

இன்றைக்கு ரியல் எஸ்டேட் துறையில் முதலீடுசெய்யாதவர்கள் இல்லை எனலாம். அந்தவகையில் பல தரப்பினரும் தங்கள் சேமிப்பை மனைகளில், அடுக்கு மாடிக் குடியிருப்பு வாங்குவதில் முதலீடுசெய்கிறார்கள்.
எங்கு அதிகமாக முதலீடு இருக்கிறதோ அங்கு மோசடிகளும் இருக்குமல்லவா? அதுபோல இந்தத் துறையில் நூதனமான மோசடிகள் அதிகம். இந்த மோசடிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ‘ரியல் எஸ்டேட் வழிகாட்டி’ என்னும் இந்தப் புத்தகம் விளக்குகிறது.
‘எப்படியெல்லாம் ஏமாற்றுவார்கள்?’ ‘நில மோசடிகளிலிருந்து தப்பிக்க...’ போன்ற தலைப்புகளில் கீழ் பயனுள்ள தகவல்களைத் தருகிறது இந்தப் புத்தகம்.
ரியல் எஸ்டேட் வழிகாட்டி, சுப. தனபாலன், பிராம்ப்ட் பதிப்பகம், சென்னை.
தொலைபேசி: 88254 79234.
***
சென்னை போன்ற பெரு நகரங்களில் அடுக்குமாடிக் குடியிருப்பு வாழ்க்கை என்பது மறுக்கமுடியாததாகிவிட்டது. ஆனால் அடுக்குமாடிக் குடியிருப்பு முறைகள் இன்னும் பரவலாகவில்லை. அடுக்குமாடிக் குடியிருப்பு வாங்கும்போது அந்த நிலத்தில் அதில் நமது பங்கை எப்படிப் பிரிப்பது, அடுக்குமாடிக் குடியிருப்பைப் பராமரிப்பது எப்படி என இவ்வாறு நமக்கு எழும் கேள்விகளுக்கான பதில்களை இந்தப் புத்தகம் அளிக்கிறது. அடுக்குமாடிக் குடியிருப்புகளில் கிடைக்கும் குறைந்த இடத்தை எப்படிச் சிக்கனமாகப் பயன்படுத்துவது என்பதற்கான ஆலோசனைகளும் தருகிறார்கள்.
அடுக்குமாடியில் வசிப்போர் கவனத்திற்கு..., சுப. தனபாலன், பிராம்ப்ட் பதிப்பகம், சென்னை.
தொலைபேசி: 88254 79234
***
இந்தியாவின் தன்னிகரற்றக் கட்டிடக் கலைஞர் லாரி பேக்கர், நமது பாரம்பரியக் கட்டிடக் கலையை நமக்கே மீட்டெடுத்துத் தந்தவர். இயற்கைக்கு ஏதுவாகக் கட்டிடக் கலையை மாற்றியமைத்தவர். அந்தந்தப் பகுதியில் கிடைக்கும் கட்டுமானப் பொருள்களைக் கொண்டு முன்னுதாரணமான கட்டிடங்களை உருவாக்கினார்.
அவர் கட்டிய கட்டிடங்கள் இன்னும் வலுவுடன் அவரது கட்டிடக் கலையின் சிறப்பைப் பறைசாற்றிக்கொண்டுள்ளன. அவர் குறித்தும் அவரது கட்டிடக் கலை அனுபவங்கள் குறித்தும் அவரது மனைவி எலிசபெத் பேக்கர் எழுதிய நூலின் தமிழாக்கம் இது.
பறவைக்கு கூடுண்டு - அனைவருக்கும் வீடு - லாரி பேக்கரின் கனவு, எலிசபெத் பேக்கர், பூவுலகின் நண்பர்கள் வெளியீடு, சென்னை.
தொலைபேசி: 9841624006