

கண்ணாடிகளின் பயன்பாடுகள் இல்லாத துறையே இல்லை. அறிவியல் கண்டுபிடிப்புகளில் இருந்து முகம் பார்க்கும் கண்ணாடி வரை எங்கும் இவை பரவியிருக்கின்றன. பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே கண்ணாடிகள் கட்டிடப் பணிகளுக்கு முன்பே பயன்பட்டு வந்திருக்கின்றன.
கி.பி. ஒன்றாம் நூற்றாண்டில் சோடியம் கார்பனேடையும் கால்சியம் கார்பனேடையும் கலந்து உருக்கும் இரசாயன முறை கண்டுபிடிக்கப்பட்டது. பிறகு அதனுடன் மக்னீசியம் ஆக்ஸைடு சேர்த்ததும் கண்ணாடிக்கு ஒளிபுகும் தன்மை வந்தது. எகிப்தின் அலெக்ஸாண்டியா (Alexandria) நகரத்தில் இம்முறை கண்டுபிடிக்கப்பட்டது. ஒளிபுகும் தன்மை வந்த பிறகுதான் கண்ணாடிகள் கட்டிடப் பொருளாகப் பரவலாகப் பயன்படத் தொடங்கியது.
இன்றைக்கும் கண்ணாடிகள் கட்டிடக் கலையை அதிகமாகப் பயன்பட்டுவருகின்றன. இன்னும் சொன்னால் கண்ணாடிகள் கட்டிடங்களைப் பிரம்மாண்டமானவையாக மாற்றுகின்றன எனலாம். இந்தக் கட்டிடப் பயன்பாட்டு கண்ணாடிகளில் புதிய வரவுதான் தன்னைத் தானே சுத்தம் செய்யும் கண்ணாடி (Self-cleaning glass).
இந்த வகை கண்ணாடி 2001-ம் ஆண்டுதான் நடைமுறைக்கு வந்தது. இங்கிலாந்தைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவரும் பில்கிங்டம் கண்ணாடி தயாரிப்பு நிறுவனம்தான் தன்னைத் தானே சுத்தம் செய்யும் கண்ணாடியை (Self-cleaning glass) முதலில் தயாரித்தது. இதைத் தொடர்ந்து மற்ற நிறுவனங்களை இப்போது இவ்வகை கண்ணாடிகளை உற்பத்திசெய்யத் தொடங்கியிருக்கின்றன.
சாதாரணமான கண்ணாடியின் மேற்பரப்பில் மிக மெல்லிய அளவில் உருவாக்கப்படும் பூச்சு காரணமாக அதற்கு இந்தத் தன்மை வருகிறது. இந்தப் பூச்சு கண்ணாடியின் மீது தூசி படமால் பாதுகாக்கிறது. டைட்டானியம் டையாக்ஸைடு என்ற வேதிப் பொருளைக் கொண்டு உருவாக்கப்படுகிறது.
கண்ணாடியின் மேல் படும் புற ஊதாக்கதிர்கள் வேதியியல் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. மேலை படியும் தூசி, அழுக்குகளைச் சிதைவடையச் செய்கின்றன. photocatalytic, hydrophilic ஆகிய இரு நிலைகளில் கண்ணாடியைச் சுத்தம் செய்கின்றன. அதாவது வெயில், மழையிலிருந்து கண்ணாடிகளைப் பாதுக்கும் இரு முறைகள் இவை.