதுரக் கட்டத்துக்குள் நாம் நினைத்த வண்ணத்தைப் பூசலாம். பூசியதும் சுற்றிலும் ஒட்டியிருக்கும் டேப்பைக் கிழித்து அதை உள்புறமாக ஒட்டிக்கொள்ள வேண்டும்.
இப்போது முன்பு டேப் ஒட்டப்பட்ட இடத்தில் நாம் வெறொரு வண்ணத்தைப் பூசலாம். இந்த வண்ணம் ஏற்கனவே உள் பகுதியில் அடித்த வண்ணத்துடன் ஒட்டாமல் இருக்கத்தான் அந்த டேப்பை உள் பகுதி விளிம்பில் ஒட்டியிருக்கிறோம்.
இது மட்டுமல்லாமல் வீடு முழுமைக்கும் ஒரு வண்ணத்தில் பூசி சில இடங்களில் மட்டும் கட்டம், புள்ளிகள், வளையங்கள் என வடிவங்கள் வரைந்து,வேறு வண்ணம் பூச நினைக்கிறோம் என வைத்துக்கொள்வோம்.
அப்படியானால் வீட்டுக்கு வண்ணம் பூசும் முன்பு, நாம் அமைக்க விரும்பும் மாதிரி இந்த டேப் கொண்டு ஒட்டிக்கொள்ள வேண்டும். வண்ணம் பூசியதும் அந்த டேப்பை எடுத்துவிட்டு மேலே குறிப்பிட்ட மாதிரி அதில் வேறு வண்ணத்தைப் பூசலாம்.