

தமிழ்நாட்டில் சென்னையை அடுத்து ரியல் எஸ்டேட் கொடிகட்டிப் பறக்கும் நகரங்களுள் முக்கியமானது கோயம்புத்தூர். இங்குள்ள சீதோஷ்ணநிலை, இயற்கைச் சூழல் இங்கு வெளி ஊர்களைச் சேர்ந்தவர்களையும் ஈர்க்கும் முக்கியமான அம்சங்கள். தமிழகம் முழுக்க நிலவிய மந்த நிலையில் கோவை ரியல் எஸ்டேட்டும் பாதிக்கப்பட்டிருந்தத.ு
ஆனால் தீபாவளிக்குப் பிறகு, கோயம்புத்தூரில் ரியல் எஸ்டேட் வாங்குபவர்கள் உற்சாகமான மனநிலையில் காணப்படுவதாக கிரடாய் அமைப்பின் கோயம்புத்தூர் தலைவர் ராஜேஷ் பி லந்த் கூறுகிறார். இந்த மனநிலையை ஒப்பிட்டால் கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு அதிகமாகவும் சாதகமாகவும் உள்ளதாகவும் அவர் கருத்துத் தெரிவித்தார்.
கோவை ரியல் எஸ்டேட்டில்
இருபது சதவீதம் முதலீட்டை வைத்திருக்கும் வெளிநாடுவாழ் இந்தியர்களைக் குறிவைத்து ‘ஃபேர்ப்ரோ’ (FAIRPRO) என்னும் கண்காட்சிக்கு கிரடாய் ஏற்பாடு செய்திருக்கிறது. கோவையில் இந்தக் கண்காட்சி ஜனவரி 3, 4 ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கிறது. ஒரே ஆண்டில் இரண்டு FAIRPRO கண்காட்சிகள் நடைபெற இருப்பது இதுவே முதல் முறை.
இந்த ரியல் எஸ்டேட் கண்காட்சி தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ராஜேஷ், “ரியல் எஸ்டேட் வாங்குபவர்களிடம் தீபாவளிக்குப் பிறகு ஏற்பட்டிருக்கும் இந்த மாற்றத்தால் இந்தக் கண்காட்சி வெற்றிகரமானதாக இருக்கும்” என்றார். பொதுவாக, கோவையில் ‘ஃபேர்ப்ரோ’ கண்காட்சிக்கு ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதத்தில்தான் ஏற்பாடு செய்யப்படும். ஆனால் இந்த ஆண்டு ஜனவரியில் நடத்துகிறது. வெளிநாடுவாழ் இந்தியர்கள் இந்த நேரத்தில் விடுமுறைக்கு வருவார்கள் என்ற காரணத்தால் இந்த மாற்றம் என கிரடாய் தரப்பில் கூறப்படுகிறது.
கோவையில் வெளிநாடுவாழ் இந்தியர்கள் 20 சதவீதம் நிலங்களை வாங்குவார்கள் என்று ராஜேஷ் சொல்கிறார். கோவையைச் சுற்றியிருக்கும் தமிழ்நாட்டின் மாவட்டங்களின் மக்கள் மட்டுமில்லாமல் கேரளா மாநிலத்தில் இருக்கும் பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த மக்களும் கோவை மாநகரத்தின் ரியல் எஸ்டேட்டில் முதலீடுசெய்ய ஆர்வம் காட்டிவருகின்றனர்.
2014-ல் தொடங்கப்பட்ட ரியல் எஸ்டேட் புதிய திட்டங்கள் அதற்கு முந்தைய ஆண்டைவிடக் குறைவாகவே இருந்தன. சில திட்டங்கள் அனுமதி பெறுவதில் தாமதமான காரணத்தால் அந்தத் திட்டங்கள் தள்ளிப்போயிருக்கலாம். ஆனால், ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது ரியல் எஸ்டேட் சந்தை மற்ற நகரங்களைவிட இங்கே வளர்ந்திருக்கிறது.
சேவை வரி வசூலிக்கும் முறையில் அரசு வரி தளர்வை அளிக்க மறுத்துவிட்டதால் புதிய சொத்துகளை வாங்குபவர்களுக்கு வேறு வழியில்லாமல் இருக்கிறது. ரியல் எஸ்டேட் நிறுவனர்களும் அடிக்கடி உயரும் சிமெண்ட் விலை, பணியாளர்களின் ஊதியம் என செலவைக் குறைக்க முடியாமல் திணறுகின்றனர்.
மாநில அரசு நகரத்தின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு பெரிய முதலீடு செய்யப்போவதாக உறுதியளித்திருக்கிறது. இதுவும் நகரத்தில் ரியல் எஸ்டேட் வளர்ச்சிக்கு உதவும்.
‘ஃபேர்ப்ரோ’ கண்காட்சியில் கிரடாய் கூட்டமைப்பில் இருக்கும் 25 உறுப்பினர்கள் கலந்துகொள்கிறார்கள். இந்தக் கண்காட்சியில் 20 லட்சத்திலிருந்து 3 கோடி வரை விலை போகும் ஐம்பதுக்கும் மேற்பட்ட சொத்துகள் இடம்பெறுகின்றன. வீட்டுக் கடன் வசதி பற்றி ஆலோசனைகள் வழங்குவதற்காக வங்கிகளும் கண்காட்சியில் பங்குகொள்ள உள்ளன.
© ‘தி இந்து’ பிஸினஸ் லைன்