பிளாஸ்டிக் கான்கிரீட் பலகை

பிளாஸ்டிக் கான்கிரீட் பலகை
Updated on
1 min read

வீட்டுப் பணிகளில் முக்கியமானது சென்ட்ரிங். இந்தப் பணி முழுவடைந்தால் வீட்டுப் பணி முடிந்த மாதிரிதான். இந்தப் பணிக்குப் பலகைகளைத்தான் பெரும்பாலும் பயன்படுத்துகிறார்கள். அதாவது இடும் கான்கிரீட்டைத் தாங்கிப் பிடிப்பதற்காகப் பலகை அடைப்பார்கள். சமீப காலங்களில் இரும்புத் தகடுகளைப் பயன்படுத்துவதும் அதிகரித்துவருகிறது. இந்தப் பணிக்கு இப்போது பிளாஸ்டிக் பலகைகளும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்தப் பலகையைப் பயன்படுத்துவதில் பலவிதமான நன்மைகள் இருக்கின்றன. பொதுவாகப் பலகை கொண்டு சென்ட்ரிங் இடும்போது அது கான்கிரீட்டைப் பிடித்துக்கொள்ளும். பலகையைப் பிரிக்கும்போது பிசுறுகள் வரக்கூடும். அதுமட்டுமல்ல பலகைகளைப் பிரிப்பது மிகச் சிரமமான காரியமாகவும் இருக்கும். இப்படிப் பலகை இடும்போது அதில் கான்கிரீட்டில் ஒட்டிக்கொள்ள இருப்பதற்கு சென்டிரிங் ஆயில் இட வேண்டும். இந்த ஆயில் பலகைகள் மீது கான்கிரீட் ஒட்டாதவாறு பார்த்துக்கொள்ளும். இது ஒரு பக்கம் இருந்தாலும் இம்மாதிரியான மரப் பலகைகள் கொண்டு சென்ட்ரிங் போடும்போது அதன் மேல் புற வடிவம் அத்தனை சிறப்பாக இருக்காது. சொரசொரப்பான மேல் பாகத்துடன் இருக்கும். அதற்கு மேல் ஒரு சிமெண்ட் பூச்சு பூச வேண்டி வரும்.

இந்த பிளாஸ்டிக் பலகைகளைப் பயன்படுத்தும்போது பிசுறுகள் இருக்காது. மேலும் மரப் பலகைகள் அடைப்பதால் இடும் சென்டிரிங் ஆயில் செலவைக் குறைக்கலாம். இதில் கான்கிரீட் கலவை ஒட்டுவதில்லை. மேற்பரப்பு சமதளமாக இருக்கும். இதனால் அதற்கு மேல் சிமெண்ட் பூச்சு தேவைப்படாது. அப்படியே பெயிண்ட் அடித்துவிடலாம். மேலும் மரப் பலகை அடைக்கும்போது சிறிய இடங்களில் இடைவெளி உண்டாகக்கூடும். பலகை அத்தனை நெருக்கமான பிணைப்பை அளிப்பதில்லை. இடையே இடையே துளைகள் உண்டாகும் இதில் கான்கிரீட் கலவை வழிந்து கூரைத் தளத்துக்குப் பாதிப்பை உண்டாக்கும். . இதைச் சரிசெய்தாலும் பின்னால் பிரச்சினை வரக்கூடிய வாய்ப்பும் உள்ளது. பிளாஸ்டிக் பலகைகள் அடைக்கும்போது அவை நெருக்கமான பிணைப்பை உண்டாக்கும். அதனால் மழைக் காலத்தில் ஏற்படும் நீர்க் கசிவு பிரச்சினைகள் வரப்போவதில்லை.

மேலும் இம்மாதிரியான பிளாஸ்டிக் பலகைகளைத் திரும்பத் திரும்பப் பலமுறை பயன்படுத்த முடியும். மேலும் எடை குறைவாக உள்ளதால் இவற்றைக் கையாள்வது எளிது. பலகைகளைப் போல் எளிதில் சேதமடையாது. இரும்புப் பலகைகள் போல் துருப்பிடிக்காது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in