

கடையின் அலமாரியில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் அலங்காரப் பொருள்களை வாங்கி வீட்டு அலமாரியில் அடுக்கி வைப்பதில் நிச்சயமாகப் பெரிய சுவாரஸ்யமோ, அழகியலோ இருக்க முடியாது. உங்கள் வீட்டுக்கு நீங்களே வேறொரு பரிமாணம் தர 3டி சுவர் கலை உள்ளது.
இயற்கை இதோ இதோ!
காகிதங்களைக் கொண்டே உங்கள் வீட்டுச் சுவரில் சிட்டுக் குருவிகளையும், பட்டாம் பூச்சிகளையும் சிறகு விரித்துப் பறக்கச் செய்யலாம். வண்ண வண்ண மலர்கள் பூத்துக் குலுங்கச் செய்யலாம். இதற்கு அபாரமான வரையும் ஆற்றல் அவசியமல்ல. வரைய முடியவில்லை என்றால் நல்ல படங்களில் இருந்து அச்சு எடுத்துக்கொள்ளுங்கள்.
ஒரே அளவாக இல்லாமல் வெவ்வேறு அளவுகளில் நீங்கள் விரும்பும் உருவத்தை வரைந்து, வண்ணம் தீட்டுங்கள். அடுத்து, சுவரில் ஒட்டுவதில்தான் 3டி கலைக்கான சூட்சுமம் இருக்கிறது. உதாரணத்துக்குப், பட்டாம்பூச்சி ஒட்டும்போது, காகிதத்தின் நடுப் பகுதியை மட்டும்தான் சுவரில் அழுத்தி ஒட்ட வேண்டும். மற்றபடி சிறகுகள் விரிந்து சுதந்திரமாகப் பறப்பதுபோல அமைய வேண்டும். அதே போல, அங்கும் இங்கும் பட்டாம்பூச்சிகளைச் சிறியதும் பெரியதுமாக ஒட்டும்போது அனிமேஷன் எஃபெக்ட் கிடைக்கும்.
சுவரில் சூரியோதயம்
வரவேற்பு அறையில் நின்றபடி ஜன்னலின் வழியே சூரியோதயம் பார்த்து ரசிக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கு உண்டு. ஆனால் நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் வாழ்க்கை முறையில் கிழக்குத் திசை எங்குள்ளது என்றே நமக்குத் தெரிவதில்லை. கவலை வேண்டாம்! கலை ஆர்வமும் இருந்தால் போதும் எப்போது வேண்டுமானாலும் சூரியனைப் பார்த்து ரசிக்கலாம்.
நீங்கள் பார்க்க நினைக்கும் அழகிய சூரியோதயம் கொண்ட பிரம்மாண்டமான போஸ்டரை முதலில் வாங்குங்கள். 54 அங்குலம் அகலம் 31 ¾ அங்குலம் உயரம் கொண்ட போஸ்டராக இருந்தால் அற்புதமாக இருக்கும். அதே அளவில் ஒரு கேன்வாஸ் ஷீட் வாங்கி, இந்த போஸ்டரைச் சரி பார்த்து அதன் மீது ஒட்டுங்கள்.
கொடுக்கப்பட்டுள்ள படத்தில் இருப்பது போல் காய்ந்த மரக் கிளை ஒன்றைத் தேர்ந்தெடுத்து வைத்துk கொள்ளுங்கள். நீங்கள் வைத்திருக்கும் படத்தின் மேல் வைத்தால் அது பொருந்திப் போக வேண்டும். படத்தை நீளவாக்கில் மூன்றாக மடக்கி, வெட்டி மூன்றாகப் பிரித்துக் கொள்ளுங்கள். இப்போது ஒவ்வொரு பகுதியும் 15 ¾ அங்குலம் அகலம், 31¾ உயரமும் இருக்கும். இந்த அளவில் அழகிய சட்டகங்கள் கிடைக்கும்.
பார்ப்பதற்கு மரத்தால் செய்தது போல இருந்தாலும் எடை குறைவான உலோகங்களில்கூட விதவிதமான சட்டகங்கள் விற்கப்படுகின்றன. அவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து. சரியாகப் படங்களின் மேல் பொருத்தி வெள்ளைப் பசை கொண்டு ஒட்டுங்கள். மரக் கிளைகளையும் சட்டகத்துக்குள் பொருந்தும்படி அறுத்து எடுத்து, நுனிகளை மட்டும் சட்டகத்தில் ஒட்டுங்கள். மூன்று சட்டகங்களில் தனித்தனியாக ஒட்டினாலும் இந்த மரக்கிளைகள் தொடர்ச்சியாகக் காட்சி அளிக்கும்படி கற்பனை செய்து ஒட்ட வேண்டும். நன்கு காய்ந்த பிறகு, 1 அடி இடைவெளி விட்டு மூன்று படங்களையும் உங்கள் சுவரில் மாட்டுங்கள். இனி சூரியனைத் தொட்டுப் பார்த்தே ரசிக்கலாம்.
ஸ்பூன் ஓவியம்
இப்போதெல்லாம் எதை எடுத்தாலும் ஸ்பூன் இலவசமாகக் கொடுக்கப்படுகிறது. குளோப் ஜாமுன், ஊறுகாய், தேயிலைத் தூள் இப்படி எக்கச்சக்கமான சமையல் பொருள்களுக்கு ஸ்பூன்கள் இலவசமாக வீடு வந்து சேர்கின்றன. இந்த ஸ்பூன்களை ஓரிரு முறைக்கு மேல் பயன்படுத்தினால், துருப்பிடித்துவிடும், கைப்பிடி உடைந்து விடும்.
இது தவிர பிளாஸ்டிக் ஸ்பூன்கள் வேறு நம் வீடுகளில் செட்டு செட்டாகக் கிடக்கும். இந்த ஸ்பூன்களுக்கு விதவிதமாக வண்ணம் பூசி சுவரின் ஒரு பகுதியில் வட்ட வடிவிலோ அல்லது சதுரமாகவோ மேலும், கீழுமாக மாற்றி மாற்றி ஒட்டிப் பாருங்கள், உங்கள் விரல் நுனியில் நவீன ஓவியம் பிறக்கும்.